முன்னை இட்ட தீ

Vinkmag ad
முன்னை இட்ட தீ 
எஸ் வி வேணுகோபாலன் 
காவல்துறையினர் வாகனங்களுக்குத் தீ வைத்த காட்சியை வாட்ஸ் அப்பிலும், தொலைக்காட்சி சானல்களில் முதன்முறை பார்க்கிறவர்கள் பலர் அதிர்ந்து போனதை – இன்னும் நம்ப முடியாமல் தவிப்பதைப் பார்க்க முடிகிறது. கால காலமாகப் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள், தொழிற்சங்க இயக்க அனுபவம் உள்ளவர்கள், ஜனநாயக இயக்கங்களில் வீதியில் இறங்கியவர்களுக்கு இது புதிதாகவே இருந்திருக்காது.
எனக்கு இப்படியான அதிர்ச்சி தோன்றிய ஆண்டு 1991. தேதி ஜனவரி 29 என்று நினைவு. இராக் நாட்டுக்கு எதிரான வளைகுடா போர் (சீனியர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோது நடத்தப்பட்டது) தொடுக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை மாநகர அனைத்துத் தொழிற்சங்க ஐக்கிய மேடையின் சார்பில் கண்டனப் பேரணி நடத்தவும், நிறைவாக ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாகப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்றும் முறைப்படி காவல் துறை முன் அனுமதி பெற்று அண்ணா சாலை கலைக்கல்லூரி அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட இருந்தது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறையில் பணியாற்றுவோர், பல்வேறு துறைகளில் இயங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள், வாலிபர்-மாதர்-மாணவர் சங்கத்தினர் என பல்லாயிரம் பேர் மெல்ல மெல்லத் திரண்டு கொண்டிருந்த நேரமது.
எந்த முன்னறிவிப்புமின்றி, அமைப்பாளர்களை அழைத்துக் கூடப் பேசாமல், என்ன ஏதென்று சொல்லாமல், அனைவரையும் திடீர் என்று கலைந்து போகுமாறு காவல்துறை கட்டளையிட்டது. ஏனென்று கேட்கப் போனவர்களை நோக்கி காவல் துறையின் லத்திகள் உயர்ந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கையிலிருந்த கொடிகள், கம்புகள், தட்டிகள், பதாகைகள் பிடுங்கப்பட்டன. அரை மணி நேரத்திற்குள் பல முனைகளிலிருந்தும் சூழ்ந்த காவல் படை பேரணிக்காகக் காத்திருந்தவர்களை நாலாப்புறமும் கம்புகளைச் சுழற்றி விரட்டிக் கொண்டே இருந்தது. துணிச்சலாக நின்று நியாயம் கேட்ட சிலரைச் சரமாரியாக அடித்து, கைது செய்து ஏற்கெனவே கொண்டு வந்து நிறுத்தப்பட்ட வேன்களில் ஏற்றத் தொடங்கியது. பெண்களைத் தாக்குதலில் இருந்து தற்காத்து நிற்க முன்வரிசையில் அரணாக நின்ற ஆண்கள் கடுமையான தடியடிக்கு உட்பட்டனர். அடுத்து கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு.
அப்போதுதான் பார்த்தேன், காவல் துறை என்னென்னவெல்லாம் செய்யுமென்று. ஸ்பென்சர் கட்டிடத்திற்கு எதிராக ஒரு சிறிய கட்டிட முகப்பில் ஒரு சிறிய இடைவெளிக்குள் ஐம்பது பேரோடு கலந்து நின்று கொண்டிருக்கையில், ஆள் அரவமற்றுப் போயிருந்த அந்த நெடுஞ்சாலையில் எங்களுக்கு மிக அருகே நேர் எதிரே, தட்டிகளைச் சுமந்து வந்திருந்த ஒரு புத்தம்புதிய சைக்கிள் ரிக் ஷாவை காவல் துறையினர் அடித்து துவம்சம் செய்தனர். எங்கள் கண்ணெதிரே அது திடீர் என்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. எந்தக் கூச்சமும் இல்லாமல், கேட்பாரின்றிக் கிடந்த ஒரு மோட்டார் சைக்கிளை இழுத்து வந்து அதையும் தங்களது சட்ட ஒழுங்கு பாதுகாப்பு சத்திய வேள்வியில் போட்டு போலீஸ்காரர்கள் எரித்ததைப் பார்த்து அதிர்ந்து போனதை வாழ்நாள் மறக்க முடியாது. தொலைக்காட்சி சானல்கள் இல்லை. புகைப்படக்காரர்கள் எப்போதோ விரட்டி அடிக்கப்பட்டிருந்தனர். எந்தச் சாட்சியப் பதிவுகளுக்குள்ளும் சிக்கிக் கொண்டுவிடாதபடிக்கு ஏன் இந்த வேலையைச் செய்தனர் என்ற கேள்விக்கு மறுநாள் காலைதான் விடை கிடைத்தது. அதற்குள் நாங்கள் இருந்த பக்கமும் தடியடி நடத்தப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் ஒரு சிலர் நள்ளிரவு நேரத்திற்கு அப்பால் வெளியே அனுப்பப்பட்டதும் நடந்து முடிந்திருந்தது. காலை நாளிதழில், “ஆர்ப்பாட்டக்காரர்கள் படு பயங்கரமான ஆயுதங்கள், அமில பல்புகள் போன்றவற்றை வைத்திருந்ததாகவும், நெடுஞ்சாலையில் கொடும்பாவி போட்டு எரித்ததாகவும், பொது வாகனங்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்து எரித்ததாகவும் அவற்றை அடக்கவே காவல்துறையினர் இலேசான தடியடி பிரயோகம் மேற்கொள்ள வேண்டி தள்ளப்பட்டனர்” என்றும் செய்தி படித்ததும் எல்லா வேதனைகளையும் மறந்து மனம் விட்டு உரக்க சிரித்ததும் நினைவுக்கு வருகிறது. (அமெரிக்க தூதரகத்தின் நிர்பந்தத்தினால்தான் அந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்க முடியும் என்பதைப் பின்னர் மேலும் வலுவான ஒரு கண்டனப்பேரணி நடத்துகையில் தலைவர்கள் விளக்கினர். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக அரசு. ஆனால், இதில் நகைமுரண் என்னவெனில், அடுத்த இரண்டாம் நாள் சந்திரசேகர் பிரதமராயிருந்த மத்திய அரசு 356ஐப் பயன்படுத்தி திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டது. அதற்கு எதிராகவும் இதே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் பிப் 6 அன்று வீதியில் இறங்கினர் என்பது வரலாறு!)
நேரில் பார்த்ததுதான் அது முதல் முறையே தவிர, வரலாறு நெடுக, ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான முழக்கங்களை, கலகக்குரல்களை, எதிர்ப்பின் பிரகடனங்களை எப்படி அடக்கி ஒடுக்கினர் என்பதை உலக நாடுகளின் வரலாறுகளும், உள்ளூர் விஷயங்களும் ஏராளமாகக் கேள்விப்பட்டு தான் இருக்கிறோம். ஆத்திரமூட்டல் என்ற சொல்லை, ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி மிக அழகாகப் பயன்படுத்தியே மூர்க்கமான தாக்குதலில் இறங்கும். அந்த ஆத்திரமூட்டலை மிக நேரத்தியாகத் தங்களது ஆட்களையோ, தங்களது சொல்படி நடக்கக் கிடைக்கும் கைக்கூலிகளையோ வைத்துத் தாங்களே செயற்கையாக ஒரு பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்கி, அதன் மூலம் தங்களது ஒட்டுமொத்த படையினருக்கும் வெறியூட்டி அதிரடி தாக்குதலில் இறங்குவதை வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் மூலம் நிரூபிக்க முடியும்.
அண்மையில் கூட  ஜனவரி 8 அன்று, கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கோவை பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஒரு ரவுடியைத் தூண்டிப் பின் அவனது மரணத்தை முன்வைத்து நான்கு தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்ட 1946ம் ஆண்டு நிகழ்வின் வரலாறு அது. 1968ல் கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்கள் செங்கொடிச் சங்கம் அமைக்கவும், நில உடைமையாளர்கள் நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைத்து, வன்மத்தோடு அவர்களை ஒடுக்கப் புறப்பட்டனர். அப்போதும் அவர்களது கையாள் ஒருவன் தாக்கப்பட்டதாக ஓர் ஆத்திரமூட்டலை முன்வைத்து, காவல் துறை வாகனங்களையே பயன்படுத்தி கீழ்வெண்மணி கிராமத்திற்குள் பெரும்படை புகுந்து கிடைத்தவர்களை எல்லாம் விரட்டிக்கொண்டு போய், இராமையா என்பவரது குடிசைக்குள் அடைக்கலம் புகுந்த 44 பேரையும் எரித்துக் கொன்றது. பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ண நாயுடு கார் வைத்திருப்பவர், சமூக அந்தஸ்து உள்ளவர். அவர்போய் குடிசைக்குத் தீ வைப்பது போன்ற வேலையைச் செய்திருப்பார் என்பதை இந்த நீதிமன்றம் நம்பவில்லை என்று விடுதலை செய்தனர்!
உலகத் தொழிலாளர் போராட்டங்களுக்கெல்லாம் ஆதி போராட்டம் என்று வருணிக்கத்தக்க மே தின போராட்ட வரலாறும் இத்தகையதுதான்! எட்டு மணி நேர வேலை என்ற உரிமை முழக்கத்திற்காக 1886ல் மே முதல் நாள் அன்று அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பல்லாயிரம் பேர் திரண்டபோது, தேவையற்ற வன்முறையைக் காவல்துறை தானே அதில் உருவாக்கித் தடியடி நடத்தியது. அதைக் கண்டித்து, மே 3ம் தேதி மீண்டும் ஒரு கண்டன இயக்கத்தைத் தொழிலாளர் நடத்தினர். அதிலும் காவல்துறை முதலாளிவர்க்கத்திற்கு ஆதரவான நிலையெடுத்து தொழிலாளரைக் கடுமையாகத் தாக்கியது. எனவே, பன்மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மே 4ம் நாள், ஹே மார்க்கெட் எனும் சதுக்கத்தில் தொழிலாளர் ஆவேசத்துடன் திரண்டபோது, சார்ஜெண்ட் ஒருவன் தாக்கப்பட்டதாக காவல்துறை தானே ஒரு ஜோடனை செய்து தொழிலாளர் போராட்டத்தில் கண்மூடித்தனமாக மிகப்பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. அப்போது பெருகிய குருதியில் நனைத்தெடுத்த ஆடைகளில் இருந்தே தொழிலாளருக்கு செங்கொடி உருவானது என்பார்கள். அந்த வன்முறைக்குத் தொழிலாளர் இயக்கத் தலைவர்கள் மீதே பழிபோட்டு முக்கியமானவர்களைச் சிறையிலடைத்து போலி விசாரணை நடத்தி, அடுத்த ஆண்டில் நான்கு பேரைத் தூக்கில் போடவும் செய்தனர். அதையடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாத நேரத்தில், தண்டனை தவறானது, சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கும் அந்த வன்முறைக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் சொன்னது.
சுதந்திர இந்தியாவில் இத்தகு வரலாறுகள் எண்ணற்றவை உண்டு. சமச்சீர்க் கல்வி கோரிக்கைக்காகப் போராடியவர்கள், கள்ளச் சாராயத்திற்கு எதிராக- கட்டைப்பஞ்சாயத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுபவர்கள் – கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் யாரையும் காவல் துறையின் சட்ட ஒழுங்கு தருமம் மன்னிப்பதில்லை. மிக அண்மையில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்-வாலிபர்-மாதர் இயக்கத்தினரை, சென்னை மேடவாக்கம் பகுதியில் காவல்துறை மிக மோசமாகத் தாக்கியது. அதைப் புகைப்படம் எடுத்த நிருபரின் காமிராவைப் பிடுங்கி அந்தப் படங்களை அழித்துவிட்டு வெகுநேரம் கழித்து காமிராவைத் திரும்பித் தந்தது காவல்துறை. தாக்குதல் ஏனென்று கேட்டதற்கு, போராட்டக்காரர்கள் பொது வாகனங்களை சேதப்படுத்தினர் என்று எழுதி வைத்துக் கொண்டனர்.
ஆனால், மெரினா நிகழ்வில், காவல் துறை தப்பமுடியாதபடி ஸ்மார்ட் ஃபோன் கிளிக்குகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டனர். இதில் என்ன கொடுமை என்னவெனில், ஆளும் கட்சி பிரதிநிதி ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் இதைப்பற்றிப் பேசுகையில் சமூக விரோதிகள் போலீஸ் வேடத்தில் வாகனங்களுக்குத் தீ வைத்திருக்கலாம் அல்லவா என்று கேட்டார். பாவம், நூற்றுக் கணக்கில் போலீஸ் வேடத்தில் சமூக விரோதிகள் வந்துவிட்டனரா என்பதை அவர் விளக்கவில்லை.
இப்போது ஆட்சியாளர்களுக்கு அல்லது காவல் துறைக்கு ஏன் கிலி பிறந்தது என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் தொடங்கியுள்ளது. வளைகுடாப் போருக்கு எதிரான அந்தக் கண்டன இயக்கத்திற்குப்பிறகு அண்ணா சாலை வழியாக எந்த ஜனநாயக இயக்கமோ, ஊர்வலமோ நடத்த இயலாதவண்ணம்  படிப்படியாக அனுமதி மறுத்து, சென்னையில் இன்னின்ன இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த முடியும் என்று ஒரு குறும்பட்டியலுக்குள் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியாத இடங்களுக்குள் மக்களது கலகக்குரலை முடக்கி வருகின்றனர். மெரீனா கடற்கரை, சுதந்திர போராட்ட காலங்களில் இருந்து ஜனநாயகப் பெருந்திரள் உணர்ச்சி சங்கமத்தின் திடலாக இருந்து வந்ததை எப்போதோ ஒதுக்கி வைத்திருந்தது  நிர்வாக எந்திரம். இப்போது பல்லாயிரக்கணக்கான மக்களது தொடர் போராட்டம் அங்கே நடைபெற்றதும் மீண்டும் அந்த இடத்தை ஜனநாயக இயக்கம் மீட்டெடுத்துக் கொண்டுவிடக் கூடாதென்ற பெருங்கவலை. இனி, மெரினா பகுதியில் போராட்டங்களுக்கு இடமில்லை என வேகவேகமாக அறிவித்துள்ளனர். அதை நியாயப்படுத்த அந்த வன்முறை, அதை நியாயப்படுத்த சமூக விரோதிகள் குற்றச்சாட்டு !
பல்லாண்டுகளாக தொழிலாளர்க்குச் சேரவேண்டிய சேமநல நிதிக்குச் செலுத்த வேண்டிய தொகையை ஏமாற்றி நிலுவை வைத்திருக்கும் முதலாளிகள், வங்கிக்கடன் திரும்பச் செலுத்தாத பெருந்தொழில் நிறுவனங்கள், முறைப்படி எந்த வரியையும் செலுத்த மறுக்கும் பெரும்புள்ளிகள், இயற்க்கை வளங்களைச் சுரண்டி சூறையாடி வருபவர்கள், ஊழலில் திளைப்பவர்கள், கணக்கில் காட்டாத கறுப்புப்பணம் கோடிக்கணக்கில் வைத்திருப்போர் உள்ளிட்ட யாரையும் சமூக விரோதிகள் என்று இதுவரை எந்த ஆட்சியாளரும், காவல் துறை உயர் அதிகாரியும் சொல்வதில்லை. மாறாக, மேற்படி குற்றங்களைச் செய்வோர் மிகுந்த மரியாதையோடு சமூகத்தில் எல்லா மதிப்புகளோடும் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். ஜனநாயக உரிமைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்பவர்கள், ஆட்சியாளரது தவறான கொள்கைகளைத் துணிச்சலோடு விமர்சிப்பவர்கள், சமூக-பொருளாதார-பாலின சமத்துவமற்று பெருத்த இடைவெளிகளுக்கிடையே பெரும்பான்மை மக்களைத் துயருற்ற வைக்கும் சமூக அமைப்பைப் புரட்டிப்போட வேண்டும் என்று துடிப்பவர்கள் எல்லோரையும் சமூக விரோதிகள் என்று முத்திரையிடுவது அதிகாரவர்க்கத்திற்கும் ஆளும் வர்க்கங்களுக்கு அவர்களது தருமம் சார்ந்த வரையறுப்பு.
ஆட்டோவில் வைக்கும் தீயை விட, சமூக விரோதிகள்தான் வன்முறைக்குக் காரணம் என்று அவர்கள் கொளுத்தி வைக்கும் தீ நின்று எரியக்கூடியது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து அதில் இறங்கினர். துரதிருஷ்ட வசமாக, மிக எளிய மக்களுக்கும் இன்று வசப்பட்டு விட்ட செல்போன் தொழில்நுட்பம் அவர்களை அநியாயமாகக் காட்டிக் கொடுத்துவிட்டது.
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%80/article9528362.ece?homepage=true&theme=true

News

Read Previous

சத்துமாவு தயாரிக்கும் முறை !!!

Read Next

துபாயில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *