விஞ்ஞானிகளும் அலகுகளும்

Vinkmag ad

அறிவியல் கதிர்

விஞ்ஞானிகளும் அலகுகளும்
பேராசிரியர் கே. ராஜு

2017 மார்ச் மாத ட்ரீம் 2047 அறிவியல் இதழில் டாக்டர் பூபதி சக்ரபர்த்தி அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சில அலகுகள் அவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பெயர்களில் புழக்கத்திற்கு வந்திருப்பதை ஒரு கட்டுரையில் சுவையாக விவரிக்கிறார்.
அவர் தன்னுடைய மேஜை மின்விசிறியை ஒரு மின்பழுது நீக்குபவருடைய கடைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு காத்திருந்தபோது ஒரு வாடிக்கையாளர் ஒரு 23 வாட் சிஎப்எல் பல்பு வேண்டுமென்று கேட்டு அங்கு வந்திருக்கிறார். இன்னொரு வாடிக்கையாளர் ஒரு 15 ஆம்பியர் பிளக் வேண்டுமென்றும் மற்றும் ஒருவர் ஒரு 12 வோல்ட் எலிமினேட்டர் வேண்டும் என்றும் கேட்டு வந்திருக்கின்றனர். இது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் இடம் பெற்றுவிட்ட வாட், ஆம்பியர், வோல்ட் போன்ற அலகுகளையும் விஞ்ஞானிகளின் பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்ட வரலாற்றையும் அவருடைய நினைவுக்குக் கொணர்ந்திருக்கிறது.
முன்பொரு முறை தெருவில் அவரது நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் தன்னுடைய முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே இன்னிக்கு கடுமையான வெயில்.. 36 டிகிரி இருக்கும் இல்லியா? என்று கேட்டிருக்கிறார். அவர் அன்றைய வெப்பநிலையைத்தான் குறிப்பிடுகிறார் எனப் புரிந்தது. அதைக் கூறும்போது வெப்பநிலை அலகான செல்சியஸை நண்பர் விட்டுவிட்டார். இதுவும் அடிக்கடி நடப்பதுதான். மேலே குறிப்பிடப்பட்ட அலகுகள் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரே மேரீ ஆம்பியர்,  இத்தாலிய விஞ்ஞானி அலெசாண்ட்ரோ வோல்டா, பிரிட்டிஷ் விஞ்ஞானி சர் ஜேம்ஸ் வாட், ஸ்வீடன் விஞ்ஞானி ஆன்டர்ஸ் செல்சியஸ் ஆகிய விஞ்ஞானிகனைக் கௌரவிக்க அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட வரலாற்றை நமக்கு நினைவுபடுத்துகின்றன. மின்னோட்டம், மின்னழுத்தம், மின்சக்தி, வெப்பநிலை ஆகியவற்றின் அலகுகள் அவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றன.
ஜார்ஜ் சைமன் ஓம் என்ற ஒரு ஜெர்மானிய விஞ்ஞானியின் பெயர் இங்கே பேராசிரியர் ஆம்பியருக்கும் பேராசிரியர் வோல்டாவுக்கும் இடையே ஒளிந்து கொண்டிருக்கிறது. வோல்ட்டை ஆம்பியரால் வகுக்கும்போது நமக்கு மின்தடையின் அலகான ஓம் கிடைக்கிறது. மின்னணு தொழிலிலும் பரிசோதனைகளிலும் அது மிக முக்கியமான கூறு என்ற போதிலும் நம்முடைய அன்றாட வேலைகளில் அந்தப் பெயர் அடிபடுவதில்லை. கார்பன் மின் தடைகள் விற்கப்படும்போது 2.2K, 1K அல்லது 1M என அவற்றைக் குறிப்பிடுகிறோம். அவற்றின் முழுப்பெயர்களான 2.2 கிலோஓம், 1 கிலோஓம் அல்லது 1 மெகாஓம் என மின்தடையைக கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயரோடு சேர்த்துக் கூறுவதில்லை. இயற்பியலில் பல பன்னாட்டு அலகுகள் (SI units)  விஞ்ஞானிகளின் பெயர்களிலேயே குறிப்பிடப்படுகின்றன.  அவற்றில் லார்ட் கெல்வின், ஆன்ட்ரே மேரீ ஆம்பியர் ஆகிய இரு விஞ்ஞானிகளின் பெயர்கள் ஏழு அடிப்படை அலகுகளில் இடம் பெறும் பெருமை பெற்றவை. வெப்பநிலையின் பன்னாட்டு அலகு கெல்வின். மின்னோட்டத்தின் பன்னாட்டு அலகு ஆம்பியர். கிலோகிராம், மீட்டர், செகண்ட், மோல், காண்டெலா ஆகிய மற்ற ஐந்து அலகுகள் எந்த விஞ்ஞானியின் பெயரோடும் இணைக்கப்படாதவை.
அடிப்படை அலகுகளால் குறிப்பிடப்படும் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட இயற்பியல் அளவுகளை இணைக்கும்போது அவை தருவிக்கப்பட்ட அலகுகளால் (derived units) குறிப்பிடப்படுகின்றன. உதாரணமாக, தூரத்தை நேரத்தால் வகுக்கும்போது ஒரு பொருளின் வேகம் கிடைக்கிறது. ஒரு செகண்டிற்கு இவ்வளவு மீட்டர் என்பது வேகத்தின் அலகு ஆகிறது. இது எந்த விஞ்ஞானியின் பெயரோடும் இணைக்கப்படவில்லை. ஆனால் பல தருவிக்கப்பட்ட அலகுகள் விஞ்ஞானிகளின் பெயர்களையே கொண்டிருக்கின்றன. விசையின் பன்னாட்டு அலகு kg m/s2என இருந்திருக்க வேண்டும். ஆனால் அது சர் ஐசக் நியூட்டன் பெயருடன் இணைத்து நியூட்டன் என தனிப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறது. வேறு சில அலகுகள் விஞ்ஞானியின் பெயரை சற்றே மாற்றி இணைக்கப்படுகின்றன. கொள்திறனின் (capacitance)  பன்னாட்டு அலகு மைக்கேல் ஃபாரடேயின் பெயரை ஒட்டி ஃபாரட் (farad) என அழைக்கப்படுகிறது. ஃபாரட் பெரிய அலகாக இருப்பதால் சாதாரண பயன்பாட்டிற்கு மைக்ரோஃபாரட் (10-6 farad) என்ற அலகு பயன்பாட்டில் உள்ளது. கலீலியோ, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளின் பெயர்களிலும் அலகுகள் உண்டு. இந்த உலகின் தோற்றத்தையே மாற்றியமைத்ததில், இன்னமும் மாற்றிக் கொண்டிருப்பதில் விஞ்ஞானிகளின் பங்கினை யாரால் குறைத்து மதிப்பிட முடியும்? எனவே அவர்களின் பெயர்களை அலகுகளுக்குச் சூட்டி மகிழ்வது ஒரு நல்ல மரபுதானே!
               (உதவிய கட்டுரை : மார்ச் ட்ரீம் 2047 இதழில் டாக்டர் யதிஷ் அகர்வால் எழுதிய கட்டுரை)

News

Read Previous

பாடுவேன், ஊதுவேன்!

Read Next

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *