மத்தியப்பிரதேச கிராமம் காட்டும் வழி

Vinkmag ad
அறிவியல் கதிர்

மத்தியப்பிரதேச கிராமம் காட்டும் வழி
பேராசிரியர் கே. ராஜு

மத்தியப் பிரதேச கிராமங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. தர்காய் குர்ட், கவுர் போன்ற கிராமங்களில் தண்ணீரை மீண்டும் பயன்படுத்த புத்திசாலித்தனமானதோர் எளிய வழியைக் கடைப்பிடிக்கின்றனர். கயிற்றுக் கட்டில்களின் மேல் ஏறி நின்று குளிப்பார்கள். உடம்பின் மேலே ஊற்றி கீழே வழிந்தோடும் நீரைப் பிடிக்க ஒரு அகலமான பாத்திரத்தை வைத்திருப்பார்கள். அந்த நீரை வீணாக்காமல் துணிகளைத் துவைக்கவும் பாத்திரங்கள் தேய்க்கவும் பயன்படுத்துவார்கள்!
ஆறு கி.மீ. தள்ளியுள்ள கயாஜித்புராவில் இந்தளவு கடும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காமல் மக்கள் குளிக்க முடிகிறது. 700 பேர் வசிக்கும் இந்தக் கிராமம் கடும் வறட்சி  நிலவும் டிகம்கார் மாவட்டத்தில் இருக்கிறது. தன்னுடைய உழவு முறைகளை சீர்திருத்தி அமைத்துக்கொண்டதன் காரணமாக நீர்ப் பற்றாக்குறையிலிருந்து தப்பித்துக் கொள்கிறது இக்கிராமம். மூன்றாண்டுகளுக்கு முன்வரை மற்ற கிராமத்தினரைப் போல இந்தக் கிராமத்து மக்களும் தண்ணீரைப் பேராசையுடன் குடிக்கும் கோதுமை, சோயாபீன்ஸ் பயிர்களைத்தான் பயிரிட்டு வந்தார்கள். 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கும்ஹெதி ஏரிதான் அவர்களுக்கு நீரை அள்ளித் தந்து கொண்டிருந்தது. ஆனால் ஏரியில் நீர் மட்டம் குறைந்து குறைந்து 10 அடி ஆழம் மட்டுமே என்ற அளவுக்குச் சென்றுவிட்டது. நீர் இருக்கும் ஏரியின் சரிவான கீழ்ப்பகுதியில்  இந்த கிராமம் இருந்ததால் மற்ற கிராமங்கள் அளவுக்கு பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனாலும் நீர்ப்பற்றாக்குறை இந்தக் கிராமத்து விளைச்சலையும் பாதிக்கத் தொடங்கியது.சண்டேலா அரசர்கள் 10வது நூற்றாண்டிற்கும் 13வது நூற்றாண்டிற்கும் இடையில் 900 ஏரிகளை உருவாக்கியிருந்தார்கள்.  விஞ்ஞானம் வளராத அந்தக் காலத்திலேயே  அரசர்களுக்கு நீரைப் பாதுகாக்கத் தெரிந்தது. ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்த யுகத்தில் நமக்கு ஏரி நீரைப் பாதுகாத்துக் காப்பாற்றத் தெரியாததால் இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல இங்கும் அந்த ஏரிகள் காணாமல் போய்விட்டன.
எனவே மூன்றாண்டுகளுக்கு முன்  லாபநோக்கம் இல்லாத ஒரு வேளாண் அமைப்பின் ஆலோசனையின் பேரில் தங்களது வயல்களில் ஒரு பகுதியை இயற்கை வோளாண் தோட்டமாக மாற்றினர். டிகம்கார் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக வறட்சியை இப்படித்தான் சமாளித்து வருகிறோம் என்கிறார் தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் இரண்டு ஆண்டுகளாக காய்கறிகளைப் பயிரிட்டு வரும் ராஜேந்திர பிரசாத் என்ற தலித் விவசாயி. பக்கத்து கிராமங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, ராஜேந்திர பிரசாத் மற்றும் 20 கயாஜித்புரா விவசாயிகளின் வயல்கள் பச்சைப் பசேலென்று பிரகாசிக்கின்றன. கோதுமை, சோயாபீன்சிலிருந்து காய்கறிகளுக்கும் பப்பாளி போன்ற பழ வகைகளுக்கும் ஒரு பகுதி நிலத்தை மாற்றியது மட்டுமல்ல, நீர் மேலாண்மையில் திறனுடன் செயல்படுவது எப்படி என்பதையும் கற்றுக் கொண்டுள்ளோம் என்கிறார் பிரசாத். தங்களது வயல்களில் சரிவான பகுதிகளை (slopes) அமைத்து அவற்றில் காய்கறிப் பயிர்களை நெருக்கமாக நட்டு வளர்க்கின்றனர் இந்தக் கிராமத்து விவசாயிகள். சொட்டு சொட்டாக கீழே வரும் நீர் பரந்த பகுதிகளுக்குப் போய்ச் சேருகிறது. பப்பாளி, வெங்காயம், மிளகாய், வெண்டைக்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளைப் பயிரிடும் மற்றொரு விவசாயி நன்ட்ராம் வாரச் சந்தையில் அவற்றை விற்று, வாரம் 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
கடந்த மூன்று வாரங்களாக அறிவியல் கதிர் பகுதியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் நம் தமிழகத்து விவசாயிகளைப் போய்ச் சேர வேண்டும். அவரவர் கிராமத்தில் வறட்சியைச் சமாளிப்பது எப்படி என்பதை உரிய வேளாண் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வழிமுறைகளைக் கண்டறிய முற்பட வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற தாரக மந்திரத்தை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக் கொண்டால், எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பதை எளிய மனிதர்கள் நிரூபித்துக் காட்டியுள்ள வரலாற்றைத்தான் சுருக்கமாக அவர்கள் முன் வைத்திருக்கிறோம்.

News

Read Previous

வா நண்பா பகைக்கலாம்!

Read Next

சிறுகதை : வசீகரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *