மனிதன் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் உயிர்வாழ முடியும்?

Vinkmag ad
அறிவியல் கதிர்

மனிதன் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் உயிர்வாழ முடியும்?
பேராசிரியர் கே. ராஜு

ஒவ்வொரு மனிதருக்கும் தான் எத்தனை ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கப்போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள்ளாவது நிச்சயம் இருக்கும். அதையெல்லாம் பிறக்கும்போதே ஆண்டவன் தலையிலே எழுதிவைத்துவிட்டான் என்று எளிமையாக நம்புவோர் பலர். விஞ்ஞானிகளைப் பொறுத்த அளவில், மனிதர்கள் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழ முடியும் என்ற கேள்விக்கு விடை தேடிவந்தனர். சமீப காலம் வரை அதற்குத் தெளிவான விடை கிடைக்காமல் இருந்தது. மரபணுக்களும் வேறு பல அம்சங்களும் நீடித்த வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடியவை என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பூமியில் பொதுவான வாழ்விடங்களிலிருந்து சில குறிப்பிட்ட தொலைதூரப் பகுதிகளில் வாழக்கூடியவர்கள் மற்ற இடங்களில் வாழ்பவர்களைவிட அதிக காலத்திற்கு வாழ்கிறார்கள் என்பது தெரிந்தாலும் மனித வாழ்க்கையின் எல்லை எது என்பதைத் தீர்மானிக்க அறிவியல்ரீதியான வழி ஏதும் இருக்கவில்லை. தற்போது நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூப்பியல் நிபுணர் ஜான் விஜ் மற்றும் அவரது மாணவர்கள் ஆய்வு செய்து இதற்கு ஒரு தெளிவான விடையைக் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் 115 வயதுக்கு மேல் வாழ இயலாது என அவர்கள் மனித ஆயுளுக்கு ஒரு எல்லையைக் குறிப்பிடுகின்றனர்.
இந்த  எண் சற்று குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். காரணம், இந்த வயதுக்கு மேல் சில மனிதர்கள் உயிர் வாழ்ந்திருக் கிறார்கள். பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஜீன் லூயி கால்மெண்ட் 122 ஆண்டுகள் 164 நாட்கள் வாழ்ந்து முடித்து 1997 ஆகஸ்ட் 4 அன்று காலமானார். உலகம் முழுதும் எடுத்துக் கொண்டால் 115 வயதுக்கு மேல் 40 பேர் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியானால் 115 என்ற எண்ணிற்கு விஞ்ஞானிகள் எப்படி வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
மக்கள் நல்வாழ்வு, சத்துணவு, சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக 19வது நூற்றாண்டிலிருந்து மனித ஆயுள் சீராக அதிகரித்தே வந்திருக்கிறது. உதாரணமாக, சராசரியாக இந்தியாவில் இன்று பிறக்கும் குழந்தைகள் 65 வயது வரை வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால் 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு 32 வருடங்கள்தான். ஜப்பானில் ஆயுள் எதிர்பார்ப்பு 83 ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது. இது வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமானது. மூத்தவயது மரணவீதம் (old-age mortality) குறைந்து கொண்டே வருகிறது எனவும் இறப்பின்போது உள்ள வயது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் மக்கள் தொகை ஆய்வு தெரிவிக்கிறது. விளைவாக, 1970-களிலிருந்து மனிதர்கள் அதிகபட்சம் உயிர்வாழக்கூடிய வயது அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆனாலும் இந்த வயது அதிகரித்துக் கொண்டே போகாது, அதற்கு ஒரு உச்சவரம்பு நிச்சயம் உண்டு என்கின்றனர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி ஆய்வாளர்கள். அது மட்டுமல்ல, அந்த வரம்பை நாம் ஏற்கனவே அடைந்தாகிவிட்டது என்று அந்த ஆய்வாளர்கள் நம் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைக்கிறார்கள்.
38 நாடுகளிலிருந்து மனித இறப்பு பற்றி சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெவ்வேறு வயதுகளில் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்ற தகவல்கள் கொண்ட அட்டவணையை ஆய்வாளர்கள் தயாரித்தார்கள். இதிலிருந்து ஒவ்வொரு வயதுக்குரியவர்களிலும் மக்கள் தொகை எவ்வளவு வேகமாக வளர்கிறது என கணக்கிட்டார்கள். மிகவும் வயதானவர்களின் எண்ணிக்கை உயர்வது 1980களில் மட்டுப்பட ஆரம்பித்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் அது அறவே நின்றுவிட்டது. ஆயுட்காலத்தின் உச்சவரம்பை மனிதர்கள் அடைந்துவிட்டதை இது குறிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள உலகெங்கிலும் மிகவும் வயதானவர்களில் 534 பேர்களின் மீதான விவரங்களை ஆராய்ந்து எந்த வயதில் ஒவ்வொருவரும் இறந்தார் எனக் கணக்கிட்டனர். 1960-களிலிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் அவர்கள் வாழ்ந்த அதிகபட்ச வயதைப் பட்டியலிட்டனர். அவர்களது கண்டுபிடிப்பு சில உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. 1968-ல் மேற்கண்ட மனிதர்கள் அதிகபட்சமாக 111 வயது வரை வாழ்ந்தனர். 1990-களில் இந்த வயது 115 ஆக உயர்ந்தது. ஆனால் பிறகு இந்த எண்ணிக்கை உயர்வது நின்று போனது. திருமதி  கால்மெண்ட் மாதிரி  சில விதிவிலக்கான நபர்களைத் தவிர, 115 வயதுக்கு மேல் வாழ்பவர்கள் இருக்கமாட்டார்கள் என்கிறது இந்த ஆய்வு.
சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை மூப்படைவது பலருக்கும் உடலியல் பிரச்சினைகளையும் சேர்த்தே கொணர்வதால் இந்த வாழ்க்கை எப்போது முடியும் என்று காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள்தான் அதிகம்.  அவர்கள் எல்லாம் சரிதான் போங்கப்பா.. 115 வயது வரை வாழ்ந்து அவதிப்பட வேண்டுமா என்று கேட்கக் கூடும்! முதிர்ந்த வயதிலும் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உற்சாகமாக உழைத்துக் கொண்டிருப்போர் நாம் பின்பற்ற வேண்டிய அற்புத மனிதர்கள்!
(உதவிய கட்டுரை : 2016 டிசம்பர் 2016 ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதியது.)

News

Read Previous

கடல் தூய்மை காப்போம்

Read Next

கதையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *