இணையத் தொழிற்சாலையின் கூலியற்ற தொழிலாளர்களா நாம்?

Vinkmag ad
நன்றி: ஒன் இண்டியா 
 

source – 

ஜூலை  14, 2021
 
இணையத் தொழிற்சாலையின் கூலியற்ற தொழிலாளர்களா நாம்? 
 
—  அ. குமரேசன்
 
 
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஜனவரியில் 62 கோடியே 40 லட்சம். தற்போதைய மக்கள்தொகையில் இது சுமார் 44 சதவீதம். இந்தப் புள்ளிவிவரத்தைத் தருகிற இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் நிறுவனங்கள் சங்கம் (ஐஏஎம்ஏஐ) 2020ம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டிற்கும் இடையே – அதாவது கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில்- சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 கோடியே 80 லட்சமாக (21 சதவீதம்) அதிகரித்திருக்கிறது என்றும் கணக்கிட்டுள்ளது.
 
ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் வணிகம், ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கருத்தரங்குகள், ஆன்லைன் அரசியல் கூட்டங்கள் என்று எங்கும் எதிலும் ஆன்லைன் ஆளுமை செலுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் நம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அதற்கான இணையத் தொடர்பு வசதி இல்லாதவர்கள்தான் என்பதை இது காட்டுகிறது. அவர்களுக்கெல்லாம் எப்போது இந்த வசதி முழுமையாகக் கிடைக்கும் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அவர்கள் இப்படியே இருக்கட்டும் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது, தாங்கள் மட்டும் இந்த நவீனத் தொழில்நுட்ப வாய்ப்பை அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும், மற்றவர்கள் இதற்காக ஏங்கிக்கொண்டிருக்கட்டும் என்ற அலட்சியத்திலிருந்து அல்ல, மாறாக, தெரிந்தோ தெரியாமலோ இந்த இணையவலையில் மீள முடியாதவர்களாகச் சிக்கிக்கொண்டுவிட்டோம், அவர்களாவது இதன் அழுத்தங்களில் மாட்டிக்கொள்ளாதவர்களாக நிம்மதியுடன் இருக்கட்டும் என்ற அக்கறையிலிருந்தே அப்படிச் சொல்கிறார்கள்.
 
வீட்டிலிருந்தபடியே பயணங்களுக்கு முன்பதிவு செய்வது, தொந்தரவு செய்யும் குழநதைகளிடம் “இந்தா ரைம்ஸ் பார்த்துக்கிட்டு இரு” என்று கைப்பேசியைக் கொடுப்பது, உடல் பரிசோதனை அறிக்கையை மருத்துவருக்கு வாட்ஸ்அப் பண்ணுவது, அரசியல் அநீதிகளால் ஏற்படும் மனக்கொதிப்பை உடனே ட்விட்டர் ஆவேசமாக வெளிப்படுத்துவது, பத்திரிகைகளில் தேர்வாகுமா என்ற ஏக்கப் பதைப்பைத் துடைத்துவிட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் எழுத்தாக்கங்களைப் பதிவேற்றி உடனுக்குடன் வாசகர் கருத்தையும் அறிவது… இப்படியாக அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது இணையம். பெருந்தொற்றுக் காலத்தில் இணையத் தொடர்பு இருப்பதால்தான் பலரால் வீட்டிலிருந்தே அலுவலக வேலையைச் செய்ய முடிகிறது. பொதுமுடக்கத் தளர்வுகள், புதிய கட்டுப்பாடுகள் பற்றிய செய்திகளை இணையவழி ஏடுகளிலிருந்து அறிந்துகொள்கிறோம். இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறபோது கூட ஒரு தொலைபேசி எண் கேட்டுத் தொடர்பு கொண்ட நண்பருக்கு அதை வாட்ஸ்அப் செய்துவிட்டுத்தான் தொடர்கிறேன்.
 
மறுபக்கத்தில்
இப்படித் தவிர்க்க முடியாததாகிவிட்ட தொழில்நுட்பத்தின் மறுபக்கத்தில் “இணையம் இல்லா உலகம் கேட்டேன்” என்று பாடல் ஒலிக்கிறது. “இணையம் நம் மூளைகளை அழிக்கிறது. ஆனாலும் அதிலிருந்து நம்மால் வெளியேற முடியாது. இணையம் ஒரு தொழிற்சாலை, அதிலே நாம் வேலை செய்கிறவர்களாகிவிட்டோம் – ஊதியம் இல்லாமலே,” என்கிறார் பி.இ. மோஸ்கோவிட்ஸ். பல புத்தகங்களை எழுதியிருப்பவரும், முதலாளித்துவத்தின் உளவியல் தாக்கங்கள் பற்றி விவாதிக்கும் ‘மென்ட்டல் ஹெல்த்’ என்ற கடிதவழிப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருப்பவருமான மோஸ்கோவிட்ஸ், “இணையம் ஒரு மோசமான உறவு போன்றதல்ல – அது வேண்டாமென்று உங்களால் விலகிவிட முடியும். இது ஒரு மொந்தை உணவு போன்றதல்ல, அதைக் குறைவாகச் சாப்பிடுவது என உங்களால் முடிவு செய்ய முடியும். இதுவோ எல்லாவற்றையும் உள்ளிழுத்துக்கொண்ட தொழில்நுட்பமாக, நமது தலையாய பொருளாதார எந்திரமாக, மற்றவர்களைச் சந்திப்பதற்கு இதைப் பயன்படுத்தியாக வேண்டுமென்று நாம் கட்டாயப்படுத்தப்படுகிற கருவியாக, நம் வாழ்க்கை மொத்தத்தையும் நாட்டாமை செய்வதாக இருக்கிறது,” என்கிறார்.
 
இணையவழித் திரை மேடையாகிய நெட்ஃபிளிக்ஸ் ஒளிபரப்பிய ‘தி சர்க்கிள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பணப்பரிசைப் பெறுவதற்காக போலியான இணைய முகவரி ஆட்களை உறுத்தலே இல்லாமல் பயன்படுத்தினார்கள். சென்ற ஆண்டு ஒளிபரப்பான ‘தி சோசியல் டைலமா’ என்ற ஆவணப்படம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தனியுரிமை ஏற்பாடுகள் உண்மையில் எந்த அளவுக்கு தனிப்பட்டவர்களுக்குச் சங்கடத்தைத் தருவதாக இருக்கின்றன என்று விளக்கியது. இவற்றைக் குறிப்பிடுகிற மோஸ்கோவிட்ஸ், அண்மையில் வெளியான ‘ஃபேக் அக்கவுன்ட்’ (லாரன் ஓய்லர்), ‘நோ ஒன் இஸ் டாக்கிங் அபௌட் திஸ்’ (பேட்ரிசியா லாக்வுட்) உள்ளிட்ட சில நாவல்கள், இணையத்தின் இருண்ட பக்கத்திற்கு இட்டுச்செல்கின்றன என்றும் தெரிவிக்கிறார்.
 
ரம்மி வலை
நமது கைப்பேசித் திரைக்கு, ரம்மி விளையாட்டு செயலி விளம்பரங்கள் வருகின்றன. உலகில் எங்கெங்கோ இருக்கக்கூடியவர்களோடு ரம்மி விளையாடலாம், குறைந்த அளவில் பணம் கட்டினால் போதும், வெற்றிபெறுகிறபோது ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரையில் உங்கள் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடும் என்று அந்த விளம்பரங்கள் உறுதியளிக்கின்றன. அதை நம்பி விளையாடத் தொடங்குகிறவர்களுக்கு முதலில் சில வெற்றிகள் கிடைக்கும். வங்கிக் கணக்கிற்குப் பணம் வரும். ஆனால், சில நாட்களில் வங்கிக்கணக்கில் புதிதாகச் சேர்ந்த பணம் மட்டுமல்ல, ஏற்கெனவே இருந்த பணமும் பறிபோய்விடும். உலகில் எங்கெங்கோ இருந்து பந்தயத்தில் கலந்துகொண்டவர்களில் யாரோ ஒருவர் வெற்றி பெற்று அந்தப் பணத்தைப் பெறவில்லை – அந்தச் செயலியை இயக்கும் நிறுவனம் அல்லது கும்பல்தான் இப்படி நம் சேமிப்போடு விளையாடுகிறது. அவர்கள் வடிவமைத்த செயலி நீங்கள் எப்படி விளையாடினாலும் இறுதி வெற்றியை அவர்களுக்கேதான் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
 
பணமே கட்டாமல், இணையத் தொடர்புக்கே வராமல் உங்களுக்கு நீங்களே ரம்மி விளையாடி பொழுதைக் கழிக்கலாம் என்ற ஏற்பாடும் அந்தச் செயலிகளில் இருக்கும். அதில் அடிக்கடி நாம் வெற்றி பெறுவோம். அந்த வெற்றிகள், ஒரே ஒரு தடவை பணம் கட்டி விளையாண்டால் என்ன என்ற ஆசையைத் தூண்டும். இப்படிப்பட்ட பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கான செயலிகள் பற்றி எனக்கிருந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறார் ‘மென்ட்டல் ஹெல்த்’ எழுத்தாளர்.
 
மனநலப் பிரச்சினைகள்
அவர் ஆதாரமாகக் காட்டுகிற பல்வேறு ஆய்வுகள், இணையத்தில் மூழ்கிவிடுவதன் வேறு பல தீய விளைவுகளைப் பற்றியும் பேசுகின்றன. 2019ம் ஆண்டில் வந்த ஒரு ஆய்வறிக்கை, இணையத்தில் அதிக நேரம் செலவிடும் பதின்பருவத்தினருக்கு மன நலப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது என்று கூறுகிறது. வேறு சில ஆய்வுகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறவர்களில் பலர் மிகவும் தனிமையாக, மேலும் மேலும் விலக்கிவைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள் என்று தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களிலேயே கிடப்பவர்களுக்கு மனநலம பாதிக்கப்படும் வாய்ப்பு ஒரு வகை என்றால், மதப் பகைமை, சாதி வெறி, பாலின வக்கிரம், இன வன்மம், அரசியல் குரோதம் என்று ஏற்கெனவே மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் நுழைந்து நச்சுக் கருத்துகளைப் பரப்புவுது இன்னொரு வகை.
 
2018ல் அமெரிக்கக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஒரு ஆய்வு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை ஒரு நாளில் 10 நிமிடங்களுக்கு மிகாமல் கட்டுப்படுத்துகிறபோது, மன உளைச்சல் வெகுவாகக் குறைகிறது என்று கண்டறிந்திருக்கிறது. இணையத்திற்குள்ளேயே முடங்கிவிடாமல் விடுவித்துக்கொள்வது எப்படி என்று ஆலோசனை கூறும் புத்தகங்கள் வரத்தொடங்கிவிட்டன. பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களே கூட சமூக ஊடகங்களை ஓரளவுக்கு மேல் ஒதுக்கிவைக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசுகிறார்கள். பலர் தங்களுடைய பிள்ளைகளை, இணையப் பயன்பாடு தடை செய்யப்பட்ட பள்ளிகளுக்குத்தான் அனுப்புகிறார்கள்.
 
“நம் ஒட்டுமொத்த சமுதாயமே, தொழிற்புரட்சியின்போது தொழிற்சாலையைச் சுற்றி உருவாக்கப்பட்டது போல இப்போது இணையத்தைச் சுற்றி மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. அமேசான் வலைத்தள சேவைகள் முடங்குமானால், நம் சமுதாயம் செயல்பாட்டை நிறுத்திக்கொள்கிறது. இணையம் இல்லாமல் நம்மால் வேலை தேட முடியாது, அல்லது இந்தக் கட்டத்தில், நண்பர்களைக் கூடத் தேட முடியாது,” என்கிறார் மோஸ்கோவிட்ஸ். அனைத்தும் இணையவழியில் என்று பொருத்திக்கொண்டவர்கள் இதை அனுபவப்பூர்வமாக உணர முடியும். ஜூம் இணைப்பு கிடைக்கவில்லை அல்லது துண்டிக்கப்படுகிறது என்றால் எவ்வளவு பதறிப்போகிறோம்! அதே தளங்களைப் பயன்படுத்தி, அவற்றின் பாதிப்புகள் பற்றியும் விவாதிக்கிறோமே என்று இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.
 
நமது உழைப்பு அவர்களின் லாபம்
இதற்கெல்லாம் மேலாக ஒரு முக்கிய வாதத்தை அவர் முன்வைக்கிறார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உண்மையில் நாம் அவற்றை நடத்துகிற நிறுவனங்களுக்கு வருமானம் ஈட்டிக்கொடுக்கிறோம் என்கிறார். நமது பதிவுகள் பகிரப்படுகிறபோது அல்லது நமக்கு வருகிற பதிவுகளைப் படிக்கிறபோது மூக்கை நீட்டுகிற விளம்பரங்கள் ஒருவகை வருமானம். தொழிற்சாலைகள் போன்ற சமூக ஊடகத் தளங்களில் நமது செயல்பாடுகள்தான், அதாவது நமது உழைப்புதான் நிறுவனங்களின் அந்த வருமானத்திற்குக் காரணம். ஆகவே, அந்த நிறுவனங்கள் தங்கள் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை நமக்கு ஊதியமாகத் தந்தாக வேண்டும். ஆனால் நாம் நம் உழைப்பை மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் ஊதியம் இல்லாமல்.
 
யூ டியூப் போன்ற தள நிறுவனங்களாவது, ஒருவருடைய காணொளிப் பதிவுகளைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் போகிறது என்றால், அதன் பிறகு ஒரு தொகை கொடுக்கத் தொடங்குகிறார்கள். இந்த ஏற்பாட்டிலேயே மிகவும் பரவலாக அறியப்பட்டுவிட்ட, லட்சக்கணக்கில் கூட வருவாய் பெறுகிற பதிவர்கள் இருக்கிறார்கள்தான். ஆயினும், அத்தனை ஆயிரம் அல்லது அத்தனை லட்சம் பார்வையாளர்கள் வருகிற வரையில் நமது பதிவுகள் நம்மைப் பொறுத்தவரையில் இலவச சேவைதான். தள நிறுவனங்களுக்கோ முதலிலிருந்தே விளம்பரங்கள் வரத்தொடங்குகின்றன. அப்படியானால், அந்த வருவாயிலிருந்தும் ஒரு பகுதியை நமக்குத் தர வேண்டுமல்லவா?
 
ஆனாலும், நாம் அந்தத் தளங்களில் இலவசமாகப் பதிவேற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறோம் என்பதால், அந்த அளவில் ஏற்புடையதுதான். வருவாய்க்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையைப் பெறுவதற்குக் கடுமையாக உழைக்கத் தொடங்கிவிடுவோம் அல்லவா? எத்தனையோ பேர் சமையல் குறிப்புகள், மருத்துவ ஆலோசனைகள், திரைப்பட விமர்சனங்கள், அரசியல் விவாதங்கள், ஆன்மீக போதனைகள் என்று காணொளித்தளங்களில் அடையாளம் பெறுகிறார்களே. அவர்களைப் போல தாங்களும் அடையாளம் பெற முடியும், வருமானம் ஈட்டவும் முடியும் என்ற எதிர்பார்ப்போடு பலரும் தங்கள் கற்பனைகளைத் தளமேற்றிக்கொண்டிருக்கிறார்கள். வக்கிரப் புத்திகளுக்குத் தீனி போட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவாயையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்கிறவர்கள் வேறு இருக்கிறார்களே!
 
ஓலா, ஊபேர் என பல வாடகைக் கார் ஏற்பாட்டு நிறுவனங்களின் செயலிகள் மூலம் இணைய வழியில் தொடர்புகொண்டு சேவையைப் பெறுகிறோம். ரொக்கமாகவோ, நிறுவனமே தருகிற கடன் ஏற்பாடாகவோ கட்டணம் செலுத்துகிறோம். நம்மை இட்டுச் செல்லும் ஓட்டுநர்கள் சொல்கிற, தவணையைக் கட்ட முடியாததால் விற்பனையாளர்கள் வண்டியைக் கைப்பற்றி எடுத்துச் செல்வது உள்ளிட்ட நிலைமைகளைக் கேட்டால் இனிமையான பயண நேரத்தை வருத்தம் கவ்விக்கொள்ளும். தங்களுக்குச் சொற்பமான தொகையையே நிர்வாகங்கள் தருகின்றன என்று குமுறலோடு கூறுகிறார்கள். அதிலும் பல்வேறு பிடித்தங்கள் வேறு. அடிக்கடி, அண்மையில் கூட, ஓட்டுநர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். அந்த நேரத்திற்கான சொற்ப வருமானத்தையும் இழந்தார்களேயன்றி, போராட்ட நியாயம் ஏற்கப்படவில்லை. இப்படி நிறைய நேரம் உழைத்தாலும் அற்பத்தொகையைக் கொடுத்தால் போதும் என்ற வசதியான வாய்ப்பை இத்தகைய பன்னாட்டு நிர்வாகங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது இணையம்தான் என்கிறார் மோஸ்கோவிட்ஸ்.
 
இணையத்தை நிறுத்திவிடலாமா?
இதற்கு என்னதான் தீர்வு? இனி இணையமே வேண்டாம் என்று முடிவு செய்துவிடலாமா? கைப்பேசி சேவை நிறுவனங்களுக்கு பேசுவதற்கும், குறுஞ்செய்தி அனுப்புவதற்குமான கட்டணத்தை மட்டும் செலுத்தி இணைய சேவையைத் துண்டித்துக்கொள்ளலாமா? வீடுகளில் ‘வைஃபை’ வசதி தேவையில்லை என்று, அதற்கான இணைப்புக் கருவியை (ரூட்டர்) எடுத்துப் பரணில் போட்டுவிடலாமா? அதெல்லாம் சாத்தியமுமில்லை, அப்படியெல்லாம் தேவையுமில்லை.
 
மாற்றாக, இணையம் ஒரு தொழிற்சாலை போல இயங்குகிறது என்றால் நாமும் அதை அப்படியே நடத்துவோம் என்கிறார் கட்டுரையாளர். 2014ல் லாரல் டாக் என்ற ஒரு கலைஞர், ‘வேஜஸ் ஃபார் ஃபேஸ்புக்’ என்ற தலைப்பில் ஒரு கலையாக்கத்தை துண்டறிக்கையாக வெளியிட்டார். அதில் அவர், “ஃபேஸ்புக் நிறுவனம் தன்னைப் பயன்படுத்துவோருக்கு அவர்களது பதிவுகளுக்காக ஊதியம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். “இது நட்பு என்று சொல்கிறார்கள் அவர்கள். இது கூலியற்ற உழைப்பு என்று சொல்வோம் நாம். நமது லைக், சேட், டேக் அல்லது போக் ஒவ்வொன்றின் மூலமாகவும் நமது உள்ளடக்கம் அவர்களுக்கான லாபமாக மாறுகிறது. இதை அவர்கள் பகிர்தல் என்கிறார்கள். இதை நாம் பறித்தல் என்போம்,” என்று எழுதினார் அவர்.
 
“லாரா டாக் பதிவு ஒரு கலை வெளிப்பாடுதான் என்றாலும், வலைத்தளத்தை மாற்றுவதற்கான வியூகம் அல்ல என்றாலும், இதுவொரு தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும். இணையத்தைப் பயன்படுத்துவோராகிய நாம் அணிதிரண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் லாபமடையச் செய்கிற நமது இதயங்களையும் மனங்களையும், இலவசமாக வாரி வழங்குவதை நிறுத்திக்கொள்ள முடியும், தொழிலாளர் அமைப்புகள் இதர தொழில்களில் சுரண்டல் குறைவாக இருக்கிற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள், ஒருவேளை இணையத்தில் அவ்வாறு நடப்பதற்கான ஒரு இயக்கம் நமக்குத் தேவைப்படுகிறது போலும்.” என்று எழுதுகிறார் மோஸ்கோவிட்ஸ்.
 
இதுவும் கூட ஒரு நெடுங்கனவாக இருக்கலாம். ஆனால், விழித்துக்கொண்டால் கனவு கலையும், எண்ணம் செயலாகும். இணையத்தைப் பயன்படுத்துகிற எல்லோரிடமும் இந்தக் கண்ணோட்டங்களைக் கொண்டுசெல்கிறபோது, அந்த விழிப்பு ஏற்படும். இணையத்தளம் வழியாகவே இந்தக் கண்ணோட்டங்களைக் கொண்டுசெல்ல முடியுமே!

News

Read Previous

சங்கரய்யாவின் உரை என்னை பக்குவப்படுத்தியது….

Read Next

காமராசர் பிறந்த நாள் உலக சாதனை நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *