24X 7 – ஒளிபரப்புகளின் பின்னியங்கும் நுட்பமான அரசியல்

Vinkmag ad
 
24X 7 – ஒளிபரப்புகளின் பின்னியங்கும் 
நுட்பமான அரசியல் 
எஸ் வி வேணுகோபாலன் 
 

24X7 கொடுமை இப்போது ஒன்றும் புதிதல்ல…அதன் அரசியல் சாதாரணமானதுமல்ல. அதேபோல் தொடர் பரபரப்பு  உருவாக்குவதை விடவும் ஒரே செய்தியை, ஒரே காட்சியை, ஒரே சபதத்தைத் திரும்பத் திரும்ப இருக்கிற அத்தனை அலைவரிசைகளும் ஓயாமல் ஒளிபரப்பி மனிதர்களைக் கொல்லாமல் கொன்றெடுக்கும் கொடுமையையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். அதேபோல் அலுப்பும், எரிச்சலும்,வெறுப்பும் கிளப்பும் விவாத மேடைகள், ஒரே பாணியில் கேள்விகள்..ஒரே மாதிரி மழுப்பல்கள்…ஒரே மாதிரி சவடால்கள்…இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்தில் நான்கைந்து அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் பார்த்தாலும் கடந்த கஷ்ட கால வாரத்தில் ஒரே மாதிரியான முகங்களையும், ஒன்றே போன்ற தொகுப்புகளையும் பார்த்துக் களைத்துப் போனவர்கள் எண்ணிக்கை மாநிலத்தின் மக்கள் தொகையில் கால் பங்கு இருக்கக் கூடும்.

இவை முக்கியமல்ல… இப்படியான ஒட்டுமொத்தக் குத்தகைக்கு போயஸ் கார்டன், கூவத்தூர் ரிசார்ட், ஓபிஎஸ் வீடு என்று ஸ்டேண்ட் போட்டு நிற்க வைக்கப்படும் காமிராக்கள், மூச்சு விடாமல் பேசியே ஆகவேண்டிய கள நிருபர்கள்….இதெல்லாம் கூட பிரச்சினை இல்லை. இப்படியாக நமது தொலைக்காட்சிப் பெட்டிக்குள் சூழும் கருமேகத் திட்டுக்குள் தங்கள் குரலையோ, அவதியையோ,உரிமையையோ ஒலிக்கத் துடிக்கும் வேறெந்த விஷயத்திற்கும் அது எத்தனை சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு அம்சத்தை ஒட்டியதாக இருந்தாலும் வாய்ப்பே இன்றி, அவை அப்படியே அமுங்கடிக்கப்படும் தன்மையைத்தான் நாம் கவலையோடு பார்க்க வேண்டும்.
ரு முக்கிய எடுத்துக்காட்டாக 2008 தாஜ் ஓட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்ததையடுத்து, தேசிய சானல்கள் தங்கள் காமிராக்களை சிமெண்ட் பூச்சு பூசாத குறையாக ஓட்டல் முன்பு நாட்கணக்கில் குத்தவைத்து உட்கார்ந்திருந்ததைச் சொல்லலாம். நவம்பர் 26, 2008 அன்று நடந்தது தாக்குதல். நவம்பர் 27 அன்று முக்கிய மனிதர் ஒருவர் மரித்தார். கடந்து போகிற செய்தியாக மட்டுமே வாசிக்கப்பட்டது அவர் பெயர். அதன் அரசியல் ஆழமானது. ஏனெனில் இறந்து போன அந்தத் தலைவர், பிற்பட்ட வகுப்பினருக்கான சமூக நீதி போராட்டத்தில், சாதகமான முடிவெடுத்து அமலாக்கும் பொறுப்பில் இருந்தவர், மிகக் கடுமையான எதிர்ப்பு – மிரட்டல் எல்லாவற்றையும் புறந்தள்ளி அமலாக்கவும் செய்துவிட்டுத்தான் பதவியை விட்டு இறங்கியவர். அரச பரம்பரையில் உதித்திருந்தாலும், எளிமையான வாழ்க்கைக்கும் அரசியல் தடத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தவர். கவிஞரும் ஓவியரும் கூட! வி பி சிங் என்றறியப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களது புகழ்மிக்க அரசியல் வாழ்க்கை, தனித்துவமிக்க கலைத்திறன், முக்கியத்துவம் வாய்ந்த மண்டல் கமிஷன் அமலாக்கம் எல்லாம் சிலவரி செய்திகளாக முடிக்கப்பட்டன.
வி பி சிங் போன்ற அரிய மனிதருக்கே இந்தக் கதி எனில், மிக எளிய மனிதர்களது வாழ்க்கைப் போராட்டங்களோ, பொருள்மிகுந்த சாதனைகளோ, எதிர்வினைகளோ, அதிகாரத்திற்கு எதிராக நிற்கத் துணியும் கதைகளோ எந்த மூலைக்கு ?
போட்டிகள் மிகுதியானால் பன்முகத் தன்மையில் விதவிதமான விஷயங்கள் சந்தையில் புழங்கும் என்றெல்லாம் சொல்லப்பட்ட உலகமய, தாராளமய, தனியார்மய கவர்ச்சி வாசகங்கள் இப்போது எங்கே புதையுண்டு கிடக்கின்றன? ஒற்றை திசைவழியில் சிந்தனை, உரையாடல், பேசுபொருள், கருத்தாக்கம் எல்லாமே படியமைக்கப்படுவதை அண்மைய நிகழ்வுகள் நமக்குப் பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டவில்லையா? பொருள் நுகர்வில் மட்டுமல்ல, அரசியல்-சமூக-கேளிக்கை நுகர்விலும் கூட வீட்டின் நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கும் பெட்டி சொடுக்கு போட்டு நம்மை ஆட்டுவிக்கிறது என்போரின் பார்வை சரியாகத்தானே தோன்றுகிறது.
இப்போதைய விவாதப் பொருளையே எடுத்துக் கொள்வோம். கடந்த வாரத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து 24X7 மிக அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் ஜனநாயகம். அடுத்தது சட்டப்படியான ஆட்சி. குறைந்தபட்ச ஜனநாயக உணர்வோடாவது தாங்கள் சட்டமன்றத்தையோ, ஆட்சியையோ, நிர்வாகத்தையோ நடத்தி வந்ததாகக் கூறிக்கொள்ள எந்த தார்மீக உரிமையும் அற்றவர்கள் ஜனநாயகம் பற்றி முழங்கிக் கொண்டிருப்பதை எப்படி சகிப்பது ? சட்டமன்றத்தில் விவாதிக்கவோ, கலந்து ஆலோசிக்கவோ, மாற்றுக கருத்துக்களுக்குச் செவி சாய்க்கவோ மாட்டோம் என்ற அகந்தையோடு விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளைச் செய்வதில் ருசி கண்டிருந்த ஆட்சி அது. எந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கோ, கோரிக்கை பேரணிகளுக்கோ, நீதி கோரும் இயக்கங்களுக்கோ அனுமதி மறுப்பது அல்லது குறுக்கே புகுந்து தடியடி நடத்திக் கலைப்பது, போலி வழக்குகளைச் சுமத்தி ஜனநாயகக் குரல்வளையை சதா நெரித்து மகிழ்வது என்ற வரலாறு படைத்த ஆட்சியாளர்களே அடுத்தடுத்து தமிழகத்தை ஆண்டு வருபவர்கள். இவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன சம்பந்தம்?
தங்களுக்கு எதிரான வழக்குகளை எப்படியெல்லாம் இழுத்தடித்துச் செல்வது, தீர்ப்புகள் தமக்கு எதிராக வருமானால் சாலைகளில் எப்படி அராஜகத்தைக் கட்டவிழ்த்து சாதாரண மக்களையும், நீதி மன்றங்களையும் மிரள வைக்க முற்படுவது, சட்டபூர்வமான நிவாரணங்களைத் தாமாக முன்வந்து  வழங்காமல் பாதிக்கப்பட்டவர்களை அலையவிடுவது, அரசியல் அதிகாரத்தைச் சொந்த நலன் சார்ந்த முறையில் அத்து மீறிப் பயன்படுத்துவது என எல்லையற்ற வகையில் செயலபட்டவர்கள் – சட்டத்தை மதிக்க இம்மியளவேனும் விருப்பமோ, மரியாதையோ அற்றவர்கள் கடந்த வாரம்  முழுவதும் சட்டம் சட்டம் என்று துள்ளத் துடிக்கக் கதறியதைத் தான்  24X7 அலைவரிசைகளில் நாம் காணக் கொடுத்து வைத்திருந்தோம்.
ஜெயலலிதா அதிகாரத்தைப் பயன்படுத்தி கிரிமினல் குற்றம் இழைத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பதை வசதியாகக் கடந்துபோய் அந்தத் தீர்ப்பை அந்தக் கட்சியினரின் ஒரு பகுதியினரே, போட்டி கோஷ்டிக்கு எதிரான வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதற்கு சளைக்காத ஊழல் புகார்களை, வழக்குகளை, கண்ணுக்குப் புலனாகத் தக்க பாதகங்களைச் செய்ததான பெருமைக்குரிய இதர கட்சியினர் சிலரும் ஜெயலலிதா ஆட்சியை மறந்து பார்த்தால் தமிழகம் என்னவோ சட்டம்-நீதி-நேர்மை-நியாயம் பூத்துக் குலுங்கிய பெருமிதமிக்க வரலாறு பெற்றுள்ளது போல பாசாங்கும் பாவனையும் காட்டிக் கொண்டதையும் 24X7 தமிழக தொலைக்காட்சி பார்வையாளர்கள் சகித்துக் கொள்ளவே செய்தனர்.
ஆரோக்கியமான ஜனநாயக மாற்று சிந்தனைகளுக்கு மறந்தும் இடம்தராது, முரண்பாடுகளை விவாதிக்கவே நேரம் வழங்காது, மக்கள் நலன் சார்ந்த விவாதப் பொருள்களுக்கு மேடையே அமைக்காது பார்த்துக் கொள்வது தற்செயலானதா, நுட்பமான அரசியல் சார்ந்ததா என்பதே இளைய தலைமுறையினர் உற்று கவனிக்க வேண்டிய செய்தி. அதுதான் வரலாறு திரும்பத் திரும்ப மக்களுக்கு போதிப்பது.

News

Read Previous

எங்களுக்கு ……..

Read Next

எஸ்.பி.ஐ.,அதிரடி – கணக்கு முடிக்க : ரூ.575 கட்டணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *