பயிர்க் காப்பீடும், பரிதவிக்கும் விவசாயிகளும்..

Vinkmag ad

பயிர்க் காப்பீடும், பரிதவிக்கும் விவசாயிகளும்..

 

இன்சூரன்ஸ் துறையில் தனியாரை, பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் போது சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அனுபவம் என்ன?  இதோ எந்த மாநிலத்தை இன்றைய ஆட்சியாளர்கள் “மாடல் மாநிலம்” என்றார்களோ அந்த மாநிலத்தின் அனுபவம் இது. இந்து பிசினஸ் லைன் (11.08.2020) இதழின் முதல் பக்க செய்தி இது. குஜராத் மாநில அரசும் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தை விட்டு வெளியேறுகிறது… பிரீமிய சுமை தாங்க முடியவில்லையாம்_ “என்பது தலைப்பு.

“பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” 2016ல் குஜராத்தில் அமலுக்கு வந்தது. இவ்வாண்டு இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கான டெண்டர்கள் மிக மிக அதிகமான பிரீமியத்தை கோரியதால் இத் திட்டத்தை விட்டு வெளியேறுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி  “ரூ.4500 கோடி பிரீமியம் கேட்கிறார்கள். இது மிக அதீதம்” என்று சொல்லி இவ்வாண்டு பயிர்க் காப்பீட்டில் இணையப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு குஜராத்தில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனிவர்சல் சாம்போ, பாரதி ஆக்சா போன்ற தனியார் நிறுவனங்களோடு இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து பயிர்க் காப்பீடு வழங்கின.  ஏற்கெனவே பீகாரும், மேற்கு வங்காளமும் இத்திட்டத்தில் இருந்து வெளியேறி விட்டன. பஞ்சாப் இந்த திட்டத்திற்குள் வரவேயில்லை. ஆரம்ப காலங்களில் நிறைய விவசாயிகள் வெளியேறிய செய்திகள் வந்தன. இப்போது மாநிலங்களே வெளியேறுகின்றன.

லாபம் வந்தால் அரசு நிறுவனம் விலகி நிற்க வேண்டும். லாபம் வராது என்ற நிலை ஏற்பட்டால் தனியார் நிறுவனங்கள் பயிர்க் காப்பீட்டில் இருந்து வெளியேறிவிடும் என்பதற்கும் சாட்சியங்கள் உள்ளன. 2019 காரீஃப் சீசன் டெண்டர்களில் ஐ.சி.ஐ.சி.ஐ- லாம்பார்டு, டாட்டா ஏ.ஐ.ஏ, சோழமண்டலம் எம்.எஸ், ஸ்ரீராம் ஆகிய நான்கு கம்பெனிகளும் பங்கேற்கவில்லை. பருவமழை பொய்க்கும் என்றால் ஓடிப் போய் விடுவார்கள் போலிருக்கிறது.

விவசாயிகள் தாம்புக் கயிறை நாடுகிற தருணங்களில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கக் கயிறை தாயத்தாக கட்டிக் கொண்டார்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது.

இதில் தாமதம், இழுத்தடிப்பு தனிக் கதை. நவம்பர் 2019 ல் இருந்த நிலைமை இது. 2018 க்கான உரிமங்களில் ரூ.2511 கோடிகள் (16%) நிலுவையில் இருந்தன. 2019 ஏப்ரலில் கோரப்பட்ட உரிமங்களில் ரூ.1269 கோடிகள் (26%) நிலுவையில் இருந்தன. உரிய நேரத்தில் விவசாயிகளின் துயரை துடைப்பதிலும் தோல்வி.  அதுவும் பிரதமரின் “செல்லம்” குஜராத்தே இப்போது வெளியே போகிறது.

(ஆகஸ்ட் 14 தீக்கதிரில் ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கப் பொறுப்பாளர்

க. சுவாமிநாதன் எழுதிய கட்டுரையிலிருந்து)

News

Read Previous

சங்ககால சிறுகதைகள் போட்டி – (புறநானூறு)

Read Next

துணிந்து நில் தமிழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *