‘யாரோ, தேச ராஜ துரோகி, யாரோ’

Vinkmag ad
‘யாரோ, தேச  ராஜ துரோகி, யாரோ’
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
9.2.2016 அன்று 2001 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் தாக்குதல் குற்றத்திற்கு ஆளாகி தூக்குத் தண்டனை பெற்ற அப்சல் குருவின் நினைவாக டெல்லி பல்கலைகழகத்தில் அனுசரிக்கப் பட்ட நினைவு தினத்தினை ஒட்டி எழ்ப்பப் பட்ட கோசங்கள் இந்திய இறையாண்மைக்கும், ராஜ துரோக செயலுக்கும் வித்திட்டது ஆகும் என்ற சர்ச்சைக்கு ஆளானது. அதனைத் தொடர்ந்து ஜவஹர்லால் பல்கலைகழகத்தின் மாணவர் தலைவர் 13.2.2016 இல் கைது செய்யப் பட்டார். அவரைத் தொடர்ந்து தலைமறைவான மாணவர்கள் உமர் காலித், அனிர்பவான் ஆகியோர் 23.2.2016 அன்று டெல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தனர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அவர்கள் மூவரும் தாங்கள் எந்த தேச மற்றும் ராஜ துரோக செயலிலும் ஈடுபடவில்லை என்று கூறினாலும், நாங்கள் நம்பத் தயாரில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருவதும் , அவர்களால் மாணவத் தலைவர் கன்காயக் குமார் டெல்லிக் கோர்ட்டு வளாகத்திலேயே தாக்கப் பட்டதும், அவர்கள் மீது ‘செடிசன்’ என்ற ராஜத் துரோக வழக்கு பதியப் பட்டதும் நீங்கள் அறிவீர்கள்.  இப்போது இந்திய கிரிமினல் சட்டம் 124-ஏ என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். “யாரொருவர் எழுத்து மூலமும், பேச்சு மூலமும், அல்லது சைகயினாலும் சட்டத்தால் அமையப் பெற்ற அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவது ராஜ துரோக செயலாக கருதப் பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனைக்குள்ளாவார்'” என்பதாகும்.
தேச மற்றும் ராஜத் துரோகம் என்று சொல்லும் வார்த்தைகள் அனைத்துக்குமே பிறப்பிடமாக இருப்பது இந்திய காலனி ஆதிக்கத்தின் அடிச்சுவடுகள்  என்றால் மிகையாகாது. 1857 ஆம் ஆண்டு முதலாம் விடுதலைப் போரில் இந்திய மக்கள் தங்கள் மத, இன வேறுபாடுகளைத் துறந்து ஒரு பேரெழுச்சியாக திரண்டு குரல் எழுப்பியது கும்பனி ஆட்சியாளர்களை அதிரவைத்தது. இனிமேலும் இந்திய மக்கள் தங்களது ஆட்சிக்கு எதிராக திரளக்கூடாமல் நசுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இயற்றபெட்டதே இந்த ராஜதுரோக சட்டம். 1909ஆம் ஆண்டு பிரிடிஸ் இந்திய அரசின் வைசிராயாக இருந்த லார்ட் மின்டோ தன்னிடம் கப்பம் கட்டும் 24 இந்திய அரசர்களுக்கு எழுதப் பட்ட
இந்த சட்டத்தின் முதல் பலியாக சுதந்திர போராட்ட வீரர் பால் கங்காதர திலக் அவர்கள் மீது மூன்று ராஜதுரோக வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து ‘பண்டே மாதரம்’ விடுதலைப் பாடலை எழுதிய அரபிந்தோ கோஸ்  கைது செய்யப் பட்டார். அதனைத் தொடர்ந்து லால லஜ்பத்ராயும் கைது செய்யப் பட்டார். மகாத்மா காந்தி ‘யங் இந்தியா’ என்ற பத்திரிக்கைக்கு இளைஞர் எழுச்சிக்காக எழுதப் பட்ட கடிதத்திற்கு 1922 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். 1934 ஆம் ஆண்டு கமல் கிருஷ்ணா என்பவர் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு பிரிடிஸ் அரசு தடை விதித்ததினை எதிர்த்து எழுதியதிற்காக ராஜதுரோக வழக்கு தொடரப் பட்டது. பின்பு அவர் பர்மா மாந்தலைக்கு நாடு கடத்தப் பட்டார்.
இந்தியா சுதந்திரம் 1947ல் அடைந்த பின்பும், 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் இயற்றப் பட்ட பின்பும், சட்டம் 19 பிரிவு(1)(எ)யில் சுதந்திர ஜனநாயக இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுய சிந்தனையுடன் பேசுவது, எழுதுவது போன்ற செயல்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட்ட பின்பும், இந்த ராஜதுரோக வழக்குகளை தொடர வேண்டுமா என்பதுதான் கேள்வியே!
பீஹார் மாநிலத்தில் 1962 ஆம் ஆண்டு கேதர்நாத் மீது தொடரப்பட்ட ராஜதுரோக வழக்கில் சுப்ரீம் கோர்ட், ‘ஒரு அரசியலமைப்பு மீது வெறுப்பு உண்டாக்கி வன்முறையினைத் தூண்டும் வகையில் எழுதாத, பேசாத வரை அவர் மீது ராஜதுரோக வழக்குத் தொடரமுடியாது என்று தீர்ப்புக் கூறியுள்ளது. 1984 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் இந்திய ராணுவம் அம்ரிஸ்தர் கோல்டன் கோவிலில் நுழைந்ததினை எதிர்த்து, சுட்டுக் கொள்ளப் பட்டார். அதனை பாராட்டும் விதமாக சீக்கிய இளைஞர் பல்வந்த் சிங் மற்றும் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சினிமா அரங்கம் முன்பு  ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கம் இட்டதிற்காக ராஜதுரோக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கும் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில், ‘தனி நபர் தங்கள் கொள்கைகையினால் ஈர்க்கப் பட்டு சாதாரணமாக எழுப்பப்படும் கோசங்கள் ஒரு அரசாங்கத்தினை பயமுறுத்தும் செயலாகாது’ என்று கூறியுள்ளது.
2003 ஆம் ஆண்டு வி.எச்.பி தலைவர் பிரவீன் டகோடியா ராஜஸ்த்தான் மாநிலத்தில் தனது அமைப்பின் உறுப்பினர் பாதுகாப்பிற்கு சூலாயிதங்கள் வழங்கியதாக அவர் மீது ராஜ துரோக வழக்கு தொடரப்பட்டது. 2005 ஆம் ஆண்டு அம்ரிஸ்தரில் சீக்கிய கோவிலில் ராணுவம் நுழைந்ததினை நினைவூட்டும் தினமாக முன்னாள் ஐ.பீ.எஸ் அதிகாரி சிரம்ஜித் சிங் மான்  மீதும் அதே வழக்குத் தொடரப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது கட்டுரை எழுதியதிற்காக  ‘சூரத் சாம்னா’ பத்திரிக்கை எடிட்டர் மனோஜ் சிண்டே மீதும் இதே வழக்குப் பதியப்பட்டது. 2010 ஆம் ஆண்டு டாக்டர் பினாயக் சென் சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது பாதுகாப்பு படைகள் தாக்குதல் சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்ததிற்கு அதே வழக்குத் தொடரப்பட்டு, தண்டனையும் வழங்கப் பட்டது. ஆனால் உச்ச நீதி மன்றம் , ‘அவர் ஒரு கொள்கை மீது அல்லது மக்கள் மீது அனுதாபம் காட்டுவது ராஜதுரோக வழக்காகாது’ என்று தீர்ப்புக்  கூறியது.
ஏன் இன்றைய இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் மீது, தேசிய நீதி பரிபாலன தீர்ப்பாயம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து கருத்து தெரிவித்ததிற்காக அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு அலஹபாத் உயர் நீதி மன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
தமிழ் நாட்டில் 2015 ஆம் ஆண்டு மக்கள் கலை இலக்கிய கழகத்தினைச் சார்ந்த கோபன் இங்குள்ள மதுவின் சீரழிவினை ஆதரித்தும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் நாட்டுப் புறப் பாடல் பாடியதிற்காக சிறையில் அடைக்கப் பட்டு, பின்பு நீதி மன்றம் விடுதலை செய்தது உங்களுக்குத் தெரியும்.
அதனையே தான் டெல்லி ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவர்கள் மீதும் தொடரப்பட்ட ராஜதுரோக வழக்குப்பற்றி சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்  துள்சி  கூறும்போது,’இளைஞர்கள் ஒரு கொள்கைக்காக கோசம் எழுப்புவதும், வன்முறையினைத் தூண்டாதவாறு சட்டத்திற்குட்பட்டு அமைந்த அரசினை கவிழ்க்க்கும் நோக்கத்தோடு குரல் கொடுக்காதவரை  ராஜதுரோகம் ஆகாது’ என்று கூறுகிறார்.
ஆனால் குஜராத்தில் 2015 ஆம் ஆண்டு படேல் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடியபோது அதன் இளம் தலைவர், ஹர்திக் படேல், ‘இட ஓதிகீடுக்காக தற்கொலை செய்வதினை விட, ஒரு  போலீஸ்காரரை கொலை செய்து விடுவது மேல்’ என்று வன்முறை தூண்டும் விதமாக பேசியதால் இன்னும் ஜெயில் காம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கின்றார்.
இன்னும் சிலர் இந்தியன் ஒருவர் , ‘பாரதமாதகி ஜே’ என்று அரசியல் சட்டத்தினால் இல்லாததை சொல்லவில்லையோ அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், மற்றும் சிலர் அவர் தலையினை கொய்யலாம் என்றும், இன்னும் சிலர் அவர் நாக்கை வெட்டலாம் என்றும் வன்முறையினை தூண்டும் அளவிற்கு பேசியும், அதனை எதிர்த்து என் தலையினை வெட்டினாலும் நான் அப்படி சொல்லமாட்டேன் என்று ஒருவரும் தேவையில்லாத பிரச்சனைகளை ஈடுபடக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத்தே கூறிவிட்டார். இருந்தாலும் சமீபத்திலும் ராஜ் தாக்கரே போன்றோர் எம்.ஐ.எம். தலைவர் ஒவைசி அவர்களுக்கு பேட்டை தாதா அளவிற்கு ஒரு சவால் விட்டிருக்கின்றார், அது என்ன தெரியுமா, ‘நீ மும்பைக்கு வா, உன் தலையினை வாங்குவேன்’ என்று கூறுகிறார். இவை அனைத்தும் அவரவர் அமைப்பினரிடையே தங்கள் செல்வாக்கினை அதிகரிக்கும் செயலாகவே கருத வேண்டுமே அல்லாது பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஆகவே இந்திய அரசியல் சட்டம், இந்திய கிரிமினல் சட்டம் ஆகியவற்றினை மதித்து ஒவ்வொருவரும் அதனை தெளிவாக தெரிந்திருந்தால் இதுபோன்ற வீணான சர்ச்சைகள் வராது. இருந்தாலும் பிரிடிஸ் இந்திய அரசால் பேச்சுரிமை, எழுத்துரிமைகளை நசுக்குவதிற்காகவே கொண்டு வரப்பட்ட ராஜதுரோக சட்டம் இந்திய சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் ஆகியும் அதனை தொடர்வதும், அதனை வைத்து அரசுகள் மீது எழுப்பப்படும் உண்மையான கோசங்கள், ஆர்ப்பாட்டங்கள் நசுக்கப் படுவதும் கேளிக்கூத்தாகாதா என்று அரசினை வழி நடத்தும் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிந்தித்து செயலாற்றி அதற்கான தீர்வாக திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுவது சரியா?
 

News

Read Previous

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Read Next

சித்திரையை வரவேற்போம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *