விஞ்ஞானத்தை நேசத்துடன் பார்த்த நாடாக இந்தியா மலர்ந்திராவிட்டால்…?

Vinkmag ad
அறிவியல் கதிர்
விஞ்ஞானத்தை நேசத்துடன் பார்த்த நாடாக இந்தியா மலர்ந்திராவிட்டால்…?
பேராசிரியர் கே. ராஜு

72 ஆண்டுகளுக்கு முன் காலனிய சாம்ராஜ்யங்கள் தகர்ந்தபோது ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 80 நாடுகள் சுதந்திர நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தன்னுடைய எதிர்காலத்திற்குத் திட்டமிட வேண்டிய நிலை. ஆனாலும், அந்த 80 நாடுகளில் “அறிவியலுடன் நட்பு கொள்வது” என்ற நாட்டு வளர்ச்சிக்கான கொள்கையுடன் மலர்ந்த ஒரே நாடு இந்தியாதான். தொலைநோக்குப் பார்வை கொண்ட தனித்துவம் மிக்க முடிவு அது!

“எதிர்காலம் அறிவியலையும் அத்துடன் நட்பு கொண்டவர்களுக்கும் மட்டுமே உரியது” என நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிரகடனம் செய்தார். நமது வளர்ச்சிக்கும் நல்வாழ்க்கைக்கும் ஏற்ற ஒரு சுதந்திரமான, ஜனநாயக நாடாக மலர, நாம் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முக்கியமான கருவிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். தேசத்தின் மீது பற்றுடைய புகழ்பெற்ற விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிந்தனையாளர்கள் பலரையும் அணுகி அன்றைய ஆட்சியாளர்கள் ஆலோசனை கேட்டனர்.. அவர்கள் கொடுத்த அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்டனர். சுதந்திரம் அடைந்து 10 ஆண்டுகளுக்குள் நமது உணவு உற்பத்தி மூன்று மடங்காகியது.. பெரியம்மை ஒழிக்கப்பட்டது..ஐந்து சிந்து சமவெளி ஆறுகளின் நதிநீர் பாகிஸ்தானுடன் இணக்கமான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.. அணைக்கட்டுகளும் நீர்வழிகளும் கட்டமைக்கப்பட்டன.. ஐ.ஐ.டி.க்கள்,  வேளாண் பல்கலைக்கழகங்கள், மருத்துவ அறிவியலுக்கான அகில இந்திய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஓடிவிட்டன. அறிவியலைக் கைக்கொண்டதால் இந்தியா எந்தளவுக்கு மாற்றியமைக்கப்பட்டது என்பது பற்றி இந்திய தேசிய அறிவியல் நிறுவனம் (ஐ.என்.எஸ்.ஏ.)  11 கட்டுரைகள் கொண்ட ஒரு நூலினை வெளியிட்டிருக்கிறது. முனைவர்கள் அதிதா ஜோஷி (உயிரியலாளர்), தினேஷ் ஷர்மா (அறிவியல் எழுத்தாளர்), கவிதா திவாரி (உயிரியல் தொழில்நுட்ப வல்லுநர்), நிஸ்ஸி நெவில் (இயற்பியலாளர்) ஆகிய நால்வரும் அக்கட்டுரைகளை எழுதியுள்ளனர். 1) நவீன அறிவியல்தான் திறவுகோல்.. 2) பெரிய அளவில் அறிவியல் கொள்கைகளை அமுல்படுத்தினால் தேசத்தின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றியமைக்க முடியும்.. 3) புரிதல், ஏற்றுக் கொள்ளல், கடைப்பிடித்தல் ஆகிய மூன்றுக்கும் மக்களின் பங்கேற்பு ஆதாரமானது.. 4) தற்போதைய நெறிகளை துணிச்சலுடன் சவால் மிக்கவையாக மாற்றியமைக்கும் உந்துதல் அவசியம்… 5) நவீன உயிரியலை பொதுவான மக்கள் நலனுக்கேற்றபடி மாற்றியமைப்பதை கிராமத்து மக்கள் கூட புரிந்து கொண்டு வரவேற்பது.. ஆகிய அம்சங்களை விளக்கி இவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அழியாத மை 1940-களில் கொல்கத்தா சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தில் டாக்டர் சலிமுசாமான் சித்திக்கினால் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி அதிதா ஜோஷி எழுதுகிறார். தகவல் தொழில்நுட்பப் புரட்சி இந்தியாவில் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து தினேஷ் ஷர்மா எழுதுகிறார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தை (ஐ.எஸ்.ஐ.) தொடங்கிய டாக்டர் பி.சி. மஹாலநோபிஸ் 1943-லேயே கணக்கிடும் கருவிகளை உருவாக்க முயற்சி செய்தார் என்பதும் ஐஎஸ்ஐ-யும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் இணைந்து ஆரம்பகால அனலாக் கணினியை உருவாக்கின என்பதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் செய்தி. மும்பை டிஐஎஃப்ஆர் நிறுவனத்தில் டிஜிட்டல் கணினியை உருவாக்க ஓய்வின்றி உழைத்த டாக்டர் ஆர். நரசிம்மன், தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்திட வழிவகுத்த டாக்டர் வி. ராஜாராமன் ஆகியோரைப் பற்றி ஷர்மா பதிவு செய்கிறார். ஜெனரிக் மருந்துகள் உருவாக கரிம வேதியியல் வழிவகுத்தது, பெரும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளை தைரியமாக எதிர்த்து நின்று எச்.ஐ.வி.க்கெதிரான ஜெனரிக் மருந்துகளை ஆப்பிரிக்காவில் ஏழை எளிய நோயாளிகளுக்கு டாக்டர் யூசுப் ஹமீத் விற்பனை செய்தது, திரு. வெர்கீஸ் குரியன் நிகழ்த்திய வெண்மைப் புரட்சியின் விளைவாக உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தைப் பிடிக்க முடிந்தது பற்றியெல்லாம் கவிதா திவாரி எழுதுகிறார். ஷாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனம் ஹெபடிடிஸ் தடுப்பூசிகளை மலிவான விலையில் விற்க முன்வந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். அர்விந்த் பட்டேல், தீரஜ்லால் கொடாடியா ஆகிய இரு பொறியாளர்கள் வைரக் கற்களை அறுக்க லேசர் உதவியுடன் செயல்படும் தொழில்நுட்பம், ஒரு கருவியைத் திறந்து அதன் பகுதி உறுப்புகளை ஆராய்ந்து அதேபோல செயல்படக் கூடிய புதிய கருவிகளை வடிவமைப்பது என்பது பற்றியெல்லாம் சுவையாக நிஸ்ஸி நெவில் எழுதிச் செல்கிறார்.
மாநில அரசுகளும் இந்தப் பந்தயத்தில் கலந்துகொண்டு ஏன் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வமாக ஈடுபடவில்லை.. தொழில் நிறுவனங்கள் ஆய்வுகளை மேம்படுத்த ஏன் தயாராக இருப்பதில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. இன்றைய தொழில் முதலீட்டாளர்கள் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆராய்ச்சிகளை மேம்படுத்தத் தயாராவது எப்போது?

   (உதவிய கட்டுரை : 2018 மே 27 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் திரு. டி. பாலசுப்பிரமணியன் எழுதியது),

News

Read Previous

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

Read Next

அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *