வருமுன் காப்போம்!

Vinkmag ad

அறிவியல் கதிர்

வருமுன் காப்போம்!
பேராசிரியர் கே. ராஜு

அமிதவ் கோஷ் பருவநிலை மாற்றம் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் தற்கால இலக்கியப் படைப்புகள் – மாயமந்திரக் கதைகள், அறிவியல் புனைகதைகளைத் தவிர – பருவநிலை மாற்றம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்துப் பதிவு செய்யத் தவறிவிட்டன என்கிறார்.  உடல்நலப் பாதுகாப்பு பற்றிய நெருக்கடியோடு இதை ஒப்பிடலாம். உடல்நலன் சம்பந்தமாக பல்வேறு கட்டுரைகள், எச்சரிக்கைகள், விளம்பரங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நம்முடைய வாழ்நாளிலேயே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது புற்று நோய் பாதிப்பு அதிகமாகியிருக்கிறது. இளைஞர்களும் தப்ப முடிவதில்லை. அதனால்தானோ என்னவோ  ஒரு நண்பருக்கு புற்றுநோய் என்றதும் 20 ஆண்டுகளுக்கு முன் நாம் அதிர்ச்சியடைவோம். ஆனால் தற்போது, ஆரம்பகட்டமாக இருந்தால் நல்லது, குணப்படுத்தி விடலாம் என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உடல்நலனுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காற்று மாசுபடுவதால்   சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அது புற்றுநோயோடு தொடர்புடையதாக இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீரினால் பரப்பப்படும் நோய்கள், சுற்றுப்புற மாசுகள் எல்லாம் சேர்ந்து பல உயிர்களைப் பலி வாங்குகின்றன. அது மட்டுமல்ல, பள்ளிக் குழந்தைகளின் உடல்நலப் பாதுகாப்புச் செலவுகளுக்கும் அவர்களை பள்ளிக்கே அனுப்ப முடியாமல் போவதற்கும்  அவை காரணமாகின்றன. பருவநிலை மாற்றங்கள் நோய்க்கிருமிகள் உருவாக வழிவகுத்து, பல்வேறு கொள்ளைநோய்களும் தொற்றுநோய்களும் பரவக் காரணமாகி விடுகின்றன. என்னவென்றே தெரியாத, இன்னமும் பெயர் வைக்கப்படாத புதியரகக் காய்ச்சலுக்கு மர்மக் காய்ச்சல் என்ற பெயர் சூட்டப்படுகிறது.
இன்றைய பொருளாதார வளர்ச்சிப் பாதையும் வாழ்வியல் நடைமுறைகளும் மாற்றவே முடியாதவை என்ற முடிவிற்குப் பலரும் வந்துவிட்டோம். நம்முடைய சுதந்திரமும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் அவற்றுடன் பின்னிப் பிணைந்துவிட்டதாக நம்புகிறோம். ஒரு நோயை வராமல் தடுப்பதற்குப் பதிலாக அந்த நோய் வந்தபிறகு சிகிச்சைக்கு மிக அதிகமாக செலவிட வேண்டிய நிலை  ஏற்படுகிறது என்பதை உணரத் தவறுகிறோம். புற்றுநோயைக் குணப்படுத்த லட்சக்கணக்கான டாலர்கள் செலவிடப்படுகின்றன. ஆனால் அது வராமல் தடுக்கத் தேவையான வாழ்வியல் நடைமுறை மாற்றங்களைக் கொணர அரசும் சரி, நாமும் சரி சிறிதளவும் செலவிடுவதில்லை.  பற்சிதைவு வராமல் தடுத்துக் கொள்வதற்குப் பதிலாக பல் கெட்டபிறகு பல்லையே பிடுங்கிவிட்டு வேறு பல்லை வைத்துக் கொள்வது என்பதுதான் பொதுவான நடைமுறையாக இருக்கிறது. நவீன தாராளமயப் பொருளாதாரம் அமுலுக்கு வந்தபிறகு, அரசு, தொழில், அறிவியல், மருத்துவம் இவற்றுக்கிடையான தொடர்பின் காரணமாக, எந்தப் பிரச்சனைக்கும் சமூகரீதியான தீர்வுகளைத் தேடாமல் தொழில்நுட்பத் தீர்வுகளுக்கே முன்னுரிமை கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
உலகம் முழுதும் உள்ள இந்த பொதுவான சிந்தனைக்கு மாறாக கியூபா மட்டுமே வருமுன் காப்போம் என்ற சிந்தனைக்கு உதாரணமாகத் திகழ்கிறது. அமெரிக்காவை விட கியூபாவில் குழந்தை இறப்பு விகிதம் மிகக் குறைவு. குடிமக்கள் உயிர் வாழும் ஆண்டு அமெரிக்கா அளவுக்கு உயர்வாகவே இருக்கிறது.  இத்தனைக்கும் மக்கள் நல்வாழ்வுப் பராமரிப்புக்கென ஒரு நபருக்கு அமெரிக்கா செலவிடும் தொகையில் கியூபா செலவிடுவது 4 சதம் மட்டுமே. கியூபாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். நோய் வராமல் தடுக்கும் மருத்துவத்திற்கு கியூபா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நோய்த் தடுப்பு மருத்துவத்திற்கு செலவு அதிகம் ஆகாது. ஆனால் பலனோ அதிகம். இரண்டாவதாக, தொழில்நுட்பத் தீர்வுகளைக் காட்டிலும் சமூகத் தீர்வுகளுக்கே கியூபா அதிக முக்கியத்துவம் தருகிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் அங்கு மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள். அதனால், தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களின் உடல்நிலை பற்றி அவர்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறது. உலகமே கடைப்பிடிக்க வேண்டிய இந்த முன்மாதிரியை சில லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமே பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. நம் நாட்டில் முன்பு இருந்த குடும்ப டாக்டர்கள் நடைமுறையோடு இதை ஒப்பிடலாம். குடும்ப டாக்டர்கள் நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உடல்நிலை, ஒவ்வாமைப் பிரச்சனைகள் உட்பட எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார்கள் என்பதை மூத்த குடிமக்கள் அறிவார்கள்.
உலகத்திற்கு கியூபா தரும் படிப்பினை என்ன? வாழ்வியல் நடைமுறைகளில் நோய்த் தடுப்பு முறைகள் சார்ந்த சமூகரீதியான மாற்றங்கள் தேவை என்பதே கியூபா நமக்குத் தரும் செய்தி. தற்போதைய முதலாளித்துவ ஜனநாயக வடிவங்களில் நவீன அரசுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மக்களைக் கொள்ளையடிக்க முழு சுதந்திரம் இருக்கும்வரை நோய்த் தடுப்பு முறைகளில் அர்த்தமுள்ள மாற்றங்கள் வர வாய்ப்பு இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளும்போது மாற்றங்களும் வரத் தொடங்கும்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தனி ஆளாக யாரும் மாற்றிவிட முடியாது, அதற்கு கூட்டு முயற்சியும் அரசின் ஒத்துழைப்பும் தேவை என்பது உண்மைதான். அரசை நிர்ப்பந்திக்க சுற்றுச்சூழல் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள் களத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அதே சமயம், உடல்நலப் பிரச்சனைகளில் தனிப்பட்ட சில முயற்சிகளை யாரும் எடுக்க முடியும். அதை ஒவ்வொருவரும் எடுப்பதை யாரும் தடுக்க முடியாது.

(நன்றி : ஆகஸ்ட் 15 தி ஹிண்டுவில் கார்த்திக் சங்கர் எழுதிய கட்டுரை).

News

Read Previous

படிக்க வேண்டிய வயதில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த வேலையா….?

Read Next

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *