மனவலிமை

Vinkmag ad

இந்த கரோனா காலத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த பல விஷயங்களில் முக்கியமானது பெண்களின் மனவலிமைதான். அதுவும், சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்துபோன ஜெயராஜின் மகள் பெர்சி காட்டிய துணிச்சல் பலரையும் அசரவைத்தது. பீரங்கிகளைப் போல மைக்குகள் பெர்சியைக் குறிவைக்க, யாருக்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடி சொன்னதில் வேதனை, ஆற்றாமை, அதிர்ச்சி, தவிப்பு எனப் பலவித உணர்வுகளின் கலவை இருந்தது. ஒரு சித்திரவதையின் அடையாளச் சின்னமாக அவர் நின்றவிதம், ஒட்டுமொத்த உலகையும் அவர் பின்னால் நிற்கவைத்தது.

பெண்கள் என்றாலே துயர் வரும்போது துவண்டுவிடுவார்கள், தனிமையில் அழுவார்கள், மனத்துக்குள் புழுங்குவார்கள் என்ற ஒட்டடை படிந்த எண்ணமெல்லாம் உளுத்துப்போய்விட்டது. தந்தை, தம்பி இருவரின் துர்மரணத்துக்கு நியாயம் கிடைக்க அவர் காட்டிய அறச்சீற்றம், பெண்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சாட்சி சொன்ன தலைமைக் காவலர் ரேவதியின் துணிவும் வியக்கத்தக்கதே.

கரோனா போன்ற இக்கட்டான காலத்தில் சிக்கலை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்பவர்கள் அநேகமாக ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். இதற்குப் பொருளாதார நெருக்கடியே பெரும்பாலும் காரணமாகச் சொல்லப்படுகிறது. தன்னை நம்பி இருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்ற வழிதேடாமல், தற்கொலையை ஒரு வழியாகக் கண்டுபிடித்து அவர்கள் போய் சேர்ந்துவிடுகிறார்கள்.

தனக்கு இருக்கிற அதே பண நெருக்கடிதானே மனைவிக்கும் இருக்கிறது என்பதைக் கணவர்கள் பலர் நினைத்துப் பார்ப்பதே இல்லை. எப்படியோ இந்தப் பிரச்சினையிலிருந்து தான் விடுட்டுவிட்டால்போதும் என்கிற எண்ணமே இதுபோன்ற தற்கொலைகளில் பெரிதாகத் தெரிகிறது.

கணவன் நிர்கதியாக விட்டுச் சென்றாலும், மன உறுதியுடன் குடும்ப பாரத்தைச் சுமக்கும் பெண்கள் நம் நாட்டில் ஏராளம்.

தங்கக் கடத்தல் தொடர்புடைய ஸ்வப்னா போன்றவர்கள் ஆங்காங்கே இருக்கலாம். ஆனால், பெர்சிகளும் ரேவதிகளும்தான் இந்தப் பூமி முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.

– ஜேலூர்துமதுரை..

News

Read Previous

கரோனா சந்தேகங்களுக்கு அறிவியல் என்ன சொல்கிறது?

Read Next

பெயரில் மட்டுமே பெருமக்களாக உழவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *