விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில்…

Vinkmag ad

விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில்…

-கவிஞர் சீர்காழி இறையன்பனார்

 

எதைத் தவிர்க்க வேண்டும் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உய்த்துணர்கின்ற அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் அவசியத் தேவையாகும். என்றும் இளைஞர்களுக்குக் கலங்கரை விளக்கத்தைப் போல நிலையாக, சரியான திசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. தேவையான எழுச்சியையும் ஆர்வத்தையும் கொடுக்கும் ஓர் அற்புதமான சக்தி தன்னம்பிக்கை, தளரா முயற்சி, ஓயா உழைப்பு இம்மூன்றும் உயர் இலட்சியத்தை அடைய அடிப்படையாக அமைந்ததாகும்.

ஒவ்வொரு படைப்புக்கும் இறைவன் ஒரு நோக்கத்தை வைத்தே பூமிக்கு அனுப்பியிருக்கிறான். அந்த உயரிய மனிதப் படைப்பின் நோக்கம் தெரிந்து அறிந்து செயல்பட்டால் தான் வெற்றி உண்டு. மனப்போராட்டத்திற்கும் சந்தேகக் கண்ணோட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலக்கை நோக்கி ஆர்வத்துடன் பயணிக்க வழி வகுப்பதுடன் கனவுகள் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கும் சக்தி தன்னம்பிக்கையாகும்.

உலகின் மிகச் சிறந்த உயர்ந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்குத் தன்னம்பிக்கையின் முழு சக்தியாக உறுதுணை புரிந்தது எது? 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் சென்னையில் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தார். நான்கு வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கினார். 9 ஆம் வயதில் தந்தையை இழந்தார். 11 ஆம் வயதில் குடும்பத்துக்குத் துணை நிற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துடன் கீபோர்ட் வாசிப்பவராக இசைஞானி இளையராஜாவிடம் இணைந்தார்; அதன்பின் உயர்ந்தார்.

சிறுவயதில் அதிக வெட்கத்தின் காரணமாகத் தனிமையில் விளக்குகளையும் அணைத்துவிட்டே பாடிப் பார்த்த அவர் இன்று மக்களின் ஒளிவீசும் விளக்குகளுக்கு மத்தியில் பாடுகின்றார். 2008 ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஸ்லம் டாக் மில்லியனர் எனும் திரைப்படத்திற்குப் பெற்ற ரஹ்மான் உலகப்புகழ் மொஸார்ட் ஆஃப் மெட்ராஸின் பிரதிநிதியாக நமது தமிழ் மகன் இருப்பது நமக்கெல்லாம் பெருமையல்லவா? ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருந்தாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு கூற விரும்புகிறேன்.

1.உங்களுக்கும் உங்களது இலக்குகளுக்கும் இடையில் இடையூறாக இருப்பது உங்களது அச்சமே ! அதைத் துச்சமாக நினைத்து ஊக்கத்துடன் எதிர்கொண்டு வெல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

  1. உங்கள்மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
  2. நீங்கள் எந்த இடத்தில் இருந்தீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. தன்னம்பிக்கை, சக்தி, முயற்சி உடனிருக்கும்பட்சத்தில் எந்த உயரத்தையும் எட்ட முடியும். (தன்னம்பிக்கை நவம்பர் 2012)

பராக் ஒபாமா தம் சொந்த முயற்சியாலும் வலிமையாலும் நம்பிக்கையாலும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் நாள் அமெரிக்காவின் 44ஆம் அதிபராகப் பதவியேற்றார். அதுவும் வெள்ளையர் விரும்பாத கருப்பர் (நீக்ரோ) இனத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவரின் வழித்தோன்றலாவார். ஒபாவிடமிருந்த உயர்ந்த குணங்களான அன்பு, பலம், உறுதி, நேர்மை, தன்னம்பிக்கை, புன்னகை, பிறர் துன்பத்தைக் கண்டு துயர்கொள்ளுதல் போன்ற நற்குணங்களால் அவர் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக நடந்த தேர்தலிலும் வெற்றிவாகை சூடினார். மக்கள் சக்தி அவரை ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தது.

மேனேஜிங் யுவர் செல்ஃப் (உன்னை நீயே ஆள்) என்பது அரிய கலையாகும். இந்தக் கலையை நன்கறிந்தவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். உலகம் தானே சுழன்று சூரியனையும் சுற்றுகிறது. இதற்கு ஓய்வு என்பதே கிடையாது. அதற்கும் தெரியாது. மனிதன் வாழ்வும் இப்படித்தான். தன்னால் தனக்கும் பிறர்க்கும் பயன் உள்ளனவாக இருக்க வேண்டும்; இறக்க வேண்டும். தனக்கும் பயன்படாமல் பிறர்க்கும் பயன்படாதவனை மனிதன் என்று துணிந்து கூறமுடியாது.

ஓடையின் நீர் தேங்கி நிற்கும்போது நாளடைவில் துர்நாற்றம் கொண்ட கூவம் போன்ற சாக்கடையாக மாறுகிறதோ அதேபோல மனிதன் இயக்கம், முயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு தடைப்படும்போது அது மனநோயாகவும் உடல்ரீதியான நோயாகவும் மாறி வாழத் தகுதியற்றவனாகிறான். வாழ்க்கையில் தொடர்ந்து போராடி இயங்குகின்ற இயந்திர மனிதன்தான் வெற்றியாளனாக, சாதனையாளனாக விளங்க முடியும்.

தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

என்று இயம்புகிறார் வள்ளுவப்பெருந்தகை.

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்து தானுந்தன்

பொல்லாச் சிறகை ஆட்டினாற் போலுமே

கல்லாதான் கற்றகவி என அவ்வை மூதாட்டியார் சொல்லியிருப்பது கல்லாதவர்களையும் முயற்சி இல்லாதவர்களையும் உவமையிட்டுக் கூறுகிறார். பிறர் சிறப்புடன் வாழ்வதைக் கண்டு பொறாமை கொள்ளலாகாது. அவன் போல் உழைத்து, முயற்சி செய்து முன்னேற எண்ணம் கொள்ள வேண்டும்.

 

( இனிய திசைகள் – மே 2015 இதழிலிருந்து )

News

Read Previous

மலேஷியாவில் முதுகுளத்தூர் வாலிபர் கொலை : குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெற்றோர் கலெக்டரிடம் மனு

Read Next

உயர்ந்திடுவோம் வாழ்வினிலே !

Leave a Reply

Your email address will not be published.