விடுமுறையிலும் பயிற்சி தேவையா?

Vinkmag ad
பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் கோடை விடுமுறை பற்றிய பல வண்ணக் கனவுகள் இப்போதே மலர்ந்து கொண்டிருக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த விடுமுறையில் சென்றது போலவே, இப்போதும் அப்பா, அம்மாவுடன் வெளியூர் பயணம் என்கிற கனவு; ஒரு சில குழந்தைகளுக்கு விடுமுறை விட்டதும் மற்ற குழந்தைகளுடன் முழுநேர

விளையாட்டு; ஒரு சில குழந்தைகளுக்கு கொஞ்ச நாளைக்கு புத்தகத்தை தொட வேண்டாம் என்கிற மகிழ்ச்சி; இன்னும் சிலருக்கு தாத்தா, பாட்டியுடன் கிராமத்தில் விடுமுறையை இன்பமாகக் கழிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு – இப்படி பல வண்ணங்களில் அவர்களின் கனவுகள்.

அதே நேரத்தில், பெற்றோர் சிலருக்கு தங்கள் குழந்தைகளின் விடுமுறை தினங்களை அவர்களுடைய எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக மாற்றலாம் என்ற திட்டம் மனதில் இருக்கும். வேறு சிலருக்கு, விடுமுறையில் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற பயம். சிலருக்கு குழந்தைகளை சொந்த ஊரில் உள்ள உறவினர்களின் வீட்டில் கொண்டு விட்டு விட்டு, வழக்கம்போல் தங்கள் பணிக்கு செல்லலாம் என்கிற திட்டம்.
அவ்வகையில் ஒரு சில பெற்றோர் தங்களது கனவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிப்பது வழக்கம். இதன் சாட்சியாகவே கோடை விடுமுறை நாள்களில் தனியார் கணினி பயிற்சி மையங்கள் முதல் விளையாட்டு பயிற்சி மையங்கள் வரை பள்ளி மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
இது போன்ற பெற்றோர்களின் விருப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் சில தனியார்
நிறுவனங்கள், கோடை விடுமுறையில் அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி என்று விளம்பரம் செய்து வருமானம் பார்க்கின்றன.
இதில் ஒருவரை அழைத்து வந்து சேர்த்துவிடும் இன்னொருவருக்கு சலுகை கட்டணம் வேறு. இப்படிச் சலுகைக் கட்டணம் வழங்குவோரிடம் எவ்வகையில் தரமான பயிற்சியை எதிர்பார்க்க முடியும்?
குழந்தைகளும் தங்களது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக தங்களின் கனவுகள், மகிழ்வுகளை துறந்து, விருப்பமில்லாமல் கோடை விடுமுறை பயிற்சிகளில் சேர்வது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இது குழந்தைகளுக்கு மனதளவில் அழுத்தத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பெற்றோர்கள் தங்களது கனவுகளுக்காக குழந்தைகளின் கனவுகளை காற்றில் பறக்கச் செய்வது எவ்வகையில் நியாயம்? இவர்கள் கோடை விடுமுறையில் அனுப்ப நினைக்கும் பயிற்சியைத்தானே ஆண்டு முழுவதும் பள்ளியில் கற்றுத் தருவதாக கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். பிறகு எதற்கு கோடை விடுமுறையிலும் பயிற்சி?
ஒரு சில பெற்றோர் குழந்தைகளை பயிற்சி மையங்களில் பணம் கட்டி சேர்ப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் தாங்கள் செலுத்தும் பணத்திற்கேற்ப குழந்தைகள் பயிற்சி பெறுகிறார்களா, சம்பந்தப்பட்ட பயிற்சி மையங்களும், பயிற்சியாளர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களா, முன் அனுபவம் பெற்றவர்களா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள், அவசரத் தேவைக்கு, தங்களிடம் பயிற்சி பெற்றவர்கள், குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வர விரும்புவோர் அல்லது அனுபவம் பெறுவதற்காக பணிக்கு வர விரும்பும் அனுபவமில்லாத நபர்கள் – இவர்களையே பயன்படுத்துவது அனைவரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் ஒரு விஷயம்.
கோவையில் 2012ஆம் ஆண்டு இதே போன்ற கோடை விடுமுறை தினத்தில், நீச்சல் பயிற்சிக்காக சென்ற 7 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி, பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தான்.
இச்சம்பவத்துக்கு அங்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தவரின் அஜாக்கிரதையே முக்கிய காரணம் என்று தெரியவந்தது. மற்றவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் அளவுக்கு தேவையான முன் அனுபவம் அவருக்கு இல்லை என்பதும் விசாரணையில் வெளிப்பட்டது.
இதில் உயிரிழந்த அந்த சிறுவன், அவனது பெற்றோருக்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவன். எத்தகைய துயரமானது அந்த பெற்றோரின் நிலை? அந்த சிறுவன் இறந்த துயரம் இன்னும்கூட அவர்களது குடும்பத்தை விட்டு நீங்கவில்லை.
எனவே குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் இது போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. கவனக்குறைவு வேண்டாம் பெற்றோர்களே.
தவிரவும், ஆண்டுதோறும் பள்ளி வேன் பயணம், மதிய சாப்பாடு, புத்தகம், பேனா, வகுப்பறைகள், ஆசிரியர்கள் என்று பார்த்துப்பார்த்து சலித்துப் போன குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பது புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். அதை அவர்கள் விருப்பப்படி கொண்டாட விடுங்கள் பெற்றோர்களே!

News

Read Previous

உழைப்பு வாழ்தலின் கடன்..

Read Next

தமிழ் இணைய மாநாடு 2014

Leave a Reply

Your email address will not be published.