மரணக் குழியாகும் கழிவுக் குழி

Vinkmag ad
மரணக் குழியாகும் கழிவுக் குழி
பேராசிரியர் கே. ராஜு
புது தில்லி உயர்வகுப்பினர் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் அண்மையில் ஈடுபட்டிருந்த ஐந்து இளம் தொழிலாளர்கள் இறந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பெரும் விளம்பரத்துடன் நடத்தப்படும் ஸ்வச் பாரத் திட்டம் கள உண்மைகளை அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு எதையும் பெரிதாகச் செய்துவிடவில்லை என்ற நிலவரத்தை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தில்லியில் இந்த மரணம் நடைபெற்ற அதே தருணத்தில் ஒடிசாவில் ஒரு கழிவுநீர்த் தொட்டியில் ஐந்து தொழிலாளர்கள் மரணித்த செய்தியும் வந்தது. கைகளால் கழிவுகளை அள்ளும்போது மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் செப்டம்பர் 25 அன்று புதுதில்லியில்  ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஏந்தியிருந்த பதாகையில் எழுதப்பட்டிருந்த நெகிழ்ச்சியூட்டம் வரிகள் இவை : “எங்களைக் கொலை செய்வதை நிறுத்துங்கள்!” 2017-ல் கழிவுக் குழிகளில் இறங்கிச் சுத்தம் செய்யும்போது 221 பேர் உயிரிழந்தனர் என பதிவான மரணங்களைப் பற்றிய ஒரு செய்தி கூறுகிறது. கணக்கில் வராதவை ஆயிரக்கணக்கில் இருக்கக் கூடும். இந்த மரணங்களுக்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. அதனால் இழப்பீடும் வழங்குவதில்லை.
கழிவுத் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி கைகளால் மனிதக் கழிவுகள் உட்பட உள்ள பல்வேறுவகைக் கழிவுகளை அள்ளி சுத்தம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்கிறது சட்டம் (Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013). இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே உண்டு என்கிறது சட்டம். கழிவுக் குழிகளில் அல்லது கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி  கைளால் சுத்தம் செய்வது ஆபத்தான பணி என்பதால் எந்த நபரோ, உள்ளூர் நிர்வாகமோ, நிறுவனமோ இத்தகைய வேலைக்கு ஆட்களை நியமிக்கக்கூடாது எனத் தெளிவாக வரையறுக்கிறது இச்சட்டம். கழிவுநீர்த் தொட்டிகளை  இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் பரிந்துரைக்கப்படும்  விதிமுறை. ஆனால் நம் நாட்டில் தீண்டாமையை குற்றம் என்று அறிவிக்கும் ஒரு சட்டம்  காகிதப் புலியாக இருப்பது போல இந்தச் சட்டமும் இருக்கிறது. கழிவுக் குழியில் இறங்கும் மனிதர்கள் காலம்காலமாக இத்தொழிலைச் செய்யுமாறு சபிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினரைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான். பணபலமும் ஊடக வெளிச்சமும் இல்லாத இவர்களுக்கு எப்போதுதான் சாபவிமோசனம்?
மனிதர்களை அவசியம் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டத்தில் கூட அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடிய முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கழிப்பறைகளைக் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் பகுதியாக கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் மேலும் மேலும் கழிவுநீர்த் தொட்டிகள் கட்டப்படும் சூழலில் அரசியல் உறுதியும் சமூகத்தின் அழுத்தமும் இல்லையெனில் இன்னும் பல உயிர்களை நாம் இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.
கழிவுகளைக் கைகளால் அகற்றுவது பற்றிய சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமானால், சட்டமீறல் நடக்கும்போது அளிக்கப்படும் தண்டனைகள் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் வெளிப்படையாகவும் காலதாமதமின்றியும் தரப்பட வேண்டும். போதுமான அளவில் நிதியை ஒதுக்கி கழிவுத் தொட்டிகளைச் சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் தேவையான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு. கழிவுநீர் வலைப்பின்னலை வலுப்படுத்துவதற்கு ஸ்வச் பாரத் அபியான் முன்னுரிமை அளிக்க வேண்டும். கழிவுத் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப்படுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவியல்ரீதியான பராமரிப்பை அளிக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் வகுத்து அரசியல் உறுதியுடன் அமுல்படுத்த வேண்டும். அரசுகள் இப்படி செயல்படுகின்றனவா என்று கண்காணித்து அமுல்படுத்த வைக்க வேண்டிய கடமை மக்களுக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் அரசுசாரா அமைப்புகளுக்கும் உண்டு என்பதைச் சொல்லத் தேவையில்லை. மலக்குழி மரணங்களோ மனிதர்கள் மலக்குழிகளில் தமது மாண்பைத் துறந்து மனிதர்கள் இறங்குவதோ விடாமல் நம்மைத் தொந்தரவு செய்யும் அளவுக்கு வலுப்பெற வேண்டும்.

News

Read Previous

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?

Read Next

திருநெல்லை பதிகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *