மனமகிழ் குடும்பம்! —- கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்

Vinkmag ad

எந்த குடும்பத்தில் அமைதி,ஒழுக்கம்,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பெரியோர்களை மதிக்கும் பண்புகள் இருக்கிறதோ?அந்த குடும்பமே மன மகிழ் குடும்பமாகும்.

மேலே கண்ட பண்புகள் இல்லாத குடும்பத்தில் அமைதி இல்லா நிலையும் குழப்பமுமே மிஞ்சியிருக்கும்.
நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற வார்த்தைக்குரிய விசயத்தை இஸ்லாம் எவ்வளவு அழகாக சொல்கிறது பாருங்கள்.
ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்? முதலில் குடும்பத் தலைவர் ஒழுக்கமுள்ளவராகவும்,5 நேரத்தொழுகையை தொடர்ந்து தொழுது வரக்கூடியவராகவும் இருப்பது அவசியம்.
இது தான் ஒவ்வொரு குடும்பத்தலைவரின் முதல் கடமை என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
இதை பற்றி திருமறையில் அல்லாஹ்வே சொல்கிறான் கேளுங்கள்,
நபியே,உமது குடும்பத்தினரை தொழும்படி ஏவுவீராக!நீரும் அதில் நிலைத்திருப்பீராக!நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை.உமக்கு வேண்டிய எல்லாவற்றையும் நாமே கொடுக்கிறோம்.நல்ல முடிவு பயபக்தி உள்ளவர்களுக்கே!(அத்தியாயம்- 20,வசனம்- 132).
இந்த வசனம் குடும்பத் தலைவரும் தொழுது,குடும்பத்தினரையும் தொழும்படி ஏவவேண்டும் என வலியுறுத்துகிறது.
ஒரு குடும்பத்தலைவர் மட்டும் சரியாக இருந்தால் போதாது!அவர்தம் மனைவி,மக்களும் தொழுகை விசயத்தில் பேணுதலாக இருக்கவேண்டும்.
தாம் எதிர்பார்ப்பதை போல தம் மனைவி மக்கள் அமைய வேண்டுமென விரும்பும் ஒவ்வொரு குடும்பத்தலைவரும் இவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டுமென அல்லாஹ் சொல்லித்தருகிறான் பாருங்கள்!
மேலும் அவர்கள் எத்தகையோரென்றால்,எங்களுடைய ரப்பே!எங்களுடைய மனைவியர்களிலிருந்தும்,எங்களுடைய சந்ததிகளிலிருந்தும் எங்களின் கண்களுக்கு குளிர்ச்சியை வழங்குவாயாக!இன்னும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன் மாதிரியாக ஆக்குவாயாக!எனக்கூறுவார்கள்.(அத்தியாயம்- 25,வசனம்- 74).
ஒவ்வொரு குடும்பத்தலைவரும் தொடர்ந்து இந்த துஆ வை கேட்பதின் மூலமே மனதிற்கு பிடித்த மனைவி,மக்களாக அல்லாஹ் மாற்றிக் கொடுக்கிறான்.குடும்பத்தலைவராக இருக்கும் நம்மில் எத்தனை பேர் இந்த துஆ வை கேட்டிருப்போம்?அல்லது வாழ்க்கையில் ஒரு முறையாவது நாம் கேட்டிருப்போமா?
பிரார்த்தனை செய்யாத தவறை நம் மீது வைத்துக்கொண்டு மனைவி,மக்கள் சரியில்லை,அதனால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போய் விட்டது என புலம்புவது எவ்வகையில் நியாயம்?
உங்களில் மிகச்சிறந்தவர்கள் அழகான குணமுடையவர்களே!எனஒரு குடும்பத்தலைவரின் நற்குணத்தைப்பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(நூல்-புகாரி,முஸ்லிம்).
அழகிய குணமுடைய மனிதர்களைப் பற்றி அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்,
அவர்கள் எத்தகையோர்களென்றால் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள்,மனிதர்களின் தவறுகளை மன்னிப்பவர்கள்.அல்லாஹ் இவ்வாறு நன்மை செய்கிறவர்களை நேசிக்கிறான்(அத்தியாயம்- 3,வசனம்- 134).
ஆம்!தனது மனைவி மக்களின் மீதான கோபங்களை மென்று விழுங்கி அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களின் மீது அன்பு பாராட்டும் நல்ல குடும்பத்தலைவர்களையே அல்லாஹ் பெரிதும் நேசிக்கிறான் என்பதையே மேற்கண்ட வசனம் நமக்கு உணர்த்துகிறது.
ஒரு நல்ல குடும்பத்தலைவருக்குரிய லட்சணத்தைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறியிருப்பதை பாருங்கள்!
முஃமீன்களில் ஈமானால் பரிபூரணமானவர்,அவர்களில் குணத்தால் மிக அழகானவரே!உங்களில் சிறந்தவர்கள், உங்கள் மனைவியரிடம் சிறந்தவர்களே!(அறிவிப்பாளர்,ஹழ்ரத் அபுஹுரைரா(ரலி),(நூல்-திர்மிதீ).
ஒரு கணவனாக இருக்கும் மனிதன் தன் மனைவி மீது எவ்வளவு நேசம் கொள்ளவேண்டும் என்பதற்கு ஹழ்ரத் அபுபக்கர் சித்தீக்(ரலி)அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை மனதில் கொண்டால் போதும் நமது நிலையை பற்றி நாம் யோசிக்க ஆரம்பித்து விடுவோம்!
 ஹழ்ரத் அபுபக்கர் சித்தீக்(ரலி)அவர்கள் தனது மரணப்படுக்கையில் இருக்கும்போது கசிந்த கண்களுடன் சூழ்ந்திருந்த உறவினர்களைப்பார்த்து என் ஜனாஸாவை எனது மனைவி அஸ்மா குளிப்பாட்டட்டும் என்றனர்.உறவினர்கள் ஏன்? எனக் கேட்டபோது,
 என் இதயத்துடன் நெருக்கமானவள் எனது மனைவி, அவள் குளிப்பாட்டினால் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்றனர்.பின்னர் க்லிஃபா அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களது மனைவியே குளிப்பாட்டினார்கள்.
தன் மனைவியை தனது இதயத்துடன் நெருக்கமாக்கி வாழ்ந்த  கலிஃபா எங்கே? சதா நேரமும் தமது மனைவியர் மீது கோபம் கொள்ளும் இப்போதைய குடும்பத்தலைவர்கள் எங்கே?
ஒன்றுக்குமேற்பட்ட மனைவியருடன் நேசத்துடன் வாழ்ந்த நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை நடைமுறையையும்,
ஒரே மனைவியானாலும் உயிருக்கு உயிராக அன்பு பாராட்டி வாழ்ந்து காட்டிய நபித்தோழர்களின் சிறப்பான வாழ்வையும் மனதில் வைத்து நாமும் நமது மனைவியரிடம் நேசம் கொண்டு வாழ்வோமானால்,நமது குடும்பமே மன மகிழ் குடும்பமாகும்!
(இன்ஷா அல்லாஹ் நல்லதோர் மனைவி பற்றி விரைவில்…….)இது பற்றிய உங்கள் கருத்துக்களை,
jahangeerh328@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.
 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!

                                                                                  (தொடர்- 2)
                                                                 கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
இம்மை மறுமையை படைத்தாளும் ரப்புல் ஆலமீனின் திருப்பெயரால்…………
ஒரு குடும்பம் சிறப்பாக அமைவதற்கு அந்த குடும்பத்தலைவியின் பங்களிப்பே பெரிதும் காரணமாக இருக்க வேண்டும்.
என்ன தான் ஆணுக்கு பெண் சமம் என்ற கோஷம் விண்ணை முட்டினாலும், இல்லறவியல் என்ற துறைக்குள் அதாவது குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் குடும்பத்தின் முதல் நிர்வாகியாக கணவனும் அடுத்த நிர்வாகியாக மனைவியும் என்ற அடிப்படை சித்தாந்தம் தான் இஸ்லாத்தின் நிலைபாடாகும்.
கணவனுக்குரிய இந்த சிறப்பை எந்த அடிப்படையில் இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதைப் பற்றி அல்லாஹ்வே தனது திருமறையில் சொல்கிறான் பாருங்கள்,
ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்களாக உள்ளனர்;ஏனெனில் அவர்களில் சிலரை (ஆண்களை)சிலரைவிட(பெண்களைவிட)அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான்:இன்னும் (ஆண்களாகிய)அவர்கள் தங்கள்பொருள்களை பெண்களுக்காகச் செலவு செய்கின்றனர்:ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள்(தங்கள் கணவன்மார்களுக்கு)பணிந்தே நடப்பார்கள்;அல்லாஹ் பாதுகாத்திருப்பதைக் கொண்டு மறைவானதை (தங்கள் கற்பையும்,கணவனின் பொருள்களையும்)பாதுகாத்துக் கொள்வார்கள்……(அத்தியாயம்- 4,வசனம்- 34).
ஒரு கணவன் தனது மனைவியின் நலனுக்காகவே வீட்டை விட்டு வெளியேறி உழைத்து விட்டு களைப்புடன் வீடு வரும்போது அவனுக்கு சுகம் வழங்கும் அற்புத பொக்கிஷமே மனைவி என்பவள்.
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி)அறிவிக்கிறார்கள்:உலகம் (சிறிது காலம்)சுகம் பெறப்படும் ஒரு பொருளாகும்.அவ்வாறு சுகம் பெறப்படும் உலகப் பொருள்களில் மிகச் சிறந்தது,நல்ல ஸாலிஹான ம்னைவியாவாள்! (நூல்-முஸ்லிம்).
 இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள விஷயம் என்னவெனில், ஒவ்வொரு கணவனும் தமது மனைவியரிடமிருந்து சுகம் பெறுவதென்பது அவளது அன்பான உபசரிப்பும் கனிவான வார்த்தைகளும் நேசம் கலந்த அரவணைப்பும்தான் என்பதை தெளிவு படுத்துகிறது.
என்னதான் கணவன் மீது சிறு,சிறு கோபமிருந்தாலும் வெளியிலிருந்து எப்போது வீட்டிற்கு வந்தாலும் கணவனை கனிவோடு உபசரிப்பது மனைவியின் கடமையாகும்.
கணவனின் குறிப்பறிந்து நடக்கும் பெண்ணே மிகச் சிறந்தவள் என நபி(ஸல்)கூறியுள்ளார்கள்.
நீ என்ன சொல்வது?நான் என்ன கேட்பது?என்ற தோரனையில் தங்கள் கணவனையே உதாசீனம் படுத்தும் பெண்கள் இந்த ஹதீஸை அவசியம் மனதில் பதிய வேண்டும்.
(மக்களில்)எவரையும் எவருக்காவது ஸஜ்தா(நெற்றியை நிலத்தில் வைத்துப் பணிதல்)செய்யும்படி நான் ஏவுபவனாக இருந்தால்,மனைவியை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யும்படி ஏவியிருப்பேன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்:ஹழ்ரத் அபூ ஹுரைரா(ரலி),நூல்-திர்மிதீ).
ஒவ்வொரு வீட்டிலும் கணவன்,மனைவி என்ற வாழ்க்கை சித்தாந்தத்தில் சின்ன,சின்ன மனஸ்தாபங்கள்,கோபங்கள்,ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.
குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அல்லாஹ்வுக்காக பொறுமையை கடைபிடிக்கும் பெண்களால் தான் அந்த குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கமுடியும்.
நம்மில் எத்தனையோ வீடுகளில் சின்ன பிரச்சினைக்கு கூட அன்றைய இரவில் கணவன்,மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கோபம் காட்டும் வகையில் தங்களது படுக்கை விரிப்பை தனி தனியாக விரித்துக் கொள்ளும் அவலநிலை உண்டாகிறது.
கணவனே அறியாமையில் பிரிந்து படுத்தாலும் மனைவி அவனை சமாதானப்படுத்தி அவனுடன் சேர்ந்து படுக்கவேண்டுமென்பதே இஸ்லாம் சொல்லும் அறிவுரையாகும்.
ஒரு வேளை இரவு விரிப்பை தனித் தனியே போடுவதற்கு மனைவியே காரணமாகிவிட்டால்,மலக்குகளின் சாபமும்,இறைவனின் கோபமும் அந்த இரவு விடியும் வரை மனைவியின் மீது இறங்குகிறது என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு எச்சரிக்கிறது!
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூஹுரைரா(ரலி)அறிவிக்கிறார்கள்:ஒரு கணவன் தம் மனைவியைத் தம் விரிப்பிற்கு (இல்லற உறவுக்காக)அழைத்து அவள் வர மறுத்தால்,அதனால் அவள்மீது கணவன் கோபமானவராக அந்த இரவை கழிப்பாரானால்,அன்று காலை வரை மலக்குகள் அவளைச் சபிப்பார்கள்(புகாரி-முஸ்லிம்).
இதற்கு நேர்மாற்றமாக, ஒரு மனைவி என்னதான் தன் கணவன் மீது கோபம் கொண்டாலும் இரவு வந்ததும் தன்னை அலங்காரம் செய்து கொண்டு தனது கணவனை சந்தோஷப்படுத்தக் கூடியவளாக இருக்கிறாளோ?அவளின் சிறப்பைப் பற்றி பின்வரும் ஹதீஸ் விளக்கம் கொடுக்கிறது பாருங்கள்:
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் உம்முஸலமா(ரலி)அறிவிக்கிறார்கள்:எப்பெண்மணி அவள் கணவன் அவள் மீது சந்தோஷமாக இருக்கும் நிலையில் மரணமடைகிறாளோ,அவள் சுவர்க்கம் புகுவாள்!(நூல்-திர்மிதீ)
மனைவியென்பவள் தனது கணவனின் குணத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல விட்டுக் கொடுக்கும் மனநிலையோடு வாழ்வதற்கு தன்னை  தயார்படுத்திக் கொள்ளும் போது தான் கணவனின் முழுமையான அன்பிற்குரியவளாகவும்,நல்லதொரு குடும்பத்தலைவியாகவும் பரிணாமம் பெறுகிறாள்.
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வார்த்தைக்கு உயிரோட்டம் கொடுப்பதில் கணவன்,மனைவி இருவருக்குமே சமபங்கு உண்டு என்பதை பின்வரும் திருக்குர்-ஆன் வசனம் நமக்கு உணர்த்துகிறது பாருங்கள்:
நீங்கள் சமாதானத்தைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர்(அநீதி இழைப்பதிலிருந்து)பயந்து(நடந்து)கொள்வீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும்,மிகக் கிருபை உடையோனாகவும் இருக்கிறான்.(அத்தியாயம்- 4,வசனம்- 129).
இந்த இறை வசனத்தை மனதில் சுமந்து அதன்படி வாழக்கூடிய
நல்லதோர் தலைவன்,தலைவியை பெற்ற குடும்பமே மன மகிழ் குடும்பமாகும்!(அல்ஹம்துலில்லாஹ்……
இன்ஷா அல்லாஹ் நல்லதோர் பிள்ளைகள் பற்றி விரைவில்….
இது பற்றிய உங்கள் கருத்துக்களை jahangeerh328@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

News

Read Previous

குறைந்து போன கடிதப் பழக்கம்

Read Next

விஞ்ஞான‌மே………..! உன் விடையென்ன‌ ………?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *