ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

Vinkmag ad

தினமலர்- ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
______________
ஐஏஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணனுடனான எனது முதல் சந்திப்பே எனக்குப் பிரமிப்பை ஊட்டியது. அப்போது அவர் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்தார். அந்த காலகட்டத்தில் “தினமலர்” சார்பில் ஆண்டுதோறும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுவரும் “ஜெயித்துக் காட்டுவோம்” நிகழ்ச்சி பிரசித்தம்.
இத்தகு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பொறுப்பு எனக்கும் விளம்பரம் சேகர் தலைமையிலான குழுவினருக்கும் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி வழங்கியிருந்தார்.
இதுதொடர்பாக ஆசிரியருடன் நான் அனுதினமும் விவாதிப்பது வழக்கம். அவ்வாறான ஓர் உரையாடலின் போது அவருக்கு நான் ஓர் ஆலோசனையைத் தெரிவித்தேன்.
“ஜெயித்துக் காட்டுவோம்” நிகழ்ச்சிக்கு வருகின்ற மாணவர்களில் பெரும்பாலோர் கான்வென்ட் பள்ளிகளைசா சேர்ந்தவர்களும், உயர்தர குடும்பத்துக்குக் குழந்தைகளும் தான். ஏழை எளிய வீடுகளிலிருந்து வருவோர் மிகக் குறைவு. அத்தகைய மாணவர்களை ஈர்த்து, “ஜெயித்துக் காட்டுவோம்” நிகழ்ச்சி நடத்தினால் மிகப்பெரிய புண்ணியம் என் ஆசிரியரிடம் தெரிவித்தேன்.
“அவர்களை எப்படி விழா அரங்கிற்கு இழுப்பது?” என்று அவர் வினவினார்.
நான் தெரிவித்த யோசனை இதுதான்.
“தினமலர்” நாளிதழும் சென்னை மாநகராட்சியும் ஒருங்கிணைந்து, “ஜெயித்துக்காட்டுவோம்” நிகழ்ச்சியைச் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்காக மட்டும் என நடத்தவேண்டும். அனைத்து விழா ஏற்பாடுகளையும் “தினமலர்” பார்த்துக்கொள்ளும். சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை அரங்கில் அமர வைக்கும் பணியை மட்டும் சென்னை மாநகராட்சி கவனித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய ஏற்பாட்டின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு நாம் உரிய நலன்களை வழங்க முடியும்.
இதுதான் எனது ஆலோசனை.
ஆசிரியரோ, “கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமே!” என்றார்.
நானோ, “அனுமதியைத் தாருங்கள் போதும். ஜெயித்துகா காட்டுகிறோம்” என்று நம்பிக்கை ஊட்டினேன்.
“ஜமாய் பார்க்கலாம்” என்றார் ஆசிரியர்.
அதன்படி, விளம்பரம் சேகரைஸஅழைத்துக்கொண்டு நான் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தேன்.
திட்டத்தைத் தெளிய வைத்தேன். கேட்ட ஐந்தாவது நிமிடத்திலேயே அப்போதைய துணை ஆணையர் விஜயகுமாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். உரிய ஆணைகளைப் பிறப்பித்தார். அவரின் வழிகாட்டுதலின்படி விஜயகுமாரைச் சந்தித்தோம். விவரங்களை விளக்கினோம்.
ஐந்தாவது நிமிடத்திலேயே விஜயகுமார் தொலைபேசியை எடுத்தார். கலைவாணர் அரங்கத்தைத் தொடர்புகொண்டுத் தேதி குறித்து விட்டார்.
அனைத்துமே மாயாஜாலம் போல் நடந்து முடிந்து விட்டன. ஆசிரியரிடம் தெரிவித்தேன். அளவிலா களி பேருவகை எய்தினார்.
நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். மேடையில் ஆசிரியர் பேசினார். “என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய புண்ணியமாகக் கருதி மிகப்பெரும் ஆனந்தத்தில் இருக்கிறேன்” என்று மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி.
சென்னை மாநகராட்சியின் பள்ளிக்கூட மாணவர்களுக்கு “ஜெயித்துக் காட்டுவோம்” நிகழ்ச்சிகளின் மூலமாக அறிவூட்டிய வகையில் “தினமலர்” ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் பெருமை உண்டு. அனுமன் போல் அவர்களின் பணி. அனில் போல அடியேனின் பங்களிப்பு.
ஒரு முறை இத்தகு நிகழ்ச்சியில் மு.க.ஸாடாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவின் சிறப்புகளை அறிந்த அப்துல் கலாம், தானும் கலந்துகொள்ள என்னிடம் விழைவு தெரிவித்தார். இதனை ஆசிரியரிடம் குறிப்பிட்டேன். “ஜனாதிபதியை வைத்து விழாவா?” என் மலைத்து விட்டார். ஆனால் காரியம் கைகூடவில்லை. நான் ஓய்வு பெற்ற பின் கலாம் கலந்து கொண்டார்.
நான் “தினமலர்” நாளிதழில் இருந்து பணி நிறைவு பெறும் வரையிலும், “ஜெயித்துக் காட்டுவோம்” மேடைகளில் நேரடியாக ஈடுபட்டவன், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து மைக் பிடித்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியவன் அடியேன்தான் என்ற வகையில் இந்த வரலாற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
-ஆர்.நூருல்லா- ஊடகன் 17-6-2020

News

Read Previous

வரலாற்று மனிதர் – வள்ளல் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப்

Read Next

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *