மலேசியப் பெண்ணிலக்கியவாதிகளுடன் ‘மானா’ வின் மறக்க முடியாத அனுபவம்

Vinkmag ad

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரச் சுற்றாடலில் உள்ள மலேசிய ஸ்ரீ கந்த சுவாமி கோவில் மண்டபமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1890 களில் மலேசியா வாழ் யாழ்ப்பாணத் தமிழர் நெஞ்சங்களில் கருக் கொண்டு 1902ல் பணி ஆரம்பித்து அதிவேகமாகக் கும்பாபிஷேகம், நடந்து முடிந்த ஒரு புனிதத் தலம்.

நூறு ஆண்டுகளை மிக இலேசாகக் கம்பீரமாகக் கடந்து விட்ட கந்தன் ஆலயத்தின் அந்த அழகேயுருவான கலா மண்டபத்திலேயே பெண்ணிலக்கியவாதிகளுடன் அந்த அபூர்வம் எனக்கேற்பட்டது.

மலேசியப் பெண்ணார்வ சமூகநல அமைப்பு ஏற்பாட்டிலும், ஒளி விளக்கு இந்திய மகளிர் மேம்பாட்டுக்கழக ஆதரவிலும், மற்றும ஜோதி கார்த்திகா ரிசோர்சஸ் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவன அனுசரணையிலும் நடந்த நிகழ்வு அது.

இதுவரை தமிழகத்திலும், இலங்கையிலும் சிங்கையிலும் ஏற்பட்டிராத ஒன்று.

தலைப்பை அறிந்தால் புரிவீர்கள். “மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள் ஆய்வு”.

இந்தச் சிறியவன் எனது நோன்பு காலத்தைக் மனைவி சகிதம், மகப்பேறுமருத்துவ மகளார் – பொது மருத்துவ மருகன் ஆகியோருடன் கழிக்க சென்றிருந்தவனை எப்ப டியோ அடையாளம் கண்டு ஒரு பொருட்டாக மதித்து கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் திருமதி க. பாக்கியம் அம்மையார் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

அது கிடைத்திராவிட்டாலுங்கூட, ‘ஓர் அழையாத விருந்தாளி’ யாக கலந்திருப்பேன் நிச்சயம்!

காரணம் – மலேசியத் தமிழிலக் கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள் பற்றிய ஆய்வு மட்டுமல்லாமல், 273 பக்கங்கள் கொண்ட ஒரு நூலின் வெளியீட்டு விழா, அதன் முக்கியத் துவம்.

ஆரம்பத்திலேயே கோடி காட்டியதைப் போல தமிழகத்தாரோடு, சிங்கப்பூரார்களோடு இலங்கையரும் கோட்டைவிட்ட அல்லது கும்பகர்ண உறக்கம் கொண்டு செய்யாமல் விட்ட ஓர் ஆய்வு நூலது.

நிச்சயமாக படுநிச்சயமாக தமிழுக்காக – தமிழ்ப் பெண்டிருக்காக தமிழ்ச் சமுதாயத்திற்காக முன் சொன்ன நாடுகளில் இப்பணி தனித்தனியாக நடந்திருக்க வேண்டும்.

பாவம், சிங்கை! அது சின்னஞ்சிறியது விடுவோம். இந்த தமிழ்நாட்டினரும் இலங்கையரும் ஏன் இப்படி உறங்கித் தொலைத்தார்கள்?

மலேசியத் திருமதிகள் க. பாக்கியம், ஆர். கே. ராஜஸ்ரீ என்ற ராஜேஸ்வரி, கண்மணி கிருஷ்ணன், கமலாதேவி அரவிந்தன், ஜோதி கார்த்திகா, மற்றும் ந. மகேசுவரி, பாவை எனும் புஷ்பலீலாவதி, கா. இராஜம் இராஜேந்திரன் இன்னுமின்னும் நான் பெயர் அறியவராத படைப்பிலக்கியப் பெண்டிர்கள், செய்யவேண்டிய காரியத்தைச் செய்து பிறரை வெட்கமுறச் செய்து விட்டார்கள்.

நிகழ்வில் மலாயப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம், அவரது பார்வையில், ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ நூலின் அத்தனை பக்கங்களையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கையிலேயே, திருமதி பாக்கியம் திருமதி ராஜஸ்ரீ வழியாக ஒரு பிரதியை இலங்கைப் பெண்மணிகளுக்குக் காணிக்கையாக்கி என்னிடம் வழங்கிய பொழுது நான் நன்றிக்கடன்பட்டுப்போனேன்.

பின்னர் பக்கங்களை வதிவிடம் திரும்பிப் புரட்டிய பொழுது மெய்சிலிர்த்தேன்.

திருமதி ராஜஸ்ரீ அழகுற ஓவியமாக்கிய இருபக்க அட்டையின் பின்புறத்தில் திருமதி பாக்கியம் அடக்கத்துடன் நின்ற வண்ணமே இப்படி தகவல் தந்திருக்கிறார்கள்.

‘மலேசியத் தமிழலக்கிய வரலாற்றில் பெண் எழுத்தாளர்களின் இலக்கிய முன்னெடுப்புகளைப் பதிவு செய்துள்ள முதன்மை நூல். பெண்ணின் தனித்துவமிக்க இலங்கு மொழி இந்நூலின் பதிவாகியுள்ளது. பெருக்கெடுத்த உணர்ச்சித் தெறிப்பில் ஓரிரு துளிகள் மட்டுமே இந்நூலின் பதிவுக்குரியதாகின்றன.”

ஊஹும்! நம்புவதே கடினம். நூல் அத்தனை கனம்! திருமதிகள் கமலாதேசி அரவிந்தன், ந. மகேசுவரி ‘பாவை’ புஷ்ப லீலாவதி, கா. இராஜம் இராஜேந்திரன் ஆகியோரைப் பயன்படுத்தி, முறையே, ‘தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் மலேசியப் பெண்கள் ‘மலேசிய நாவல் துறையில் பெண்படைப்பாளிகள் ‘மரபுக் கூட்டில் பெண் குயில்கள்’ – புதுக் கவிதையும் பெண் பிம்பங்களும் எனச் சிறப்பாக ஆய்வுப் பணி புரிய வைத்துத் தொகுத்தளித்திருப்பதோடு.

‘மலேசியப் பெண்ணிலக்கியவாதிகளின் இலக்கிய விபரங்கள்’ – என 61 – பேரின் தகவல்களையும், சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியிட்ட 37 – பெண்மணிகள், அதேபோல தொடர்கதைகள் வெளியிட்டவர்கள் 89 நாவல்கள் வழங்கியவர்கள் 21, கட்டுரை நூல்கள் கொண்டு வந்தவர்கள் 14 எனப் பெரும் சிரமத்துடன் பட்டியலிட்டுள்ளார்கள்.

இத்தோடும் நின்று விடமால், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சான்றோர் விருது பெற்ற பெண்ணிலக்கியவாதிகள் 23, தான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது பெற்றவர்கள் 17 என விவரக்கொத்தும் உள்ளது. உண்மையில் தொகுப்பாசிரியர். ஒரு பெண்ணிலக்கிய புலியே’ அத்தோடு, நூலின் அத்தனை அம்சங்களையும் அழகுற நூலுருவில் பதிவு செய்தளித்துள்ள செந்தூல் உமா பதிப்பத்தின் உரிமையாளர், பேரறிஞர். டத்தோ ஆ. சோதிநாதன், வடிவமைப்பாளர் எம்மவர் செ. நிசாகுலன் சாவகச்சேரி ஆகியோரும் பாராட்டுக்குரியோர்.

கந்தசுவாமி கோயில் கலாமண்டபத்திலிருந்து வெளியேறுகையில், என்னுள் ஏற்பட்ட ஓர் ஆதங்கம் மனங்கவர் மலேசியப் பெண்மணிகள் பலர் – அதிலும் முக்கியமாக பெண்ணிலக்கியவாதிகள் தங்கள் மேம்பாட்டுப் பெருமை பேச நிகழ்வுற்ற ஒரு வரலாற்று வைபவத்தைத் தவற விட்டார்களே என்பது!

வெள்ளிக்கிழமை நாளில் நடந்த விழாவுக்கு, பக்கத்திலேயே எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை வணங்கி விட்டு, காளாஞ்சியும் கையுமாகக் கலா மண்டபத்திற்குள்ளும் காலடி வைத்திருக்கலாமே!

ச்ச்சு! ச்ச்சு!

ஓர் அடிக்குறிப்பு

அடுத்த ஒரு கட்டுரையில், சிறுகதை, நாவல், மரபுக்கவிதை, புதுக்கவிதை துறையில் தடம்பதித்துள்ள பழைய புதிய பெண்களை அடையாளமிடும் ஆவல் உண்டு. மலேசிய அபிமானிகள் பொறுத்திருக்க வேண்டும்.

 

http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/08/18/default.asp?fn=f1308184

News

Read Previous

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

Read Next

சர்க்கரை நோயை அதிகரிக்கும் பச்சரிசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *