மார்க்கோ போலோ அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி

Vinkmag ad
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 
105. மார்க்கோ போலோ அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி
 
முனைவர் சுபாஷிணி 
மார்க்கோ போலோ என்ற பெயர் இன்று வணிக நிறுவனங்கள் சில தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர்களாக உள்ளன. சுற்றுலாத் துறை, உயர்தர ஆடைகள் என சில வணிக நிருவனங்கள் மார்க்கோ போலோவின் பெயரைத்  தாங்கி செயல்படுவதை நாம் அறிந்திருப்போம். அந்தப் பெயருக்கு உரிய மார்க்கோபோலோ பற்றிய செய்திகளோடு இந்த அருங்காட்சியகப் பதிவு அமைகின்றது.
Inline image 6
மார்க்கோ போலோ கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வணிகர். இவர் பிறந்து வளர்ந்தது இத்தாலியின் அழகு மிகு நகரமான வெனிஸ் நகரில். ஒரு வணிகராக உலகை வலம் வந்தவராக அறியப்பட்டவர் இவர். தன் சமகாலத்து ஏனைய கடலோடிகளை விட மார்க்கோ போலோ பல வகைகளில் சிறப்பித்துக் கூறப்படுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இவரது பயணத்தில் 24 ஆண்டுகள் முழுமையாக ஆசிய கண்டத்திலேயே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இவரது பயணக்குறிப்புக்கள் இன்று நம்மில் பலருக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசிய நாடுகளின் வரலாற்றின் சில பகுதிகளை அறிந்து கொள்ள உதவுவனவாக அமைந்துள்ளன எனலாம். மங்கோலிய மாவீரன் குப்ளை கான் தன் ஆளுமைக்குக் கீழ் வைத்திருந்த சீனாவிற்கு வருகை தந்து அங்கு குப்ளை கானின் விருந்தினராகவும் பல ஆண்டுகள் இருந்தார் என்பது மார்க்கோ போலோவுக்குள்ள தனிச்சிறப்பு.
Inline image 4
மார்க்கோபோலோ பிறந்த இத்தாலியின் வெனிஸ் நகரம் ஐரோப்பாவின் வணிக மையமாகத் திகழ்ந்த காலமது. 1254ம் ஆண்டு இவர் பிறந்தார். இவரது தந்தையாரும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கூட வணிகத்திற்காகச் செல்வது என்று மட்டுமல்லாது நாடுகளைச் சுற்றிப்பார்த்து வருவதை இயல்பாகக் கொண்டிருந்தனர். இவர்கள் குடும்பத்தினருக்கு கொன்ஸ்டண்டினோப்பல் (Constantinople), அதாவது இன்றைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் ஒரு வர்த்தக அலுவலகம் இருந்தது. மார்க்கோபோலோவுக்கு 15 வயது இருக்கும் போது இவரது தந்தையார் நிக்கோலோவும், இவர் சிற்றப்பா மாஃபியோவும் ஒன்பது ஆண்டுகள் கிழக்கு நோக்கி அவர்கள் சென்றிருந்த பயணத்தை முடித்துக் கொண்டு வெனிஸ் திரும்பியிருந்தனர். இவ்வகை குடும்பப்பின்னணி மார்க்கோபோலோவிற்கு வணிகப் பயணங்களைப் பற்றிய இயல்பான ஒரு அறிமுகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தியிருந்தது.
Inline image 5
ஒன்பது ஆண்டுகள் பயணத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய மார்க்கோபோலோவின் தந்தையும் சிற்றப்பாவும் ஆசிய கண்டத்தை நோக்கிய பயணத்தை திட்டமிட்டனர். இம்முறை ஆசியாவை நோக்கிய பயணமாக இது அமைந்தது. ஆசியப்பயணத்தை தொடங்கிய போதே இவர்களுக்குப் பயணம் நிறைவளிப்பதாக அமைந்தது. ஜெங்கிஸ்கானின் மகன் பர்கா கானின் அரண்மனைக்குச் சென்று அங்கு இவர்கள் கொண்டு வந்திருந்த விலையுயர்ந்த ஆபரணங்களைக் காட்டி அவற்றை நல்ல லாபத்திற்கு விற்றனர். அந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் போர் மூண்டது. பர்கா கானின் உதவியுடன் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த வேளையில் இவர்கள் தாத்தார் மொழியைக் கற்றனர். இது இன்றைய ரஷியாவின் ஒரு பகுதி. அக்காலகட்டத்தில் ஜெங்கிஸ் கான் கைப்பற்றிய பல பகுதிகள் அடங்கிய பேரரசுக்குள் அடங்கிய ஒரு பகுதி எனலாம். தாத்தார் மொழியையும் பண்பாட்டையும் மார்க்கோ போலோ குடும்பத்தினர் கற்றுக் கொண்டதால் இவர்கள் பயணம் மேலும் எளிதானது. அப்போது சீனாவையும் மங்கோலியப் பேரரசு கைப்பற்றியிருந்தது அதனை குப்ளை கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார். போலோ சகோதரர்களுக்குத் தாத்தார் பண்பாட்டு அறிமுகம் இருந்தமையால் குப்ளை கானை சென்று காணும் படி சிலர் தூண்டவே, இவர்கள் குப்ளை கானின் அரசவைக்குச் சென்றனர்.
குப்ளை கானுக்கு ஐரோப்பாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் இருந்தது. தாத்தார் மொழி தெரிந்த போலோ சகோதரர்களைச் சந்தித்த போது மேலும் ஐரோப்பாவை அறிந்து கொள்ள இது வாய்ப்பாகும் என அவர் எண்ணினார். மார்க்கோ போலோவின் தந்தையையும் சிற்றப்பாவையும் தனது தூதுவர்களாக நியமித்து வாட்டிக்கன் நகருக்குச் சென்று அங்கு போப்பை சந்தித்து தனக்கு 100 கிறிஸ்துவ பாதிரிமார்களையும், விஞ்ஞானிகளையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார் குப்ளை கான். நிக்கோலோவும் மாஃபியோவும் குப்ளை கான் கொடுத்த தங்கத் தட்டில் தகவல் பொறித்த ஆவணத்தையும், பயணத்தில் பாதுகாப்பிற்காகக் கொடுத்த சான்றிதழையும் எடுத்துக் கொண்டு 1269ம் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1271ம் ஆண்டில் இவர்கள் மீண்டும் குப்ளை கானைச் சந்திக்க வெனிஸிலிருந்து புறப்பட்டனர். அப்போது 17 வயது நிரம்பிய மார்க்கோ போலோவையும் தம்முடன் அழைத்துக் கொண்டனர். இப்பயணம் இவரது வாழ்க்கையின் முதல் பயணம் மட்டுமல்லாது முக்கியப் பயணமாகவும் அமைந்தது. குப்ளை கானின் அரசவையில் இவர்களுக்கும் இவர்கள் உடன் வந்த பாதிரிமார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மன்னரின் அரண்மனையிலேயே இவர்கள் தங்கினர் என்றும் 25கிமீ தூர அளவிலான வனத்தில் மன்னர் தன் ஓய்வு நாட்களைக் கழித்ததைப் பற்றியும் மார்க்கோ போலோ தன் குறிப்புக்களில் எழுதியிருக்கின்றார். வெனிஸிலிருந்து குப்ளை கான் அரண்மனைக்கு வந்தவர்கள் அங்கேயே 17 ஆண்டுகள் தங்கியிருந்தனர் என்றும் இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது. நில மார்க்கமாகப் பட்டுப் பாதை வழியாக முதலில் சென்று,  பின்னர் கடல்மார்க்கமாக சீனாவின் ஷங்டு நகரிலிருந்து மீண்டும் தமது பயணத்தை மார்க்கோ போலோவின் குழு தொடங்கியது.
கடல் பயணத்தின் போது இவர்கள் இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் இறங்கி அங்கு வணிகம் செய்தனர் என்றும் பின்னர் கேரள கடற்கரை துறை முகப் பகுதிகளிலும் மிளகு போன்றவற்றை வாங்கிக் கொண்டு வெனிஸ் நகரம் திரும்பினர் என்றும் இவரது நூல் குறிப்புக்களும் வரைபடங்களும் ஓவியக் குறிப்புக்களும் குறிப்பிடுகின்றன. ஏறக்குறைய 20,000 கிலோமீட்டர் தூரம் மார்க்கோ போலோவின் ஆசியப் பயணம் அமைந்தது. ஒரு வணிகராக, நாடோடியாக, கடலோடியாக, இவர் தன் வாழ்க்கையைப் பயணத்திலேயே பல ஆண்டுகளைக் கழித்திருக்கின்றார்.
Inline image 3
தனது 24 ஆண்டுகள் பயணத்தை முடித்து வெனிஸ் திரும்பிய மார்க்கோபோலோ, வெனிஸ் நகரில் அப்போது ஆட்சி செய்த அரசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 1299ம் ஆண்டு விடுதலை பெற்று சிறையிலிருந்து வெளிவந்து வெனிஸ் நகரில் தன் வர்த்தகத்தொழிலை விரிவாக்கினார். அங்கேயே ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். 1324ம் ஆண்டு தனது 70ம் வயதில் இவர் காலமானார். வெனிஸ் நகரின் சான் லொரேன்சோ தேவாலயத்தில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மார்க்கோ போலோவின் இல்லம் இன்று ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகின்றது. உலகின் பல நாடுகளில் உள்ள பெரிய அருங்காட்சியகங்களில் இத்தாலிய அரசு தற்காலிக மார்க்கோ போலோ கண்காட்சியையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Inline image 2
மார்க்கோ போலோவின் நூல் The Travels of Marco Polo அல்லது The Description of the World இவரது இளம் வயது பயணக் குறிப்புக்களுடன் தொடங்குகின்றது. இன்றும் முக்கிய வரலாற்றுத் தகவல்களை வழங்கும் முக்கிய ஆவணமாக இந்த நூல் திகழ்கின்றது. மார்க்கோ போலோ ஐரோப்பாவிலிருந்து ஆசிய பயணம் மேற்கொண்டு சீனாவை அடைந்த முதல் ஐரோப்பியர் அல்ல. ஆயினும், மிக விரிவான பயணக் குறிப்பை விட்டுச் சென்ற ஒரு பயணி என்ற சிறப்புதான் அவரது புகழுக்குக் காரணமாக இருக்கின்றது. இவரது பயணக் குறிப்புக்களையும் வரைபடங்கள் மற்றும் அவற்றின் குறிப்புக்களையும் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் கிற்ஸ்டஃபர் கொலம்பஸ் போன்ற கடலோடிகள் புதிய நாடுகளைத் தேடி தங்கள் தேடும் பயணத்தைத் தொடங்கினர் என்பதில் சந்தேகமில்லை.

News

Read Previous

ஓ மழைப்பெண்ணே..

Read Next

பாம்புக் கடியினால் உயிரிழக்க வேண்டியதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *