21-ம் நூற்றாண்டுக்கான கழிப்பறை

Vinkmag ad
அறிவியல் கதிர்
21-ம் நூற்றாண்டுக்கான கழிப்பறை
பேராசிரியர் கே. ராஜு

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அண்மையில் சுகாதாரம் குறித்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள பீகிங் சென்றிருந்தார். நாம் பயன்படுத்தி வரும் ஃபிளஷ்-அவுட் கழிப்பறைகளை மீட்டுருவாக்கம் செய்து சுகாதாரத்தில் மேம்பட்ட கழிப்பறைகளை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது அவரது பயணத்தின் முக்கிய நோக்கம். இந்தக் கண்டுபிடிப்பு துப்புரவுச் சூழலை வேகமாகப் பரவலாக்கி வளரும் நாடுகளிலுள்ள குழந்தைகளை வளர்ச்சிக் குறைபாடுகளிலிருந்து காப்பாற்றி புத்துயிர் அளிக்கவல்லது என்கிறார் பில் கேட்ஸ். இந்தக் குழந்தைகள் பல இடங்களில் மனித மலம் உள்ள திறந்த வெளிகளில் விளையாடி ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிச் குன்றல் (stunting) போன்ற பாதிப்புகளை வரவழைத்துக் கொள்வதற்கு ஒரு தீர்வாக புதிய கழிப்பறைகள் வர இருக்கின்றன.

200 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்து, கடந்த ஏழு வருடங்களாக பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (பிஎம்ஜிஎஃப்) துப்புரவுச் சூழலை கணிசமாக மேம்படுத்தக் கூடிய புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய முயற்சி செய்துவருகிறது. இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் புதிய கழிப்பறை பரிசோதனைகளுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மேலும் 200 மில்லியன் டாலர்களை அந்த அறக்கட்டளை ஒதுக்கீடு செய்திருக்கிறது. உலகில் 5 வயதுக்குட்பட்ட 22.2 சத குழந்தைகள் (151 மில்லியன்) வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ளவை என ஐக்கியநாடுகள் சபையின் உலகநாடுகள் குழந்தைநல அவசர ஏற்பாட்டு நிதி (யுனிசெஃப்) 2017-ம் ஆண்டில் அறிவித்தது. வளரும் நாடுகளில் துப்புரவின்மை காரணமாக ஓர் ஆண்டில் உடல்நலப் பாதுகாப்பிற்காக 260 பில்லியன் டாலர்கள் செலவிட வேண்டிய தேவை இருப்பதாக உலக வங்கி கூறுகிறது.
சுகாதார மேம்பாட்டை பரவலாக்குவது ஒரு சவால் மிகுந்த பணி என்கிறார் பில் கேட்ஸ். கணினி வரலாற்றின் தொடக்கத்தில் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டு இயங்கிவந்த தலைமைக் கணிப்பொறி (mainframe computer) நாம் தற்போது பயன்படுத்தும் சிறிய அளவிலான தனிப்பட்டவர்களுக்கான கணினியாக (personal computer) மாறி வந்ததற்கு இணையான சவால் அது என்கிறார் அவர். முதலில் தலைமைக் கணிப்பொறியை பணபலம் கொண்ட அரசும் பெரிய நிறுவனங்களும் மட்டுமே பயன்படுத்தும் வசதி பெற்றிருந்தன. இன்று சுமாரான வருமானம் உள்ளவரும் வாங்கும் செலிவில் தனிப்பட்டவர்களுக்கான கணினிகள் சந்தைக்கு வந்துவிடவில்லையா? வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்கள் பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிர்வகிப்பது கடினம். குடிமக்கள் சமூகமும் தனிப்பட்ட நபர்களும் இயக்கவல்ல செலவு குறைந்த தனித்தியங்கும் சுத்திகரிப்பு முறைகளே இன்றையத் தேவை.
பீகிங் மாநாட்டில் பேசும்போது “இந்தியாவில் 30 சதம் முதல் 40 சதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கின்றன” என்று குறிப்பிட்டார் பில் கேட்ஸ். இதற்குக் காரணம் முன்பே கூறியதுபோல திறந்த வெளியில் மலம் கழிப்பதால் மலத்தில் உள்ள நோய்க்கிருமிகள் குழந்தைகளைத் தாக்கும் சூழல் இருப்பதே. புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட இருக்கும் கழிப்பறைகளை இந்தியா நடைமுறைக்குக் கொணருமானால் குறைந்த செலவில் துப்புரவுச் சூழலை விரைவிலேயே மேம்படுத்த முடியும்.
வளர்ச்சிக் குறைபாடுகளின் காரணமாக இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசியாவின் பிற நாடுகளில் உள்ள 450 கோடி மக்கள் உடல், மன ஆரோக்கியத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமென பிஎம்ஜிஎஃப் விரும்புகிறது. 2011-ம் ஆண்டில் அந்த அறக்கட்டளை இப்பிரச்சனைக்கு புதுமையான முறையில் தீர்வைக் கண்டுபிடிக்குமாறு தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஆய்வாளர்களையும் கேட்டுக் கொண்டது. அவர்களும் உடனே ஆய்வுப் பணியில் இறங்கினர். தற்போது பயன்பாட்டிற்கு வரத் தயாரான முன்மாதிரி வடிவத்தை அவர்கள் உருவாக்கிவிட்டனர். புதிய கழிப்பறைகளைக் கட்டி சுகாதாரத்தை தங்கள் நாடுகளில் மேம்படுத்தும் முடிவினை வளரும் நாடுகளில் உள்ள ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்போரும்தான் எடுத்தாக வேண்டும். 2030-க்குள் அனைவருக்கும் சுகாதாரத்தையும் சுத்தமான நீரையும் அளிப்பது என்ற நீடித்த வளர்ச்சிக் குறிக்கோளை உலகம் அடைய இன்னும் அதிக கால அவகாசம் நம்மிடம் இல்லை. ஃபிளஷ் கழிப்பறைகளைப் பயன்படுத்தி கழிவுகளை சாக்கடைகளில் விடுவது என்ற பழக்கத்திலிருந்து நாம் விடுபட்டு புதிய பழக்கத்திற்கு மாறியாக வேண்டும். விவரங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.
(உதவிய கட்டுரை : 2018 நவம்பர் 20 வெளியான ஆங்கில இந்து நாளிதழில் ஜி. அனந்தகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை)

News

Read Previous

பூ

Read Next

நபி (ஸல்) ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *