உலக நாடுகளை எச்சரிக்கும் ஐபிசிசி அறிக்கை

Vinkmag ad
உலக நாடுகளை எச்சரிக்கும் ஐபிசிசி அறிக்கை
பேராசிரியர் கே. ராஜு

பருவநிலை மாற்றம் பற்றிய உலக நாடுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) உலக சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.5 டிகிரி சென்டிகிரேட் கூடுதலாக ஆனால் ஏற்படும் விளைவுகள் குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. பூமியின் சூழலைக் கணக்கில் கொண்டு அதிவிரைவாகத் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை பருவநிலை மாற்றம் பற்றி உலக அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசுகிறது. நாடுகளின் நீடித்த வளர்ச்சி அல்லது ஏழ்மையை ஒழிப்பது பற்றிய நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட வேண்டுமென்று அது உபதேசிக்கவில்லை. மாறாக, அந்த சட்டகத்திற்குள்  உலகம்  கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் மையப்புள்ளி ஆகவேண்டும் என்ற தன் கவலையை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

2015-ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த உலக நாடுகளின் மாநாடு 1.5 டிகிரி உயர்வுக்குள் உலக சராசரி வெப்பநிலையை நிறுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு முன்னதாக அந்த வரையறை 2 டிகிரி சென்டிகிரேடாக வைக்கப்பட்டிருந்தது. பேரிடர் நிகழ்வுகள் அதிகரித்தது, சிறிய தீவுகளின் இருப்பே கேள்விக்குறியானது ஆகிய உடனடி ஆபத்துகளைக் கணக்கில் கொண்டே அந்த வரையறை மாற்றியமைக்கப்பட்டது. பல நாடுகள் அந்த முடிவை உற்சாகத்துடன் வரவேற்றன.
தினசரி வெப்பநிலைகள் மிக மிக அதிகமாக மாறிக்கொண்டிருப்பதைப் பார்த்து வருபவர்களுக்கு 1.5 டிகிரிக்கும் 2 டிகிரிக்கும் இடையே உள்ள வித்தியாசம் அற்பமாகத் தோன்றலாம். இந்தக் கடுகளவு வித்தியாசம் குறித்து இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா என்றுகூடத் தோன்றலாம். ஆனால், உலகின் சராசரி வெப்பநிலை குறித்துப் பேசுகிறோம் என்பதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது. பூமியின் பல்வேறு பிரதேசங்கள் பல்வேறு விகிதங்களில் கூடுதல் வெப்பநிலையைச் சந்தித்து வருகின்றன. உதாரணமாக, உலக சராசரியை விடப் பன்மடங்கு கூடுதலான வெப்பநிலையை ஆர்க்டிக் பிரதேசம் ஏற்கனவே சந்தித்து வருகிறது.
உலக சராசரி வெப்பநிலை ஏற்கனவே 1 டிகிரி வெப்பநிலையைத் தாண்டிவிட்டது. பருவநிலை மாற்றத்திற்கெதிரான உறுதியான, தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்காவிடின் 2040-க்குள் 1.5 டிகிரி இலக்கைக் கடந்துவிடும் ஆபத்து நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
வெப்பநிலையில் 0.5 டிகிரி கூடுதல் என்பது ஏற்கனவே அழிந்துகொண்டிருக்கும் பல உயிரினங்களுக்கு வாழ்வா, சாவா என்ற பிரச்சனை. கூடுதல் வெப்பநிலையில் அவை சந்திக்க வேண்டியிருப்பது அழிவைத் தவிர வேறில்லை. 2 டிகிரி கூடுதல் வெப்பநிலையோடு ஒப்பிடும்போது 1.5 டிகிரி வெப்பநிலையின் கீழ் கடல்நீர் அமிலமாதல் குறையும். கடல் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கடல்வாழ் இனங்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். புயல்களின் வீரியம் குறையும்.. அவை தோன்றும் இடைவெளிகள் குறையும்… வறட்சிகளின் தீவிரத்தன்மை மட்டுப்படும்.. வெப்பஅலைகள் பயிர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் கோடை காலங்களில் ஐஸ் இல்லாத ஆர்க்டிக் உருவாவதற்கான வாய்ப்பும் குறையும். 0.5 டிகிரி வித்தியாசத்திற்கு இவ்வளவு மவுசா என நம்மை மலைக்க வைக்கும்.
2 டிகிரி வெப்பநிலை கூடுதலான உலகில் 2100-க்குள் கடல் மட்டங்கள் சுமார் 50 செமீ. வரை உயரும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது 1.5 டிகிரி வெப்பநிலை கூடுதலான உலகைவிட 10 செ.மீ. அதிகம். 2100-க்குப் பிறகு 2 டிகிரி வெப்பநிலை உலகில் கடல் மட்டம் உயர்வது மிகமிக அதிகமாக இருக்கும். உணவுப் பாதுகாப்பு, உடல்நலன், சுத்தமான நீர், மனிதர்களுக்குப் பாதுகாப்பு, வாழ்நிலைகள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் 2 டிகிரி உலகில் மேலும் மோசமாக இருக்கும். பூமி சூடேறுவதால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள ஏழை எளிய மக்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களாக இருப்பார்கள். கிரீன்லாந்து ஐஸ் உருகிவிடும்.. அன்டார்டிக் பனிமலைகள் உருகி காணாமல் போய்விடும்.. இதன் காரணமாக கடல் மட்ட அளவு பல மீட்டர் உயரும்.. அமேசான் காடுகள் அழிந்துவிடும். நிரந்தரப் பனிக்கட்டிகள் என வரையறுத்து வைத்திருக்கும் பனிக்கட்டிகள் தங்களது நிரந்தரத் தன்மையை இழந்துவிடும்.
இதனால்தான் ஐபிசிசி அறிக்கை உலக சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்துகிறது. வெப்பநிலை குறித்த உலக நாடுகளின் அடுத்த மாநாடு போலந்தில் நடைபெற உள்ளது.  உலக நாடுகள் ஒவ்வொன்றும் தன்னுடைய நலனை மட்டுமே குறுகிய நோக்கில் பார்த்து அரசியல் செய்யப் போகின்றனவா அல்லது உலகின் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பூமியையும் அழிவிலிருந்து பாதுகாக்க கரம் கோர்க்கப் போகின்றனவா என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.
உதவிய கட்டுரை : 2018 அக்டோபர் 18 ஆங்கில இந்து நாளிதழில் சுஜாதா பைரவன் எழுதியுள்ள கட்டுரை)

News

Read Previous

விடுதலைக்குப் பிந்தைய இலக்கிய இதழ்கள்

Read Next

அரசியலில் நல்லிணக்கம்—உடனடித் தேவை!

Leave a Reply

Your email address will not be published.