விடுதலைக்குப் பிந்தைய இலக்கிய இதழ்கள்

Vinkmag ad
https://theekkathir.in/2018/11/05/விடுதலைக்குப்-பிந்தைய-இல/

விடுதலைக்குப் பிந்தைய இலக்கிய இதழ்கள்

இரா.குமரகுருபரன்

சாகித்திய அகாதெமியின் சென்னை கிளையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையும் இணைந்து “ஊடகமும் இலக்கியமும்” என்ற பொருளில் அக்டோபர்- 24 அன்று உரையரங்கை நடத்தின.

பெங்களூரு- சாகித்திய அகாதெமியின் தென்மண்டலச் செயலாளர் பி.மகாலிங்கேஷ்வர் வரவேற்க, சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான பாரதிபாலன் அறிமுகவுரை ஆற்ற, எழுத்தாளர் மாலன் தமது தொடக்கவுரையில் சமகால ஊடகங்கள் எதார்த்தவாதப் புனைவுகளிலிருந்து விலகிநிற்கும் கருத்தாக்கத்தை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.

முதல் அமர்வில் “சுதந்திரத்திற்குப் பின் தோன்றிய இலக்கிய இதழ்கள்” குறித்துப் பேராசிரியர் அ. இராமசாமி உரையாற்றினார்:
“1990-ல் உலகமயம் புகுந்தபோது தாராளமய, தனியார் மயக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது; இலக்கிய இதழ்களிலும் இதன் வெளிப்பாடு 2000- க்குப்பின் தெரியவந்தது. எந்தவொரு இதழும் ஏதேனும் ஒரு பதிப்பகத்துடன் தொடர்பிலிருக்கிறது. உலகமயத்தின் வணிகம் சார்ந்த இலக்கிய வகைமைக்குள் நிலவுடைமைக் கட்டுமானத்தை முன்வைக்கிறது. சமூகமாற்றம், புரட்சி, விடுதலை, சமூக ஈடேற்றம் ஆகிய நிரந்தரத்தன்மை கொண்ட கருத்தியல் இலக்கு இருந்த இடத்தில், ஆடை, உணவு,வீடு, சாப்பாடு,கனவு, காதல் என்னும் தற்காலிகத்தன்மை கொண்ட ‘தற்காலிகத்தைக் கொண்டாடுதலை’ முன்நிறுத்தியிருக்கிறது… ‘யூஸ் அன்ட் த்ரோ’ (பயன்படுத்து வீசியெறி) பண்பாடு!… ஐந்து வருடம் நாம் போடும் சட்டையைக் கழற்றியெறிந்துவிட்டது!… நிலையான வீடு பற்றிய யோசனையை விதைத்து விட்டது. அபார்ட்மெண்ட்(அடுக்கம்), தனிவீடு, ‘கேட்டட் கம்யூனிட்டி’ (எதற்கும் வெளியே செல்ல வேண்டாத குடியிருப்புகள்) கம்… இந்த நகர்வுதான் உலகமயத்தின் கொடையும், சாபமும் ஆகும். இதற்கிடையில் சிக்கிய இலக்கியம் என்னவாகும்? ஐரோப்பிய இலக்கிய இயக்கத்தில் ‘ரொமான்டிக், ரியலிஸ்டிக் மூவ்மென்ட்'(கற்பனை எதார்த்தம்) எனத் திட்டமிட்டு வாசித்த இலக்கிய வரையறை இருந்தது.

இலக்கியத்தில் தனிமனித முன்னெடுப்பு சோவியத் யூனியனில் இருந்தது. “மணிக்கொடிக்கு” இலக்கிய அடையாளம் கிடையாது. இந்திய தேசியவாதத்துடன் தொடங்கிய இதழ் இது. 11 இதழ்கள் வெளிவந்தபின், பி.எஸ். ராமையா ஆசிரியர் பொறுப்பேற்றபின் இலக்கிய இதழாக மாறியது. 1994 -ல் சுந்தரராமசாமியை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட “காலச்சுவடு” காலாண்டிதழ், அவரது மகன் கண்ணன் ஆசிரியரான கட்டத்தில் வணிகக்கூறுகளை உள்ளடக்கி மாறுகிறது. எதை வெளியிடுவது, எதை வெளியிடாதிருப்பது என்பது குறித்த பார்வை சுந்தரராமசாமிக்கு உண்டு. கருத்தியல் மாற்றம் பெற்றபின் எழுத என்ன இருக்கிறது?… நேரு, இந்திரா காலகட்ட அரசியல் உள்வாங்கலில் ‘இன்க்ளூஸிவ் பாலிஸி’(அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை) இருந்தது. தமிழில் இருந்தது. திராவிட இயக்க அரசியலில் சிறிது உண்டு.

வல்லிக்கண்ணன், கநாசு, இராஜ மார்த்தாண்டன் ஆகிய இலக்கியவாதிகள் இலக்கியக் கொள்கையில் மனிதனின் அகம், உள்ளாசை விசாரணையைக் குறிக்கும், உரத்துச்சொல்லாத மென்மையான வடிவத்தைக் கையாண்டனர். 265 இதழாசிரியர்களைக் கொண்ட திராவிட இயக்க இலக்கியம் அறிவியக்கப் பார்வையை முன்வைத்துப் பேசவில்லை!… திருக்குறள் மரபைத் தேடவில்லை! பாரதிதாசன் கவிதை மரபையும் கைவிட்டது! 1962 -72 மோதலில் அகப் புறக் காரணங்கள் உண்டு. வைத்தீஸ்வரன், பசுவய்யா, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் திராவிட இயக்க அரசியல் பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்தனர். இந்திரா பார்த்த சாரதியின் குருதிப்புனல் நாவல், தி.ஜானகிராமனின் “வடிவேலு வாத்தியார்” உதாரணமாகக் கூறலாம்.

மவுனமும் வெளிப்படையுமான இலக்கியமுரண்கள்!
1975 வரை திராவிட இதழ்கள், இடதுசாரி இதழ்களின் கை ஓங்கியிருந்தது. “தாமரையும்” “செம்மலரும்” முழுக்கத் தங்களின் அரசியல் நிலைபாட்டை நிலைநிறுத்தியபடி. யதார்த்தம், நடப்பியல் எழுத்து வகைமையை இலக்கியத்தில் பதிவு செய்தன. குற்றம் செய்த கதாபாத்திர மனவோட்டக் கதைகளை வெளியிட்டன. 1970 -80 காலகட்டத்தில் வானம்பாடி இயக்க இதழ்கள் வருகை… ‘எழுத்து’ மாதிரி கறார்த்தன்மை இல்லை. சங்ககாலப் புறப் பாடல் போன்று பிரச்சனைகளை முன்வைத்தன.அரசியல், சமூகமாற்றம், புதிய பாதை, புதிய மனிதனை முன்வைத்து 1980 முதல் கேடயம், புதிய ஜனநாயகம், மன ஓசை, புதிய கலாச்சாரம் ஆகிய இதழ்கள் வந்தன.

1990-களில் தன்னார்வக்குழுக்களில் சரிபாதி இடதுசாரித் தாக்கத்துடன் ‘ஆக்ஷன் குரூப் ரிப்போர்ட்’ (செயற்பாட்டுக் குழு அறிக்கை) ஆக இயங்கின. நிறப்பிரிகை பண்பாட்டு அரசியல், தமிழ்த்தேசியம், அரசியல் இலக்கிய இணைப்பு வெளியிடுதல், தலித் இலக்கியம், பெண்ணியப்பேச்சு விவாதம், ‘ரேடிகல் பெமினிஸம்’ வாதம் நடத்தி தீவிரமடைந்தது. நிறப்பிரிகையை முன்னோடியாகக் கொண்டு நானும் “ஊடகம்” என்ற சிற்றிதழ் நடத்தினேன். அமைப்பியல், பின்-அமைப்பியல், உளப்பகுப்பாய்வு, பற்றிய அரசியல் விவாதத்தை கல்விப்புல ரீதியில் பேசியது “ஊடகம்”. மீராவின்“அன்னம்விடுதூது”, எஸ்.வி.ராஜதுரையின் “இனி,” கோமல் சுவாமிநாதனின் “சுபமங்களா ” வருகை அடுத்தகட்டம். தாராளவாத ஜனநாயகவாதிகள் பங்கெடுப்பை மையப்படுத்திய “சுபமங்களா” வெற்றியடைந்தது. ராஜதுரை பத்திரிகையைக் கைவிட்டுவிட்டார். தமிழில் வெகுமக்கள் பண்பாடு, சினிமா பற்றி “இனி ” விவாதித்தது. ருத்ரையாவின் “அவள் அப்படித்தான்” சினிமாவைப் பேச கோட்பாட்டுச் சட்டகத்தை அறிமுகப்படுத்தியது. அமைப்பியல், பின் – அமைப்பியல் குறித்து லண்டனிலிருந்து நாகார்ஜூனன் எழுதினார். பிற்பாடு ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் வருகை. வணிகம், வணிகமற்ற இதழ்கள்கோடுகள் அழிந்து ஊடும் பாவுமான தொடர்தல் நிகழ்கிறது. இவ்வாறு அ.இராமசாமி தனது சீரிய கருத்துகளை முன்வைத்தார்.

தொகுப்பு: இரா.குமரகுருபரன்

News

Read Previous

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு

Read Next

உலக நாடுகளை எச்சரிக்கும் ஐபிசிசி அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *