கதையாள்

Vinkmag ad
கதையாள்
கார்த்திக் ஜீவானந்தம்
 

 
 
ன் பாட்டி பொய் சொல்லியிருப்பாள் என்று தோன்றவில்லை. என்னை மடியில் கிடத்திக் கொண்டு ஏராளமான கதைகளைச் சொல்லியிருக்கிறாள். அவற்றின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பதின்வயதைத் தாண்டிய தன் பேத்திக்கு ஏன் அவள் மாயாஜாலக் கதையைச் சொல்லவேண்டும்?பின்னொரு நாளில் பாட்டியை மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த பின் என் வாழ்க்கை சற்றே அவநம்பிக்கைக்கு ஆட்பட்டது.“அம்மா… பாட்டியை நம்ம கூடவே வெச்சுக்கலாம்ல…”“உனக்கு நா பல தடவை சொல்லிருக்கேன் பாப்பா.. நிலைமை முன்ன மாதிரி இல்லமா”“பாவம் மா பாட்டி ..”“எனக்குத் தெரியும் பாப்பா.” அம்மா கண்களைத் துடைத்துக் கொண்டதும் நான் சட்டெனத் திரும்பிக்கொண்டேன். அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. என் கேள்விகளுக்கு பதில் எனக்கே தெரிந்தது. பதில் தெரியாமல்தான் கேள்விகளைக் கேட்கிறோமா என்ன !
என்னால் அந்த குரலை மறக்கவே முடியாது
.“அதுக்கப்புறம் அந்த ராஜகுமாரி அரண்மனைக்கு வரவே இல்ல.. அந்த அற்புதக் கிணத்துலயே இருந்துட்டா…”
“அந்த கிணறு மட்டும் இருட்டா இருக்காதா பாட்டி”
“இல்ல இருக்காது.. அந்த கிணத்துக்குள்ளதான் நிலா இருக்குல… மறந்துட்டியா?”
“ஆங்… ஆமா பாட்டி!”
இப்படியான நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.
“சுபா… உன் அம்மா கண்ட கதையெல்லாம் சொல்லி கிணத்துக்குள்ள எட்டிப் பாத்துட்டு இருக்கா நம்ம பொண்ணு”“அச்சோ… நல்லவேளை…”“என்ன நல்லவேளை ?! “
“ஸாரி… அம்மாக்கிட்ட நான் சொல்றேன் ராகவ். கோபப்படாதீங்க”
என் முன்னால் பாட்டியைப் பற்றி அம்மாவும்,அப்பாவும் பேசியது அதுதான் கடைசி.தாத்தாவின் அறையில் பாட்டியின் இளமைக்கால உருவம் பிரம்மாண்டமாய் வரையப்பட்டிருக்கும். அவ்வளவு பெரிய ஓவியம் வேறொன்றை இன்றுவரை நான் பார்த்ததில்லை.

தாத்தாவின் கடைசி காலங்களில் பாட்டி அவரிடம் பேசுவதை நிறுத்தியிருந்தாள். அம்மா குழந்தையாய் கை பிடித்து அமர்ந்திருக்க, ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே என் தாத்தனின் உயிர் பிரிந்ததென்றும், அதன் பின் பாட்டியே அவரின் அனைத்து தொழிற்கூடங்களையும் ஒற்றை ஆளாய் நிர்வாகம் செய்ததாகவும் அம்மா சொல்லியிருக்கிறாள். பாட்டிதான் அப்பாவும், அம்மாவும் காதலிப்பது தெரிந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தாளாம். ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம் அவளின் செம்பழுப்பு நிற கண்மணியும், ஆயிரமாயிரம் கதைகளும்.

பாட்டியின் குடும்பம் இந்தியாவின் பெரும் பணக்கார குடும்பங்களில் ஒன்று. பாட்டி அவள் பெற்றோர்களுக்கு ஒரே மகள். சொத்து விவகாரத்தில் பாட்டிக்கு இப்போது நாங்கள் இருக்கும் இந்த பிரம்மாண்ட வீடும், மூன்று தொழிற்கூடங்களும் எஞ்சியது. தாத்தாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் அவள் சொன்னதில்லை.நான் நினைக்கிறேன் ,அவருடனான சண்டைகளும், தொழில்களில் ஏற்பட்ட அழுத்தமும் அவளை தற்போது பாதித்திருக்கக்கூடும்.இப்போதெல்லாம் அம்மாவும்,அப்பாவுமே தொழிலைக் கவனித்துக் கொள்கின்றனர்.பிரத்யேகமாய் எங்கள் வீட்டுத் தோட்டத்தின் மீது அவளுக்கு தீராக்காதல் இருந்தது. பல மணிநேரங்கள் அங்கேயே இருந்து உறங்கியும் விடுவாள்.அம்மா சற்றுகூட சிரமமில்லாமல் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று உறங்க வைப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

அம்மா அதற்கு பழக்கப்பட்டிருந்தாள்.எனக்கு இருபது வயதிருக்கும்.முதன்முறையாய் அப்போதுதான் கவனித்தேன். பாட்டி தனிமையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். என்னை அபூர்வமாய் பார்த்தாள்.

“பாட்டி… என்ன பண்ற அங்க?”

பதிலில்லை.அதன்பின் எங்கள் வீட்டின் பின்புறமுள்ள அரசமரத்திலிருந்து உதிரும் இலைகளை பொறுக்கிக் கொண்டிருப்பாள்.அதனை ஒரே குச்சியில் செருகி பர்கரை சாப்பிடுவதைப் போல் வாயின் முன் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பாள்.நல்ல மழை பெய்து ஈரம் எஞ்சிய மாலைவேளையில் ,வீட்டிற்குள் அவள் சற்றே சோர்வாய் அமர்ந்து ,விளக்குகளை பார்த்துக் கொண்டிருந்த போது , நான் அருகே சென்று அமர்ந்தேன்.என் கைகளை இறுக்கமாய் பற்றியிருந்தாள்.கை சற்று ஈரமாய் இருந்தது.மழைநீரா ,கண்ணீரா என்று குழப்பமாய் இருந்தது.கேட்கத் துணியவில்லை.அவள் பொருத்தமான பதில் சொல்வாள் என்ற நம்பிக்கையும் இல்லை.அவளாய் பேசத் தொடங்கினாள்.பாட்டி அவளின் கடைசிக் கதையை என்னிடம் சொன்னபோது எனக்கு கவலையாய் இருந்தது.

பாட்டியை சிகிச்சைக்கு அனுப்பச் சொல்லி அம்மாவிடம் பரிந்துரைக்க மனம் இல்லை. அம்மாவும், அப்பாவும் எப்போதோ அந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஒருநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். நேரடியாக சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்வதால் நான் உடன் செல்லவில்லை. பாட்டி என்னை திரும்பிப் பார்க்கவேண்டுமென வேண்டிக் கொண்டிருந்தேன். அவள் திரும்பவே இல்லை. அவ்வாறே சிகிச்சைக்காக இரண்டு மாத காலங்கள் மருத்துவமனையில் இருந்த போதுதான் அந்த கேள்வியைக் அம்மாவிடம் கேட்டேன்.

“பாட்டியை நம்மக் கூடவே வெச்சுக்கலாம்ல?”அவ்வபோது சிகிச்சை பிரிவுக்கு சென்று பார்த்துவிட்டு வருவது எனக்கு வழக்கமாகி இருந்தது. பார்க்கச் செல்லும் போதெல்லாம் பெரும்பாலும் அவள் கடைசியாய் சொன்ன கதையை நினைவுகூர்வாள் அல்லது பேசவே மாட்டாள். ஒருநாள் என்னைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவளாய்ப் பேசினாள்.“முகி… நல்லா இருக்கியா ? பாத்து ரொம்ப நாளாச்சுல்ல” “நேத்து வந்தேனே பாட்டி…”பற்கள் தெரியுமாறு சிரித்துக் கொண்டே, நான் பொய் சொன்னது போலவே தலையாட்டினாள்.மௌனமாய் இருந்த அந்த அறையில் வெளிச்சத்தைத் தவிர வேறு எதும் நிரம்பியிருந்ததாக எனக்குத் தோன்றவில்லை இந்த காப்பகங்கள், சிகிச்சைப் பிரிவுகள், மருத்துவமனைகள் எல்லாம் ஏன் ஒரே மாதிரி வீச்சமடிக்கின்றன என யோசித்துக் கொண்டிருந்தேன். நூற்றாண்டுகளின் வீச்சம் அதுவென எண்ணி மனம் அமைதியுற்றது. கிளம்ப எத்தனித்தேன்.

மாலை நேரங்களில் காப்பகத்திலிருந்த மரங்களின் கீழே பாட்டி தோண்டி தோண்டி ஏற்படுத்தி வைத்திருந்த குழிகளில் நீர் நிரம்பி குருவிகள் குடித்துக் கொண்டிருந்தன. காலையில் வெயில் எழும்பவே இல்லை.அந்த அதிகாலைக்குப் பின்பு மழை மீதும்,குளிர் மீதும் எனக்கு பெரிய விருப்பமில்லை.

அன்று வீட்டிற்கு ஒரு அழைப்பு வந்தது.பாட்டியின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துவிட்டதாக தகவல். எனக்கு அங்கு செல்ல திராணி இல்லை.காத்திருந்தேன், பாட்டியின் உடலை வீட்டிற்கு கொண்டு வரும் வரை. பாட்டி தலையணையை இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தாளென்றும், அதனை விடுவிக்க ரொம்ப நேரம் ஆனதென்று அம்மா சொன்னாள். எனக்கு அதைக் கேட்டவுடன் அழுகை பீறிட்டெழுந்தது. அதன் பிறகு நான் அழுகவே இல்லை.

பல நாட்கள் கேட்பாரின்றி ஓடியது.வெளிச்சமான பின்னிரவு ஒன்றில், சுவாரஸ்யமில்லாமல் வீட்டுத்தோட்டத்திலிருந்த குட்டைமரத்திற்கு அடியில் கைகளால் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தேன். “நீ என்ன தேடுறனு எனக்குத் தெரியும்“அம்மா நின்று கொண்டிருந்தாள்.“வா.. முகி. அது அங்க இருக்காது”நான் எதுவும் பேசவில்லை.

எழுந்து கைகளைக் கழுவிக் கொண்ட பின், வீட்டிற்குள் போய் படுக்கையில் சாய்ந்தேன். அம்மா கதவுகளை பூட்டிவிட்டு அன்று என்னுடனே வந்து படுத்துக் கொண்டாள்.பாட்டி என்னிடம் கடைசியாய் சொன்ன கதை வித்தியாசமானது. அது மற்ற கதைகளைப் போல் இல்லை. ஏனென்றால் அது எங்களைப் பற்றிய கதை. எங்கள் என்றால் எங்கள் வீட்டுப் பெண் தலைமுறைக்காரர்களைப் பற்றிய கதை.“வீட்டுத் தோட்டத்திலிருக்கும் குட்டை மரத்தின் அடியில் இரவு நேரங்களில் புதைந்திருக்கும் விதைகள் ஒளிரும். அதில் எங்கள் வீட்டுப் பெண்கள் உருவம் தெரியும். அந்தப்பெண்கள் இறந்து போனவர்களாக இருப்பர்,” என்பதுதான் அவள் தன் கதையின் வாயிலாகச் சொன்ன செய்தி.

த்து ஆண்டுகளுக்குப் பின் இன்று எனக்கு அது நினைவுக்கு வந்தது. ஏனென்றால் இன்று பாட்டியின் நினைவு நாள். பாட்டியின் ஓவியம் இருந்த அறையிலிருந்து இவையெல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க எனக்கு இதயம் கனத்தது.

“மா…. இங்க பாரேன்“

என் ஆறு வயது மகள் கையில் ஒரு கல்லுடன் நின்றுகொண்டிருந்தாள்.

“என்னடா மா கையில வெச்சுருக்க.. எங்க குடு”

அது கல் இல்லை. ஏதோ விதை .அது சற்றே ஒளிர்ந்தது. ஒரு அழகான பெண்ணின் உருவம் அக்கல்லில் தெரிய,கண்ணைத் துடைத்துக்கொண்டு மீண்டும் பார்த்தேன்.அது பாட்டி… என் பாட்டி…!!அவ்வுருவம் சிரிப்பது போலிருந்தது.

“இது எங்க இருந்துச்சு ராணி”

“நம்ம தோட்டத்து மரத்துக்கு அடியில மம்மி.”

வேகமாய் பாட்டியின் ஓவியத்தைப் பார்த்தேன். அது சிரிப்பது போலத் தெரியவில்லை.

News

Read Previous

மனிதன் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் உயிர்வாழ முடியும்?

Read Next

எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *