லோக்பாலா? “வீக்பாலா?”

Vinkmag ad

இனிய திசைகள்- ஜன.2012 தலையங்கம்

தலையங்கம்

லோக்பாலா?  “வீக்பாலா?”
——————————————————-
லோக்பால் மசோதா 1968ஆம் ஆண்டு முதல் பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்ததே தவிர நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் காலம் கடத்தப்பட்டுக் கொண்டே வரப்பட்டது.43 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 டிசம்பரில் நிலைக்குழு வரை கொண்டு செல்லப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்கள் அவையில் நள்ளிரவுவரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
லோக்பால் மசோதாவைத் தயாரித்த நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வி மக்களவையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘மத்திய புலனாய்வுத் துறையையும், அரசு ஊழியர்களில் சி,டி பிரிவினரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது குறித்தே அதிகம் குழுவில் கருத்து வேறுபாடு இருந்தது’
என்று கூறியிருந்தார். இதிலிருந்து லோக் ஆயுக்தா அமைப்பது குறித்துப் பெரிய விவகாரம் நிலைக் குழுவில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. நிலைக் குழுவில் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் 10 பேருக்கும் குறைவு. அப்படியென்றால் அங்கே எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் லோக் ஆயுக்தாவிற்கு உடன்போக்காகவே இருந்துள்ளனரென்பது தெரிய வருகிறது. ஆனால் அதே எதிர்க் கட்சிகள்
மாநிலங்கள் அவையில் லோக் ஆயுக்தா அமைப்பதைக் கட்டாயமாக்குவது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகுமெனக் கடுமையாக எதிர்த்தது ஏன்? ஒவ்வொரு கட்சியும் இருபது, முப்பது என்கிற எண்ணிக்கையில் திருத்தங்கள் கொண்டு வந்தது ஏன்?
மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் கட்சிக்கு 92 உறுப்பினர்கள் உள்ளனர். நடுநிலையாளர்களாக 36 பேர் உள்ளனர். மொத்தமுள்ள 243 பேரில் 122 பேர் ஆதரித்தால் மசோதா நிறைவேறிவிடும். ஆளும் கட்சி நினைத்திந்தால் மசோதாவிற்குத் தேவையான வாக்குகளைப்  பெற்றிருக்கமுடியும். ஆனால் அதற்கு முயற்சிக்காமலேயே நள்ளிரவு வரை காலந்தாழ்த்தி
அவையை ஒத்தி வைத்தது ஏன்? நிலைக் குழுவில் ஜால்ரா தட்டிய – அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு கோஷம் போட்ட –  பி.ஜே.பி.மக்களவையிலும், மாநிலங்களவையிலும் காட்டமாக லோக்பால் மசோதாவை எதிர்த்தது ஏன்?
ஒட்டு மொத்தமாக நடந்ததைப் பார்க்கும்போது எந்த ஓர் அரசியல் கட்சிக்குமே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விருப்பமில்லையென்பதே தெரியவருகிறது.  அல்லது 5 மாநிலத் தேர்தல்கள் முடியும்வரையாகிலும் ஒத்திப்போடலாமென அனைத்துக் கட்சிகளுமே எண்ணிக் கொண்டிருக்கலாம். லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதைவிட அதை வைத்து அரசியல் செய்வது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலிருக்கலாம்.
”ஊழலுக்கெதிரான இந்தியா” என்ற கோஷத்தோடு ஆக்ரோஷமாக வந்த அன்னா ஹஸாரே வேஷம் கலைந்து வெளிறிப் போயிருக்கிறார். ஊழலுக்கு எதிராக எனப் புறப்பட்டவர் காங்கிரஸிற்கு எதிராக எனத் திசை திரும்பியபோது அவரது முகமூடி கழன்று போனது. இந்தியாவில் ஊழலுக்கு எதிரான எழுச்சியை எழுப்புகிற தார்மிகத் தன்மை அன்னா ஹஸாரேவுக்குக் கிடையாதென்பது உண்ணாவிரதம் பிசுபிசுத்ததில் உறுதியானது.
5 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றும் நாடகம் தொடரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டம் வந்தால் மட்டும் ஊழல் ஒழிந்துவிடப் போவதில்லையென்று அரசியல்வாதிகள் கூறுவதும் கவனிக்கத்தக்கது. ஊழலை எதிர்த்து மாபெரும் எழுச்சி உண்டாகவேண்டும். மக்களின் எழுச்சியால் மட்டுமே சாதிக்கமுடியும். அத்தகைய மாபெரும் மக்கள் எழுச்சிக்காக அது வெகு விரைவில்ஏற்படுவதற்காக இறைஞ்சுவோம்.

News

Read Previous

முகங்கள்

Read Next

மதுரை பற்றி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *