விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமே உண்மையான ஜனநாயகம்

Vinkmag ad
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமே உண்மையான ஜனநாயகம்

இந்தியாவில் எந்த அரசியல் கட்சி என்றாலும், அக்கட்சியின் கொள்கைகளும் செயல்திட்டங்களும் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தாலும் அந்தக் கட்சி தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் மட்டுமே நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ தனது குரலை ஒலிப்பதற்கான வாய்ப்பைப் பெறமுடியும். எனவே, இந்தப் பிரச்சினை கூட்டணி சேர்வதற்காக அலைந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பிரச்சினை அல்ல. இந்திய ஜனநாயக முறையின், தனிநபரை மையப்படுத்தும் அதன் வாயிலாக இருதுருவ அரசியலைக் கட்டமைக்கும் இந்தியத் தேர்தல் முறையின் பிரச்சினை.

ஒரு வாக்கு என்றாலும்கூட  அது  வெற்றியைத்  தீர்மானிக்க வல்லது என்கிற தற்போதைய தேர்தல் முறையே, இன்று ஜனநாயகத்துக்குத் தீங்காக மாறிக்கொண்டிருக்கிறது. வாக்குகளைப் பெறுவதற்காக எந்த உத்தியையும் நாடலாம், பணம் கொடுக்கலாம், மது பாட்டில்களை விநியோகிக்கலாம் என்று சகலவிதமான கேடுகளும் பரவிவருவதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. தேர்தலில் வெல்லும் கட்சிகள் அனைத்துமே  50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிடுவதில்லை. வெற்றிபெறும் கட்சிக்கும் தோல்வியடையும் கட்சிக்கும் இடையில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசங்களும் இருப்பதில்லை. தோல்வியைச் சந்திக்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்கு எந்த மதிப்புமே இல்லை என்பது மக்களின் மன உணர்வுகளை முழுமையாகப் பிரதிபலிப்பது ஆகாது.

இன்றைய நிலையில் தேசிய அளவில் பாஜக – காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக – திமுக என்பதாகவே அரசியல் களம் சுருங்கிப்போய் நிற்கிறது. மூன்றாவது அணிக்கு முயற்சி செய்த கட்சிகள், ஏற்கெனவே ஆட்சியிலிருந்த கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திய கட்சிகள் என எல்லாமும் தேர்தல் நெருங்க நெருங்க மீண்டும் இந்தக் கட்சிகளுடன் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி கூட்டு சேர்ந்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், அது தங்களுடைய தவறு அல்ல, தேர்தல் அமைப்பின் தவறு என்று விமர்சிக்க அந்தக் கட்சிகள் ஏன் தயங்குகின்றன?

பிரதானக் கட்சிகள் ஒருபோதும் அப்படி பேசப்போவதில்லை. பெரிய அளவில் வாக்கு வித்தியாசங்கள் இல்லாமல், மாறி மாறி ஆட்சியில் அமரும் வாய்ப்பை அக்கட்சிகள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், மற்ற கட்சிகள் அனைத்துமே தங்களது பிரதிநிதித்துவ இழப்புக்கான காரணத்தை வெறும் கூட்டணி விஷயமாக மட்டுமே ஏன் சுருக்கிப்பார்க்கின்றன?

“இது ஜனநாயகம் அல்ல. இது தொடர்பாக ஒரு தேசிய விவாதத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இது. ஜெர்மனியில் உள்ளதுபோல் இரண்டு தேர்தல் முறைகளும் கலந்த ஒரு அமைப்பை உருவாக்குவதுபற்றி நாம் யோசிக்கலாம்” என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் ஒய்.எம்.குரேஷி.

அண்டை நாடுகளான இலங்கையிலும் நேபாளத்திலும் விகிதாச்சார முறை பின்பற்றப்படுகிறது. இந்தியா மட்டும் அதைத் திட்டமிட்டுத் தவிர்ப்பதேன்?

தற்போது நம் நாட்டில் இருக்கும் தேர்தல்  நடைமுறை  இனிமேலும் தொடர்வது  இந்திய ஜனநாயகத்தைப்  பின்னோக்கி  இழுக்கவே உதவும்!

(நன்றி : பிப்ரவரி 28 தமிழ் இந்துவில் செல்வ புவியரசன் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள்)

News

Read Previous

இன்றும் சொல்கிறோம்…ஜிந்தாபாத்!

Read Next

புதிதாய் தொழிலுக்கு வந்த தேசபக்தர்களுக்கு…

Leave a Reply

Your email address will not be published.