வினாயக சதுர்த்தி

Vinkmag ad

வினாயக சதுர்த்தி என்றாலே என் நினைவுக்கு வருவது, நாம் வினாயக சதுர்த்தி கொண்டாட உதவி செய்யும் வியாபாரிகள் தான்.

ஒரு வியாபாரி களிமண்ணை எடுத்து வந்து கற்கள், வேண்டாத கழிவுகள் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து பிள்ளையார் உருவம் செய்ய அச்சுகள் தயாரித்து அந்தக் களிமண்ணால் பிள்ளையார் சிலைகளைச் செய்து, வாங்குபவர்களின் மனநிலையை நன்கு கவனித்து, அவர்களுக்கு வினாயகரின் உருவம் எப்படி இருந்தால் பிடிக்குமோ அப்படி பார்த்துப் பார்த்து கவனமாகச் செய்து, குந்து மணியால் கண்களை அமைத்து, ஒரு தெய்வீகக் களையை அந்தப் பிள்ளையாருக்கு அளிப்பதில் கவனம் காட்டி,மிக நேர்த்தியாக வடிவமைத்து, கூடவே நாம் பூஜை செய்வதற்கென்று, அருகம்புல்லையும் தேடி எடுத்து வந்து, தென்னங்குருத்தில் வரும் மெலிதான ஓலையால் வேயப்பட்ட தோரணங்களை செய்து, பிள்ளையாருக்கு வண்ணக் காகிதங்களை வைத்து, சிறு குச்சிகள் மூலம் கொடையும் செய்து, நமக்கு அளிக்கிறார்களே,

அது மட்டுமல்ல வினாயகருக்கு மிகவும் பிடித்தமான எருக்கம் பூ மாலைகளை நூலில் கட்டி, பெரப்பம் பழம், கொய்யாப்பழம்,மஞ்சள் வாழைப்பழம், பேரிக்காய், ஆப்பிள், கரும்பு, போன்றவைகளையும், வாழை இலை, வெற்றிலை, களிப்பாக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள், திருநீறு பொட்டலங்கள், போன்றவற்றையும், இன்னும் நுணுக்கமாக யோசித்து வைணவர்களும் சைவர்களும் வினாயகருக்கு முப்புரிநூல் அளித்து மகிழும் வண்ணம் அந்தச் சிறு சிலைகளுக்கு போடுமாறு சிறியதாக பூணூல், போன்றவற்றைத் தயாரித்து, பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான அவல், பொரி, கடலை, நாட்டுச் சக்கரை, போன்றவைகளையும் கொண்டு வந்து தங்கள் கடைகளில் பரப்பி வைத்து, அவைகளை மிக எளிதாக நமக்கு கிடைக்குமாறு செய்கிறார்களே, அந்த வியாபாரிகளுக்கு நாம் முதலில் நன்றி சொல்ல வேண்டும், ஏன் என்று சொல்கிறேன்!

”என்னை நிந்தித்தால் கூட பொறுத்துக்கொள்வேன், ஆனால் என் அடியார்களை நிந்திப்பவர்களை, என் அடியார்களுக்கு நன்றி நினையாதவரை, நான் மன்னிக்க மாட்டேன், என்னால் படைக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்பவர்கள் எனக்கு சேவை செய்பவர்களே, அவர்களை மதியாதவர்களை நானும் மதிக்க மாட்டேன் என்று இறைவனே கூறுவதாக நம் வேதங்கள் கூறுகின்றன”  வியாபார நோக்கம் இருந்தாலும், வியாபார நோக்கிலேதான் அவர்கள் செய்கிறார்கள் என்றாலும், அவர்கள் அவ்விதமாக நமக்கு வேண்டிய பொருட்களைக் கொண்டுவந்து விற்காவிடின், அல்லது ஏதேனும் போக்குவரத்து இடையூறுகளினால் நேரத்துக்கு பொருட்கள் வராமல் போவதன் காரணமாக, சரியான நேரத்துக்கு நாம் பூஜை செய்வதற்கு பொருட்கள் கிடைக்காமல் போகுமேயானால் அப்போது நம் மன நிலமை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் இந்த வியாபாரிகளுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர முடியும்.

நம் வினாயகர் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லும் வண்ணம் வினாயகர் உலகமெங்கும் நிறைந்திருக்கிறார், ஆகவே இந்த வினாயக சதுர்த்தியை ஜாதி மத, மொழி,இனம் வேறுபாடுகளைக் களைந்து, மனம் ஒன்றி வழிபட்டு, நமக்கு உதவி செய்யும் யாவரும் நலமாக, வளமாக ஆனந்தமாக வாழ நாமும் வழிபட்டு, நம்முடைய உறவுகள்,நண்பர்கள், அனைவருடனும் கலந்து நம்முடைய வினாயகரை வழிபட்டு மகிழ்வோம்.

ஒவ்வொரு பண்டிகைகளும் நமக்கு ஒரு நல்ல அறிவை போதிக்கட்டும்,ஒற்றுமையை வளர்க்கட்டும், நல்லறிவையும், ஞானத்தையும், அமைதியையும், ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும், சகோதர உணர்வையும் வளர்க்கட்டும். ஒவ்வொரு வினாயகரும் ஒரு போதி மரமே. ஆம், விநாயகர் மிக விரும்பி வசிக்கும் அரசமரம் தான் புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம்.

அன்புடன்

தமிழ்த்தேனீ

News

Read Previous

ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

Read Next

எம்.எம்.கே. முஹம்மது இப்ராஹிம் மனைவி வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *