வேண்டும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை!

Vinkmag ad

தேர்தல் வெப்பம், தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது. தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சட்டசபை தேர்தலை நேர்மையாக, துாய்மையாக நடத்திட, பல்வேறு வகைகளில் முயன்று வருகிறார். வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்.

இப்போதே கட்சியினர் பலர், வாக்காள தெய்வங்களுக்கு காணிக்கை படையல் போட கொண்டு செல்லும் பல பொருட்களும், பணக்கட்டுகளும் பறக்கும் படையால் கைப்பற்றப்படுகின்றன.

தேர்தல் கமிஷன் தேர்தல் செலவினங்களை, எவ்வளவு தான் கடுமையாக கண்காணித்தாலும், கட்சிகளின் தேர்தல் செலவு, ஒவ்வொரு தேர்தலுக்கும் பல மடங்கு அதிகரித்து தான் இருக்கிறது.ஒரு சட்டசபை தொகுதி வேட்பாளர் அதிகபட்சம், 16 லட்சம் ரூபாய் தான் செலவு செய்ய வேண்டும் என்று, தேர்தல் கமிஷன் நிர்ணயித்திருக்கிறது. ஆனால், இன்றைய தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் எதார்த்தமான செலவு கணக்கு எவ்வளவு தெரியுமா?

சற்றே தோராயமான, ஆனால், சற்றும் மிகையில்லாத கணக்கு இது…

ஒரு தொகுதிக்கு, குறைந்தபட்சம், 250 முதல் 300 ஓட்டுச்சாவடிகள் இருக்கும். தேர்தலன்று மட்டும் ஓட்டுச்சாவடிகள் அருகே பந்தல், காலை – மதிய உணவு, வாக்காளர்கள் அழைத்து வருவதற்கான வாகன வசதி, பூத் ஏஜன்ட்களுக்கு அன்றைய செலவினங்கள் இவை மட்டும், மிக சிக்கனமாக செலவு செய்தால் கூட, தலா, 10 ஆயிரம் ரூபாய் ஆகும். 250 முதல் 300 பூத்துகளுக்கு கணக்கிட்டால், 25 முதல் 30 லட்சம் ரூபாய் ஆகும். ஆக, தேர்தல் கமிஷன் நிர்ணயித்திருக்கிற செலவு தொகை, தேர்தல் நடத்தும் ஒரு நாளுக்கு கூட போதாது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, பிரசாரம் முடியும் நாள் வரை ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்த பட்சம், நாள் ஒன்றுக்கு, லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். அந்த வகையில் மொத்த செலவு, தொகுதிக்கு ஒரு வேட்பாளருக்கு, ஐந்து கோடி ரூபாயை நெருங்கி விடும்.இந்த சடங்கு செலவுகளை முடிக்காமல், யாரும் தேர்தலை சந்திக்கவே முடியாது.

மேலும், இன்னொரு முக்கியமான விஷயம்… இந்த செலவுகள் கட்சியில், 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றி, அடிமட்ட தொண்டன் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை அறிமுகமுள்ளவர் வேட்பாளராக நின்றால் மட்டுமே பொருந்தும். புது வேட்பாளர் என்றால், இந்த செலவுகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

இதனால் தான், கட்சிகள் நேர்காணல் நடத்தும் போதே, கேட்கப்படும் முக்கியமான கேள்வி, ‘எவ்வளவு செலவு செய்வே?’ என்பது. இவ்வளவு ரூபாய் தான் செலவு செய்ய வேண்டும் என்று, தேர்தல் கமிஷன் வரையறை செய்திருக்கும் போது, ‘நீ எவ்வளவு செலவு செய்வாய்?’ என்று கட்சித் தலைவர்கள், தங்கள் வேட்பாளர்களிடம் கேட்கின்றனர் என்றால், இதற்கு என்ன அர்த்தம்? கோடி கோடியாக செலவு செய்தால் மட்டுமே, தேர்தலை எதிர்கொள்ளவே முடியும் என்ற நிலைமை உருவாகி விட்டது இன்றைக்கு.

இதுதான், பின்னாட்களில் ஆட்சியில் அமர்ந்ததும், ஊழலுக்கும் முக்கியமான வித்தாகி விடுகிறது. போட்டதை எடுக்கவே பதவிக்கு வருகின்றனர். இவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய் தேர்தல் செலவை தடுத்தால் தான் ஊழலையும் தடுக்க முடியும். இத்தேர்தல் செலவை தடுப்பது எப்படி?உலகின் ஜனநாயக நாடுகளில், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை, இந்தியாவில் நடைமுறைப்படுத்துவது தான் ஒரே வழி.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?

தற்போதுள்ள தேர்தல் முறையில், 51 சதவீத ஓட்டுபெற்றவர்கள் வெற்றி, 49 சதவீத ஓட்டு பெற்றவர்கள் தோல்வி. இதுதான் இப்போதையை தேர்தல் மூலம் நாம் அனுபவித்து வரும் போலி ஜனநாயகம்.ஆனால், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்பது, கட்சிகள் மட்டும் தத்தமது சின்னங்களில் தேர்தலில் நிற்கும். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு கட்சியினர் வாங்கும் ஓட்டுகள் அடிப்படையில், அவர்களுக்கான, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் நிர்ணயிக்கும். அதன் அடிப்படையில், அந்தந்த கட்சியின் தலைமைகள், அதற்கு உரிய நபர்களை தேர்வு செய்து, நியமனம் செய்யும்.

இந்த முறையால் இப்போதைய ஜனநாயகத்தில் ஒடுக்கப்பட்ட சக்திகளுக்கு சட்டசபையில், நாடாளுமன்றங்களில் வாய்ப்புகள் கிடைக்கும். சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தான், சட்டசபைக்குள் நுழைய முடியும் என்ற இன்றைய ஜனநாயகத்தின் பிம்பத்தை, விகிதாச்சார பிரதிநித்துவ முறை உடைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பும் சட்டசபை, நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவம் பெறலாம்.மேலும், முக்கியமாக தேர்தல் செலவு என்ற பெயரில் நடக்கும் அப்பட்டமான ஜனநாயக வர்த்தகம் தடுத்து நிறுத்தப்படும். கூட்டணி பேரங்களுக்கும், கோடிகள் பரிமாற்றங்களுக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும். இன்னும் முக்கியமாக கட்சியின் வேட்பாளர் தேர்வில், மத, ஜாதி, பண பிரச்னைகள் இல்லை.

கடந்த, 2001 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தலா, 31 சதவீத ஓட்டுகள் பெற்றன. ஆனால், அ.தி.மு.க., 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க., வெறும், 31 தொகுதிகளில் தான் வென்றது. ஆனால், இருகட்சிகளிலும் பெற்ற ஓட்டுகள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், 32 சதவீதம் ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., 61 தொகுதிகளில் வென்றது. ஆனால், அந்த தேர்தலில் ஆட்சி அமைத்த, தி.மு.க., 26.5 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று, 96 தொகுதிகளில் வென்றது. எப்படி சரியாகும் இந்த செப்படி வித்தை?

இப்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் என்பது, ஜனநாயகத்தை பிடித்திருக்கும் நோய். இந்த தேர்தல் முறை உண்மையான ஜனநாயகத்துக்கு தீர்வாக அமையாது என்று, காஷ்மீர் முதல்வர் மறைந்த முப்தி முகமது சையது, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி என்று அவ்வப்போது பலர் கூறிக்கொண்டே இருக்கின்றனர். இவர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அவ்வப்போது ஆதரித்திருக்கின்றனர்.தேர்தலில் தோற்கும் போது, இதை வலியுறுத்தும் கட்சிகள், ஜெயிக்கும்போது மறந்துவிடுவது தான் நம் ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம்!

அமெரிக்கா போன்ற ஒரே மொழி, இரண்டு அல்லது மூன்று இனங்கள் கொண்ட நாடுகளில் கூட, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறைதான் நடைமுறையில் இருக்கிறது.ஆனால், பற்பல மொழி பேசும் இனங்கள், மதங்கள் வாழ்கிற நம் இந்திய நாட்டில்தான் இன்னும் கணித விளையாட்டு தேர்தல் முறை, ஜனநாயகத்தின் கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் இந்தியா போன்ற நாடுகளில்தான் விகிதாச்சார பிரநிதித்துவ தேர்தல் முறை உடனடியாக தேவை.அறிவார்ந்த தளத்திலும், அரசியல் தளத்திலும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை பற்றிய விவாதங்கள் எழ வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் ஜனநாயக வானில் உண்மையான விடியல் ஏற்படும். அதுவரை நம் ஜனநாயக வானத்தை கிரகணங்களே பிடித்திருக்கும்.
இ-மெயில்:

Pudumadam jaffar1968@gmail.com
-பி.ஜாபர் அலி-
சமூக ஆர்வலர்

News

Read Previous

பூமி நாள்

Read Next

வஃபாத்து அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *