மொழி என்பது மனிதவுடைமை..!

Vinkmag ad

மொழி என்பது மனிதவுடைமை..!
அருந்தமிழும் அன்றாட வழக்கும்

முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு
=================================================================
மக்கள் தமக்குத் தாமே ஆர்வத்தோடு படைத்து வளர்த்துப் பல்லாண்டுகளாகக் காத்து வரும் அரிய திறமே மொழியாகும். மாந்தர்க்கு அமைந்த தனிச்சிறப்புகளில் தலையாயதாக அமையும் புலப்பாட்டு உணர்வே அறிவை மாந்தரிடத்தே வளர்த்து உயர்த்தும் திறனும் ஒரு மொழிக்கே வாய்ப்பதாகும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் மாணவராகவும் ஒருசேர அமைகின்றனர். மொழியை வளர்ப் பவரும் மக்களே மொழியால் வளர்பவரும் மக்களே. இவ்வாறு மக்களின் மனவுணர்வும் வாழ்வு நலங்களும் மொழியின் துணையோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றன. கருத்தைப் புலப்படுத்தும் கருவியே மொழியென்பது தொடக்கக் கருத்து. உலகத்தில் எப்பொருளும் கருவிகளே. உடம்பும் ஐம்பொறிகளும் ஊர்திகளும், தகவலியங்களும் கருவிகள்தாம். இவற்றின் தூய்மைக்கும் செம்மைக்கும் முழுமைக்கும் எவ்வளவு ஆய்வு நடத்துகின்றோம். உடல் நலத்துக்கென உலகம் எவ்வளவு கோடிகள் செலவழிக்கின்றது.
உடல் ஒரு கருவிதானே என்று பேசுவது அறியாமையாகாதா. மொழி என்பது மனிதவுடைமை, பண்டு, இன்று. நாளை என எக்காலத்துக்கும் இயங்குடைமை நிலை பெறுமாறு எண்ணுதியேல் என்று திருநாவுக்கரசர் கேட்டபடி நல்ல தமிழ்க் கிளவிகள் வாழ வளர வாய்ப்பு வழங்குவது நமது கடமையாகும் என்று மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் மொழிந்தது நினைவு கூரத்தக்கது. தூய மொழியறிவு வீடுபேற்றை நல்கும். மொழித் திறத்தின் முட்டறுத்த நல்லோன் கட்டறுத்து வீடு பெறும்என்று தமிழ் மக்கள் மொழிநலத்தைப் போற்றினர். தமிழ்மொழியை வகையறுத்து வளர்த்த இலக்கியங்களும் இலக்கணங்களும், தொல் பழங்காலத்தேயே தோன்றின. இவ்விலக்கியங்களின் மிகுதியாலும், வாழ்வியற் பொருண்மைகளாலும் தமிழர்களிடையே மொழிவளர்ச்சி நீண்ட காலமாக நிலைத்துள்ளது.

ஒரு மொழியின் தனித்தன்மையோடு அம்மொழியில் இடம் பெறும் பிறமொழிச் சொற்கள், அமைப்பு முறைகள், வழங்கலாகும் பொருட்பெயர்கள், செயன்மைகள் ஆகியவை பற்றிய சிந்தனையும், மொழியை மேம்படுத்தி வளர்க்கும் கடப்பாடும் நாகரிகம் பரவப் பரவ மொழிசார்ந்த மக்களிடம் காலந்தோறும் தோன்றலாயின.
இலக்கியத்தில் வளம் பெற்ற மொழியே புலவர்களால் என்றும் பாராட்டப் பெற்றது. காலம் செல்லச் செல்ல அரசியல் தலைமை பூண்ட ஒரு மொழியே சிறப்பான உயர்வுபெறும் வாய்ப்பும் உருவாயிற்று. வணிக, ஊடாட்டம் வலுப்பெறும் நிலையிலும் மொழிகள் முதன்மை பெறும் இவ்வாறு மக்கள் மனப்போக்குக்கும், பெருகி வரும் வாழ்க்கைத் தேவைகளுக்கும் ஏற்ப, அந்தந்தக் கால நிகழ்வின் பயனைக் கருதியே ஒரு மொழி உயர்வையோ தாழ்வையோ எய்துவது இயல்பாகும். இதனை உலக நாடுகளின் வரலாறும் எடுத்துக் காட்டுகிறது.
மொழியின் சிறப்பு வேறு என்றும், அதில் அமைந்த இலக்கியத்தின் சிறப்பு வேறு என்றும் இரண்டையும் தனித்தனியாகக் கருதுவோரும் உண்டு. ஒரு மொழியில் உயர்ந்த இலக்கியங்கள் அமைவது எதிர்பாராத நிகழ்ச்சியென்றும் உயர்ந்த இலக்கியங்கள் இருப்பதால், அந்த மொழி சிறந்த மொழி எனக் கருதலாகாது என்பது மொழியறிஞர் எஸ்பர்சன் முடிவு. இடைக்காலத்திலே அரசியல், வாணிகத்தின் மூலம் சிறந்த மொழியே உயர்ந்தமொழியாக மதிக்கப் பெற்றது. இந்த நூற்றாண்டில் அறிவியல், தொழிலியல் துறைகளில் முன்னேறிய மொழியே செல்வாக்குப் பெற்றுள்ளது. மொழியைப் பற்றிய சிந்தனை மலர மலர, ஒரு மொழியில் இடம் பெற்ற பிறசொற்களின் வரவுகளும், இழப்புகளும் அறிஞர்களால் நினைக்கப்பட்டன.
பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்ததையும், மொழிக்கலப்புக் காரணமாகக் கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றால் விளைந்த மாற்றங்களையும் அறிஞர் ஆராய லாயினர். ஒரு மொழியில், பிறமொழிக் கலப்பைத் தடுப்பதும், மொழியின் தூய்மையைக் காப்பதும் தனி ஒருவரால் இயல்வதில்லை. மொழி வயப்பட்ட மக்களின் அறிவாற்றலாலும், முயற்சியாலுமே முடியலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தாய்மொழிப் பெருமித வெளிப்பாடாகவே தமிழகத்தில் மொழியுணர்வு ஓங்கிய நிலையில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது.
தனித் தமிழ் இயக்கம் தோன்றிய வரலாற்றை, மறைமலையடிகளாரின் மகளார் நீலாம்பிகை அம்மையார் குறித்தபோது, ‘ஒரு நாள் மாலையில் தந்தையும் நானும் மாளிகைத் தோட்டத்தில் உலாவும்போது, தந்தையார் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாத் திருமுறையில்,
‘’பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப்பெறும் தாய்மறந்தாலும் உற்றதேகத்தை உயிர்மறந்தாலும் உயிரைமேவிய உடல்மறந்தாலும் கற்றநெஞ்சகம் கலைமறந்தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.
என்ற பாடலைப் பாடினார். அந்நாளில் அடிகளார், ‘நீலா இப்பாட்டில்தேகம்என்ற வடசொல்லை நீக்கி, அவ்விடத்தில் அதற்கு ஈடாக யாக்கை என்ற தமிழ்ச்சொல்லிருக்குமானால், அவ்விடத்தில் செய்யுள் ஒசையின்பம் பின்னும் அழகாக அமையும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால், தமிழின் இனிமை குன்றுகிறது. அத்துடன் நாளடை வில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று, அப்பிற மொழிச் சொற்களுக்கு நேரே தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்து மறைந்து விடுகின்றன. இவ்வாறே அயல்மொழிச் சொற்களை ஏராளமாக நம் மொழியில் பெய்து எழுதியதாலும் பேசியதாலும் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் மறைந்தே போயின என்று கூறினார். அது கேட்ட நான், தந்தையாரைப் பார்த்து, ‘அப்படியானால் இனிமேல் நாம் அயல் மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சியைக் கைவிடாது செய்தல் வேண்டும்என்று ஆர்வத்துடன் கூறினேன். எனது அன்பார்ந்த வேண்டுகோளை ஏற்றுத் தந்தையார், சுவாமி வேதாசலம் என்னும் தம் வடமொழிப் பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் எனவும், தாம் நடத்தியஞானசாகரம்என்னும் வெளியீட்டிற்கு அறிவுக்கடல் என்றும், ‘சமரச சன் மார்க்க நிலையம் என்ற தம் மாளிகைப் பெயரைப் பொது நிலைக்கழகம்எனவும் மாற்றினார், என்று குறித்துள்ளார். தமிழ்மொழி வளம் மிகுந்தது. நிறைந்த சொற்செல்வமுடையது. இந்நிலையில் பிறமொழிகளினின்றும் சொற்களைக் கடன் வாங்கினால், அதன் வளர்ச்சி குன்றும் என்ற கருத்தை நீலாம்பிகை அம்மையாரும் இறுதி வரையில் தம் தந்தையாரைப் போலவே வலியுறுத்தி வந்தார். சிலர் வினாக்கள் தொடுத்தபோது, அம்மையார் விளக்கிக் கூறிய மறுமொழி இதை மேலும் தெளிவாக்குகிறது.
ஒரு செல்வவான் பெரிதும் முயன்று தன் பொருளையே தான் பெருக்குவானாயின், மேன்மேலும் செல்வவானாதல் கூடும். அவன் பிறரிடத்துக் கடன் வாங்கித் தன் பொருளைப் பெருக்க நினைப்பானாயின், அவன் செல்வம் எங்ஙனம் பெருகும்? கடன் தந்தோர் பொருளை இவன் பொருளெனக் கூறல் பொருந்துமோ? அது போல நிறைந்த சொற்செல்வமுடைய தமிழ்தான் பிறமொழியினின்றும் சொற்களைக் கடன் வாங்கிக் கொள்வதால், தான் எவ்வாறு வளர்ச்சியடையும்? இன்னும் அளவிற்கு மிஞ்சிய செல்வமுடையான் ஒருவன் தன் பொருளைச் செலவழியாது பிறனொருவனிடம் சென்று கடன் கேட்பானாயின், அப்பெருஞ்செல்வனை நோக்கி அறிவுடையார் எள்ளி நகையாடிப் பேசுவர். அதுபோலத் தமிழர்கள் தம் மொழியின்கண் அளவற்ற சொற்கள் அமைந்திருத்தலைக் கண்டும், அவற்றைப் பயன்படுத்தாது, பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கித் தம் தமிழைப் பெருக்குகின்றோமென்று கூறுதல் எங்ஙணம் பொருந்தும் கூறுமின்கள்.
எனினும், அந்நாளிலேயே பிறசொற்கள் கலப்பதைக்கடன் கோடல்என்று கூறுதலாகாது. மொழிக்கு வளஞ்சேர்த்தல், சொற் செல்வத்தைப் பெருக்குதல்என்றே கருதுவோரும் இருந்தனர். அறிவாலும், நாகரிகத்தாலும் சிறந்து விளங்கும் ஒரு கூட்டத்தார் ஒரு நாட்டிலிருப்பின், மற்ற நாட்டிலுள்ளார் தாம் தொகுத்த பண்டங்களையும் பொருள்களையும் விலைப்படுத்தும் பொருட்டு அந்நாகரிக மக்களிடம் கொணர்ந்து வைப்பர். இன்னும் பல்வகை இடையீடுகளாலும், தம் நாடு துறந்து பிற நாடு வதிவோர் எனப்புலம் பெயர்வோரும் உண்டு. இங்ஙனம் வாணிகப் போக்கினரும், வாழ்வு தேடிக் குடிபெயர்வோருமென்னும் இரு கூட்டத்தாரும் நாகரிக வாழ்க்கையுடைய கூட்டத்தாருடன் வந்து கலப்பது இயற்கை. இங்ஙனம் நேரும் மக்களின் கலப்பால் அவர் பேசும் ஒருமொழிச் சொற்கள் பிறமொழியிற் கலவா நிற்கும். இவ்வாறு நேரும் கலப்பு இயற்கை ஏதுவாகும். இனிச் செயற்கையாகப் பண்டங்கள் விற்றற்கும், குடிபெயர்தற்கும், ஒரு நாட்டார் தம் நாடு நீங்கிப் பிறிதொரு நாட்டிற் புகுந்து அந்நாட்டினரோடு ஒன்றி வாழுங்காலத்து அவர்தம் மொழிச் சொற்கள் மற்றவர்பாற் கலக்கும். இவ்வியற்கையைத் தடுத்தல் அரிதாம் என்ற கருத்தும் பரவியது. எனினும், தனித்தமிழ் இயக்கத்தின் பெருந்தொண்டால், பிறமொழிக் கலப்பு மிகுதியாதலைக் கடந்த நாற்பதாண்டுகளாகத் தடுக்க முடிந்தது. எனினும், கலப்பு நிகழாமல் எந்த ஒரு மொழியுமே நிலவ முடியாது என்பதை உலகின் பல மொழிகளைப் போலத் தமிழும் மெய்ப்பித்து வருகிறது. பொதுவாக நோக்கினால் ஒரு மொழி கருத்தைப் புலப்படுத்தவும், சிந்தனையை வளர்க்கவும் பல வற்றை நினைவிற் கொள்ளவும், வேண்டியவற்றைக் காலத்தோடு விளைந்தவற்றை அறியவும் துணையாகிறது.
தமிழகம் பல மொழிகளின் கொள்கலமாக மாறியிருந்த காலங்கள் உண்டு. முகலாய மன்னர், மராத்திய அரசர், தெலுங்கு மன்னர், வெள்ளையர் இவரைத் தவிர ஆதிக்கம் எனப் பல்வேறு இனத்தாரின் ஆட்சிக் காலங்களில் தமிழகம் மொழி, கலை, பண்பாட்டு, நாகரிக நிலைகளில் பல மாற்றங்களைப் பெற்றது. புதியவர் தொடர்பால், புதிய பொருள்களின் வரவால், பல்கிப் பெருகிய வாணிகத்தால், பார் முழுவதும் பரவிய அறிவியல் வளர்ச்சியால், அயன்மொழிச் சொற்கள் காலந்தோறும் அன்றாட வழக்கில் பெருகலாயின. ஆர்மீனியன் தெரு, போர்த்துகீசியத் தெரு, டச்சுத் தெரு, சுல்தான் தெரு, தானிசுத் தெரு, செளகார் பேட்டை நாயக்கர் தெரு, செளராஷ்டிரத் தெரு எனத் தமிழகத்தில் இன்றும் தெருக்களின் பெயர்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.
தமிழில் கலந்த பிறமொழிச் சொற்களை அச்சொற்கள் பல்லாண்டுகள் நம்மிடையே விரவியமையால், தமிழாகவே கருதிப் பயன்படுத்தி வருகிறோம். ஜன்னல்மேஜைஎன்ற சொற்களில் வட எழுத்துகளை நீக்கிச் சன்னல், மேசை என எழுதியும், அன்னாசி, கொய்யா, தோசை முதலிய சொற்களைத் தமிழ்ச் சொற்கள் என்றும் நாம் கருதி வழங்குகிறோம். ஆனால் சன்னலும், மேசையும் தமிழுக்குரியவை அல்ல, போர்த்துகீசியச் சொற்களான அவை நம்மிடையே வழங்கியமையால், அச்சொற்களுக்குப் பொருந்திய தமிழ்ச் சொற்களை நாம் இழந்தோம் என்றே கூறலாம். சன்னல் என்னும் சொல்லால், காலதர், வளியதர், பலகணி, மான்கண், மீன்கண் முதலிய அருந்தமிழ்ச் சொற்கள் மறைந்தன. மேசை என்னுஞ் சொல்லால் படிமனை, பலகை, மேற்பலகை முதலியன வழக்கிழந்தன.
முனைவர் ஔவை ந.அருள், தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

 

News

Read Previous

புத்தக மொழி

Read Next

தினமும் தூங்கியும் பொழுது போகலை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *