வில்லன் நடிப்பில் திரையில் ஒளிர்ந்தவர்

Vinkmag ad
வில்லன் நடிப்பில் திரையில் ஒளிர்ந்தவர் 
எஸ் வி வேணுகோபாலன் 
 

சிறுவயதில், தாத்தா பாட்டியிடம் புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்த பருவத்தில், அசுரர்கள், தேவர்கள் ஏன் இப்படி எதிரெதிர் குணங்களோடு இருக்கின்றனர் என்று கேட்டிருக்கிறேன். பாட்டி ஒரு முறை சொன்னாள், கடவுள் சொன்னாராம், கெட்டவனா பூமியில் மூன்று பிறப்பெடுத்து என்னை வந்தடையலாம் அல்லது நல்லவனா ஏழு ஜென்மம் எடுத்து என்னை வந்து சேரலாம், எது யாருக்கு வேண்டுமோ அப்படி வரம் கொடுப்பேன் என்று. உன்னை வந்தடைய அவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொள்ள முடியாது, என்று கடவுளிடம் மிகவும் பிரியம் காட்டி மூன்று பிறப்புகள் போதும் என்றவர்கள் அசுர குல அதிபதிகளாகப் பிறந்தார்களாம். உண்மையில் அவர்கள்தான் கடவுளிடம் அதிக பக்தி கொண்டிருந்தவர்களாம். ஆர் எஸ் மனோகர் அப்படியான புராண வில்லன் பாத்திரங்களையே கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகங்களில் அசாத்தியமான நடிப்பின் மூலம் புகழ் பெற்றவர்.

திரையுலகில், வில்லன் பாத்திரங்களில் மிக அதிகமாகத் தோன்றி, மக்களின் மகத்தான  ‘வெறுப்புக்’ கொண்டாட்டங்களுக்கு உள்ளான நடிகர்களில் முக்கியமானவர் மஞ்சேரி நாராயணன் நம்பியார்.  ஒளிமயமாக ஜொலிக்கும் சூரிய வெளிச்சத்திற்குப் பின்னால், அதைப் பெரிதாக உணர வைக்கும் இருளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. கதாநாயகனை என்னென்ன பண்புகளுக்காக உயர்த்திக் காட்ட வேண்டுமோ, அதற்கு நேரெதிரான குணாம்சங்களோடு படைக்கப்படும் வில்லன் பாத்திரம் ஆக முக்கியம் பெறுகிறது.
மிக அண்மைக்காலத்தில் நாம் பார்த்திருக்கும் தனி ஒருவன் படத்தில், நாயக அந்தஸ்து யாருக்கென்று மிகவும் யோசித்தால் அரவிந்தசாமி பாத்திரத்தைத் தேர்வு செய்யும் ரசிகர்கள் ஏராளம் பேர் இருக்கக் கூடும். கில்லி படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், விஜய் சக்கை போடு போட்ட அந்தப் படத்தில் ‘செல்லம்’ பிரகாஷ் ராஜ் பாத்திரம் மிகவும் முக்கியமானது. எல்லா விதங்களிலும் மிக நல்லவர்களாக, கருணை மிக்கவர்களாக, நீதி காப்பவர்களாக, நேர்மையின் தூதர்களாக வலம்வரும் கதாநாயகனை, அந்த அந்தஸ்துக்கு உயர்த்த சம அந்தஸ்து மிக்க வில்லன் தேவைப்படுகிறார்.
கருத்து முதலில் தோன்றியதா, இந்த பிரபஞ்சத்தில் பொருள்தான் முதலில் தோன்றியதா என்ற விவாதங்கள் நூற்றாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. பொருள்தான் முதலில் தோன்றியது என்ற தத்துவத்தை முன்வைப்போர் இயக்க இயல் மூலம் அதை அன்றாடம் உலகு காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று விளக்குவார்கள். ஒன்றை மறுத்து அடுத்தது இந்த உலகில் தோன்றிக்கொண்டே இருக்கிறது, அப்படித்தான் உயிர்களின் தோற்றமும் என்னும் விதத்தில், செடியில் தோன்றும் இலைகள் பூவாகிக் காயாகிக் கனிந்த மரங்களை எடுத்துக் காட்டுவார்கள். நிலை மறுப்பு, மறுப்பின் மறுப்பு என்ற விவரிப்புகள் அப்படி பிறந்தவைதான்.  நட்பு முரண்களும், பகை முரண்களும் அற்ற வாழ்க்கை சுவாரசியம் அற்றதாகிறது. அக்கால நாடக மேடைகளில், ராஜ பார்ட் நடிப்புக்கு ஈடாகவும், ஆளைப் பொறுத்து, மேலாகவும் கொண்டாடப்பட்டது கள்ள பார்ட் பாத்திரம்!
எந்தக் கதையிலும் வில்லன்கள் இறுதியில் தோற்றே தீரவேண்டும் என்பது திரைப்படத்தின் அறம். காலகாலமாக வில்லன் பாத்திரங்கள் தங்களது இறுதி தோல்வியை அறிந்தும் இடையே ஆட்டம் போடவேண்டும்,கொக்கரிக்க வேண்டும். எல்லாம் நான்தான் என்று ஆணவமிக்க முறையில் நெஞ்சு நிமிர்த்தி நடக்க வேண்டும். அது ரசிகர்களுக்கும் தெரியும். ஆனால், திரைக்கதை உருவாக்குபவர்களது கற்பனைக்கான சவாலே, ஒவ்வொரு புதிய வில்லனையும் எப்படி வெவ்வேறு வித்தியாசமான விதத்தில் உருவாக்குவது என்பதுதான்.
ள்ள பார்ட் உருவாக்கத்தில், என்னென்ன கொடுமைகள் எல்லாம் ஒரு மனிதன் செய்ய முடியுமோ, அல்லது எதையெதை எல்லாம் யாருமே செய்யக் கூடாதோ அப்படியான விதவிதமான அராஜகங்களை எல்லாம் கற்பனை செய்து சிந்தித்து வில்லன் பாத்திரத்தை அதன் ‘உன்னத’ அடுக்குகளுக்கு உயர்த்திக் கொண்டுபோகும் அளவு திரைக்கதை ஆசிரியர்களைத் தூண்டிக் கொண்டே இருந்த நாயக அந்தஸ்து பெற்றிருந்த நடிகர்தான் எம் என் நம்பியார்.
அரை சதவீதம் கூட இரக்கம் காட்ட மறுக்கும் கண்கள், உயர்த்த உயர்த்த மேலே விரியும் புருவங்கள், வசனத்தைவிடவும் இறுக்கமாக முறுக்கிக் கொண்டு நிற்கும் மீசை, நாட்டிய மேதைகளும் பரிசோதித்துப் பாராத தினுசில் கழுத்தை இஷ்டப்பட்ட விதத்தில் வெட்டி வெட்டி,  அசாத்திய கோணங்களுக்குத் திரும்பி மிரட்டும் முகம், எதிரியைப் பிழிவதற்கான ஒத்திகை போலப் பிசைந்தபடி துடிக்கும் கைகள், எங்கோ பார்த்தபடி என்னென்ன செய்யப்போகிறேன் என்று எதிரே இருப்பவர் மிரளும்படி சொல்லிக்கொண்டு போகும் நடை, வெருட்டும் பார்வை, மிரட்டும் குரல் ஸ்தாயி என தனி பாணியை தனது அடையாளமாக வைத்திருந்தார் நம்பியார்.
ஆனால், கதாநாயகியைத் தனது ஆசைக்கு இணங்கவைக்க ஒரு வில்லன் கையாளும் உத்திகளுக்காக அவர் மேற்கொண்டிருந்த உடல்மொழியும், நைச்சிய பேச்சு மொழியும், இணங்க மறுத்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய அச்சமூட்டுதலும் அபாரமானவை. அதே நேரத்தில், தனக்குக் ‘குறுக்கே’ வந்து நிற்கும் கதாநாயகனின் ‘தொல்லைகளை’ சமாளிக்கவும், தடுத்து நிறுத்தவும் எத்தனை சிரமங்களை ஒரு வில்லன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எப்போதும் சதி திட்டங்களிலேயே மூழ்கி இருக்கும் ஒரு ஜீவனுக்கு நகைச்சுவை உணர்ச்சி இருக்குமா என்றால், இருக்கும் என்பதற்கான அசத்தலான சாத்தியத்தை உருவாக்கி வைத்திருந்தார் நம்பியார்.

ம் ஜி ஆர் படம் என்றாலே, நம்பியார் உண்டா இல்லையா என்று ரசிகன் தேடுவான், இருக்கையில் நெளிவான், நம்பியாரை மனதார சபித்தபடி காத்திருப்பான். அவரது அட்டகாசங்களை மிகுந்த பொறுமையோடு ரசித்திருப்பான். க்ளைமாக்ஸ் காட்சியில் அவருக்குக் கிடைக்க வேண்டியதை தலைவர் வந்து வழங்கும் நேரத்தில் தன்னை மறந்து எழுந்து நின்று விசில் அடித்துக் கூத்தாடுவான்.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவர் அப்பாவி எம் ஜி ஆரை சவுக்கால் வெளுத்து எடுக்கும்போது துடித்துப் போகும் வாத்தியாரின் ரசிகர்கள் எந்த நம்பிக்கையில் சகித்துக் கொண்டு காத்திருந்தார்கள் என்றால், பிற்பகுதியில் இரட்டைப் பிறவியில் அடுத்த உருவில் வீரநாயகனாக வந்து அதே எம் ஜி ஆர் அதே சவுக்கை சாதுரியமாகக் கைமாற்றி பற்றிக்கொண்டு நம்பியாரை பழிக்குப் பழி வாங்குவார் என்ற நம்பிக்கையில் தான்! நான் ஆணையிட்டால் என்ற அந்தப் பாடல் வரி, எம் ஜி ஆரின் அரசியல் பயணத்தின் முக்கிய மைல் கல்! அதை வடிவமைத்த திரைக்கதையில் நம்பியார் பாத்திரத்தின் நயவஞ்சகமும், நரித்தனமும்தான் மிக முக்கிய இடத்தை வகித்தன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
எத்தனையோ படங்களில், எம் ஜி ஆர், நம்பியாரைத் தனது மென் புன்னகையால் வரவேற்பார். அவரைத் தமது கள்ளச் சிரிப்பால் எதிர்கொள்வார் நம்பியார். இந்த இணை தொடர்ந்து சக்கை போடு போட்டது. இருந்தாலும், வில்லன் பாத்திரத்தைப் பன்முக ரசனையோடு  கொட்டிக் கொட்டி அவர் கலக்கிய படங்களில் “ஆயிரத்தில் ஒருவன்” தனி இடம் வகிக்கிறது.  ஆஹா, எம் ஜி ஆரைத் தனது கடல் கொள்ளைக்கு உதவியாக வரவழைக்க மேற்கொள்ளும் தந்திரம், ஜெயலலிதாவை எப்படியாவது கவர்ந்து செல்ல வகுக்கும் திட்டம் இவையெல்லாம் ஒரு பக்கம். ஆனால், வேறு படங்களில் அமையாத ஒரு காட்சி ஆயிரத்தில் ஒருவனில் இடம் பெற்றிருந்தது – கதாநாயகன் தனது தோழர்களோடு உற்சாகக் குரலெடுத்துப் பாடுகையில் அந்தக் காட்சியில் துள்ளிக் குதித்து ரசித்து ரசித்து சிரிக்கும் புதுமையான வில்லனாக நம்பியார் தோன்றியிருப்பார். வஞ்சகக் கண்கள், சட்டென்று ஏமாற்றத்தையும் தொடர்ந்து பழிவாங்கத் துடிக்கும் வெஞ்சினத்தையும் அடுத்தடுத்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் படைப்பை சிறப்பாக வழங்கினார் நம்பியார்.  எல்லாவற்றையும்விட, அவரிடமிருந்து தப்பிப்பதற்காக தங்களுக்குத் திருமணம் நடந்துவிட்டதாகப் பொய் சொல்லி அந்தத் தீவின் வழக்கப்படி அவர் இனி தன்னை தொந்திரவு செய்ய முடியாது என்பதற்காக எம் ஜி ஆரையும் இழுத்து ஜெயலலிதா மண்டியிட்டு அமர்ந்து எங்களுக்கு ஆசி கூறுங்கள் என்று சொல்லும் காட்சியில், நம்பியார், “நன்றாக வாழுங்கள்” என்று சபித்து வாழ்த்தும் வசன உச்சரிப்பு திரையில் அள்ளிக்கொண்டு போகும்.
என் அண்ணன் படத்தில், அசோகனுக்கும் நம்பியார்க்கும் பரஸ்பரம் ஒருவர் மற்றவரைப் பழிபோடும் உரையாடல் அமர்க்களமான நகைச்சுவை கதியில் அமைக்கப்பட்டிருக்கும். எலி பாஷாணத்தை வாங்கி வந்தது நான், அதைக் கலந்து கொடுத்தது நீ என்று நம்பியார் வரிசைப்படுத்தும் அழகே அழகு. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், புத்த பிக்குவாக போலி வேடமணிந்து அறிவியல் ஆய்வு ரகசியத்தைக் கைப்பற்ற அவர் துடிக்கும் துடிப்பும், கோணல் சேஷ்டையான உடல் மொழியும், தொடைகளைத் தட்டியபடி போடும் சண்டையும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
சிவாஜி – நம்பியார் எதிரெதிர் பாத்திரப் படைப்புகள் வேறு ஒரு தினுசான சுவையையும் சுவாரசியத்தையும் கொண்டிருக்கும். சவாலே சமாளி, சிவந்த மண், ராஜபார்ட் ரங்கதுரை….என பல்வேறு படங்களில் சிவாஜியுடன் நடித்திருந்தார். என்ன இருந்தாலும், தில்லானா மோகனாம்பாள் படத்தில் மதன்பூர் மகாராஜாவாக வந்து நாட்டிய பேரொளியின் அழகில் சொக்கித் தடுமாறி தத்தளிக்கும் பாத்திரம் அவருக்கு – கலக்கி எடுத்திருப்பார். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்குமிடத்தில் அந்தப் பாத்திரத்தின் தளம் உயரே போகும்! மன்னவன் வந்தானடி படத்தில், அடியாள்களை அழைக்க வைக்க வேண்டிய காட்சியில் பெயர்களைக் கொடுக்காமல் படப்பிடிப்பு தொடங்கி விட்டார்களாம், சமயோசிதமாக நம்பியார் சங்கரா, ஆறுமுகா,பாலமுருகா, மாதவா என்று கூப்பிட்டு சமாளித்தாராம் (இவையெல்லாம் அந்தப்  படத்தின் தயாரிப்பாளர்கள், வசனகர்த்தா, இயக்குனர் பெயர்கள்!).
 வேறு பல நடிகர்களோடும் இணை சேர்ந்து பல படங்களில் நடித்த நம்பியார், ஒரு கட்டத்திற்குப்பின்  நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடிக்கத் தொடங்கினார். அதில், தூறல் நின்னு போச்சு உள்ளிட்டு சிறப்பான வரவேற்பை அவருக்குப் பெற்றுத்தந்தது. மூவேந்தர் படத்தில், மணிவண்ணனை மூக்குடைத்து அனுப்பும் காட்சியில், பின்புலத்தில் நாயகன் படத்தின் தென்பாண்டி சீமையிலே எங்கோ ஒலித்துக் கொண்டிருக்க, ‘உனக்கெல்லாம் ஒரு pathos சாங் -ஆ  ? என்று மணிவண்ணனை கேட்டிருப்பார் நம்பியார்.
நூற்றாண்டைத் தொடும் நினைவுகளில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கும் முன்னணி திரைக்கலைஞர் வரிசையில் மிக மிக முக்கியமான இடத்தில் இருக்கிறார் நம்பியார். திரையில் அறியப்பட்ட அவரது கொடூர பாத்திரத்திற்கு முற்றிலும் மாறான பண்பாக்கங்கள்  கொண்டவராகக் கொண்டாடப்பட்டார். மக்கள் இரண்டையும் ஏற்றுக் கொள்ள முடிந்தது அவரது வெற்றி.
கதாநாயகனாக இருந்தால்தான் நினைவில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையைத் தகர்த்து, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவராகத் திரையில் ஒளிர்ந்திருந்தார் நம்பியார்.
******************

News

Read Previous

புதுமைப்பெண்

Read Next

மகளிர் தின வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *