வி.கே. டி பாலன்

Vinkmag ad

ஒரு சுப்பர் ஸ்டார்

Udhai Kumar's photo.
Udhai Kumar with Viruthagiri A and Vkt Balan.

3 hrs · 

சமூகத்தின் மிகமிக ஏழ்மையான குடும்பம். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அந்தக் கிராமத்தில் அடிமைகளைப்போல் தொழில் செய்துவந்த முன்னோர்கள் வழியைப் பின்பற்ற அவருக்கு மனம் இல்லை. வேறு தொழிலும் தெரியாது. அங்கே வாழப் பிடிக்காமல் வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி, 1981 ஜனவரி 26-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

சென்னையில் யாரையுமே அவருக்குத் தெரியாது. பிளாட்பாரம்தான் அவரது வீடு ஆனது. கையில் காசு கிடையாது. எழும்பூரைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜென்ஸிகளில் வேலை கேட்டார். கிடைக்கவில்லை. ‘யாருடைய அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’ என்று துரத்திவிட்டர்கள். தோல்விமேல் தோல்வி. பசியுடன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பிக்பாக்கெட்காரர்கள் என விளிம்புநிலை மனிதர்களுடன் படுத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது படாரென்று ஓர் அடி விழுந்தது. எழுந்து பார்த்தால், அங்கே படுத்திருந்தவர்களை எல்லாம் சந்தேக கேஸ் போடுவதற்காக போலீஸ்காரர்கள் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தனர். அடுத்து ஜெயிலுக்குப் போகப்போவது நிச்சயமானது. அவர், சடாரென்று ஓட்டம்பிடித்தார். போலீஸ்காரர் ஒருவர் துரத்தினார். போலீஸ்காரரால் அந்த இளைஞரைப் பிடிக்க முடியவில்லை.

அவரது ஓட்டம் அண்ணாசாலையில் ஓரிடத்தில் வந்து நின்றது. அங்கே பிளாட்பாரத்தில் சிலர் படுத்திருந்தனர். இந்த இளைஞரும் பாதுகாப்புக்காக அவர்கள் அருகிலேயே படுத்துக் கொண்டார். அசதியில் தூங்கியும்விட்டார். விடியற்காலை நேரம். ஒருவர் அந்த இளைஞரை எழுப்பினார். ‘‘தம்பி… இந்த இடத்தை எனக்குத் தர்றியா? பணம் தருகிறேன்’’ என்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தயக்கத்துடன் ‘‘எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘ரெண்டு ரூபாய்’’ என்றார் புதியவர்.

என்ன பகுதி இது என்று நிமிர்ந்து பார்த்தார் இவர். ‘அமெரிக்கத் துணைத் தூதரகம்’ என்ற போர்டு இருந்தது. அமெரிக்க விசாவுக்காக வருபவர்களுக்கு பிளாட்பார கியூவில் இடம்பிடித்துக் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்டதும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. அந்த இரண்டு ரூபாய்தான் சென்னையில் அவரது முதல் வருமானம். அந்த ரெண்டு ரூபாயில் பசியாறச் சாப்பிட்டச் சாப்பாடுதான் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ருசியான சாப்பாடு.
பிளாட்பாரத்தில் இடம்பிடித்துக் கொடுப்பதையே தொழிலாகச் செய்ய முடிவெடுத்தார். சாயங்காலமே வந்து இடம்பிடித்துக் கொடுத்தார். ஆங்காங்கே துண்டுபோட்டு இடம்பிடித்தார். ரெண்டு ரூபாய், நான்கானது. நான்கு, எட்டானது… பத்தானது. இப்படித்தான் ஆரம்பித்தது அவரின் வாழ்க்கை.

ட்ராவல் ஏஜென்டுகளிடமிருந்து பயண டிக்கெட் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார். தூதரகத்தில் வரிசையில் நிற்பவர்களிடம் பேச்சுக்கொடுத்து, பயணச்சீட்டை வாங்க அவர்களை டிராவல்ஸுக்கு அழைத்துச் செல்வார். தனக்குக் கிடைத்த கமிஷனில் சிறிது மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வாடிக்கையாளருக்கே கொடுத்துவிடுவார். இதனால் பல பயணிகள் அவரைத் தேடிவர ஆரம்பித்தார்கள்.

ட்ராவல் ஏஜென்டுகளுக்கு நம்பிக்கையான ஊழியராகவும், பயணிகளுக்கு ஓடி ஓடி உதவும் நண்பராகவும் நம்மவர் வளர்ந்துவந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் அவர் வெறித்தனமாக உழைத்தார்.

அப்போது நடந்த ஒரு நெஞ்சைத் தொடும் சம்பவத்தை அவரே விவரிக்கிறார், படியுங்கள்: ‘‘1980-களில் இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து நடந்தது. பயணிகளுக்கான விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை ராமேஸ்வரத்தில் சென்று கொடுக்கும் பணியை ஒரு ட்ராவல்ஸ் நிறுவனம் எனக்கு வழங்கியது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். ரயில், மண்டபம் ஸ்டேஷனில் நின்றுவிட்டது. வண்டி, மேலே போகாது என்று சொல்லிவிட்டார்கள். நான் போய் அங்குள்ள ஏஜென்டிடம் விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை கொடுத்தால்தான் பயணிகள் கப்பல் ஏற முடியும். விடியற்காலை மணி ஐந்தானது. திடீரென ஒரு யோசனை வந்தது.

பாம்பன் பாலத்தில் இரண்டு பக்கமும் தண்டவாளம் இருக்கும். நடுவில் ஸ்லீப்பர் கட்டை இருக்கும். கருங்கல் ஜல்லி இருக்கும். அதில் காலைவைத்து நடந்தால் இரண்டு மணி நேரத்தில் போய்விடலாம் என்று தோன்றியது. தைரியத்தில் பையை முதுகில் சுமந்துகொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பார்த்தால், உயரமான பாலத்துக்கு இடையே தூண்கள், ஸ்லீப்பர் கட்டை, தண்டவாளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் கருங்கல் ஜல்லி இல்லை. இடைவெளிதான் இருக்கிறது. சரி, ஸ்லீப்பரில் நடக்கலாம் என நினைத்து, பாலம் இரண்டாகப் பிரியும் பகுதிவரை வந்துவிட்டேன். அதற்கு மேல் ஸ்லீப்பர் கட்டைகளில் ஒரே க்ரீஸ். கால் வழுக்குகிறது. காற்று வேறு, புயல்போல வீசுகிறது. கீழே அலை உயரமாக எழும்பித் தண்டவாளத்தைத் தாக்குகிறது. உடல் எல்லாம் நனைந்துவிட்டது. முதுகில் பாரம் வேறு. என்னால் நிற்கவே முடியவில்லை. கொஞ்சம் சறுக்கினாலும் அவ்வளவுதான். வாழ்க்கையே முடிந்துவிடும்.

என்ன ஆனாலும் சரி என்ற உறுதியுடன் அப்படியே தண்டவாளத்தின் மீது படுத்து, அதில் கைகளையும் ஸ்லீப்பரில் கால்களையும்வைத்து மாறிமாறித் தண்டவாளத்தைப் பற்றிக்கொண்டு தவழ்ந்து செல்ல ஆரம்பித்தேன். அப்படியே தவழ்ந்து தவழ்ந்து பாம்பன் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து நான் துறைமுகம் செல்லும்போது மணி 11 ஆகிவிட்டது. 12 மணிக்கெல்லாம் கப்பல் புறப்பட்டுவிடும்.

என்னைப் பார்த்ததும் எங்கள் ஏஜென்ட் ஓடிவந்தார். நான் பையைக் கொடுத்ததும் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கே காத்துக்கொண்டு இருந்தவர்களிடம் கொடுத்து, அவர்களைக் கப்பலில் ஏற்றினார். மற்ற ஏஜென்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டனர். நான் நடந்ததைச் சொன்னேன். அவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம். என் முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். எனக்கு வணிக வாய்ப்புகளை வாரி வழங்கினார்கள். சோதனைகள்தான் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்த நாள் அது.’’

தான் கற்றுக்கொண்ட அனுபவங்களை படிக்கட்டுகளாக்கி 1986 ஜனவரி 17-ல் சென்னை, மண்ணடியில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார் ‘மதுரா டிராவல்ஸ்’ அதிபர் வீ.கே.டி.பாலன். 1,500 ரூபாய் வாடகையுடன் தனது நிறுவனத்தைத் தொடங்கிய அவர் இன்று சொந்தக் கட்டடத்தில் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வணிகம் செய்யும் மாபெரும் நிறுவனமாகத் தனது நிறுவனத்தை வளர்த்துள்ளார். மதுரா டிராவல்ஸ் இப்போது IATA Approved Travel Agency. எல்லா நாடுகளின் தூதரகங்களும் இந்த நிறுவனத்தை அங்கீகரித்து உள்ளன.

1981-ல் சென்னைக்கு ரயிலில் ‘வித்-அவுட்’ டிக்கெட்டில் வந்தார் பாலன். இன்றும் அவர் ‘வித்-அவுட்’ டிக்கெட்தான் – ஆனால் விமானத்தில். ஆம். அவர் இன்று எந்த நகருக்குச் செல்வதாக இருந்தாலும், டிக்கெட் தேவைப்படாத சிறப்பு விருந்தினராக அவரை ஏற்றிச்சென்று எல்லா விமான நிறுவனங்களும் கெளரவிக்கின்றன.

முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்று அவரிடம் கேட்டபோது, நொடியும் தயங்காமல் அவர் சொன்னார்: ‘‘நாணயம் – நன்றி இவை இரண்டும் எனது மந்திரச் சொற்கள். நாணயம் என்பது ‘சொன்னதைச் செய், செய்வதைச் சொல்.’ உதவி செய்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேடித்தேடி நன்றியுடன் உதவுவது மற்றொரு முக்கியமான பண்பு. நாணயம், நன்றி என்ற இரண்டும் உங்களிடம் இருந்தால், தோல்விகள் எல்லாம் உங்களிடம் தோற்று ஓடிவிடும். தோல்விகளைத் தோற்கடியுங்கள்.’’

இன்று பல நாடுகளையும் சுற்றிவரும் ஒரு பெரும் தொழிலதிபர், பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகங்கள் கொண்ட வீ.கே.டி.பாலனின் வாழ்க்கை நம் அனைவருக்கும் கற்றுத்தரும் ஒரு நல்லதொரு பாடம்.

நன்றி விகடன்..

News

Read Previous

கண்ணதாசன் நகரத்தார் சமுகம் பற்றி

Read Next

தட்பவெப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *