பொதுவான அடிப்படை மருந்துகளே எளிய மக்களின் உயிர்நாடி

Vinkmag ad

அறிவியல் கதிர்

பொதுவான அடிப்படை மருந்துகளே எளிய மக்களின் உயிர்நாடி
பேராசிரியர் கே. ராஜு

எல்லைக்கோடுகளற்ற மருத்துவர்கள் (Doctors without Borders – MSF) என்ற சர்வதேச மனிதநேய அமைப்பு 69 நாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேகமாகப் பரவும் தொற்றுநோய்கள், இயற்கைப் பேரிடர்கள், மனிதர்களைக் காவு வாங்கும் உயிர்ப்பலிகள் போன்றவற்றால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அமைப்பு இது. உலகின் விளிம்புநிலை மக்களுக்கு உடல்நலப் பாதுகாப்பு அளிக்கும் பொதுவான அடிப்படை மருந்துகளையே (generic drugs) இந்த அமைப்பு முழுவதுமாகச் சார்ந்திருக்கிறது. உடல்நலப் பாதுகாப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கும் பாவப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றுவதன் காரணமாகவே இந்த அமைப்பு சக்தி வாய்ந்த பெரிய மருந்துக் கம்பெனிகளோடு மோதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. அண்மையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் ஈவிரக்கமின்றி அகதிகளை விரட்டியடித்த காரணத்தால் அந்த நாடுகளிலிருந்து நிதியுதவி எதையும் பெறுவதில்லை என்று எம்எஸ்எஃப் எடுத்த முடிவு ஊடகங்களின் பரபரப்புச் செய்தியாயிற்று. எம்எஸ்எஃப்பின் பொதுச்செயலாளர் ஜெரோம் ஓபெரேவுடன் ஏ. ரங்கராஜன் நடத்திய நேர்காணல் 2016 செப்டம்பர் 11 தி ஹிண்டு நாளிதழில் வெளியானது. அதன் சுருக்கம் உங்கள் முன் :
கவனிப்பாரற்று ஒதுக்கப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்பின் (Drugs for Neglected Diseases Initiative – DNDi) ஓர் அங்கமாகவே எம்எஸ்எஃப் செயல்பட்டு வருகிறது. 1999ஆம் ஆண்டில் சமாதானத்திற்காக அளிக்கப்பட்ட நோபல் பரிசுத் தொகையை முதலீடாகக் கொண்டுதான் இந்த அமைபு 2003-ல் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ஆறு புதிய சிகிச்சை முறைகளை வளர்த்தெடுத்திருக்கிறோம். DNDi – யின் மதிப்பீட்டின்படி ஒரு புதிய வேதியியல் சிகிச்சை முறையை உருவாக்க 100லிருந்து 150 மில்லியன் யூரோக்கள் வரை செலவாகும் (ஒரு யூரோ 1.2 அமெரிக்க டாலருக்குச் சமம்). அதே போன்ற ஒரு முறையை உருவாக்க பெரிய மருந்துக் கம்பெனிகள் 802 மில்லியன் டாலரிலிருந்து 2.6 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்கின்றன!
எம்எஸ்எஃப்பிடம் நிதி குறைவாகவே இருக்கிறது. அதன் திட்டங்களில் ஜெனரிக் மருந்துகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. எச்ஐவி, காசநோய், மலேரியா ஆகிய நோய்களுக்கு நாங்கள் பயன்படுத்தும் மருந்துகளில் மூன்றில் இரு பங்கு இந்தியாவிலிருந்து கிடைப்பவையே. எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கான செலவு 2000ஆம் ஆண்டில் 10000 டாலர்களாக இருந்தது. அது இன்று 100 டாலர்களாகக் குறைந்திருப்பதற்குக் காரணம் ஜெனரிக் மருந்துகளால்தான். இதனால் மேலும் 1 கோடியே 60 லட்சம் பேர்களை இந்த சிகிச்சை சென்றடைய முடிந்தது. ஏழை மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கக் கைகொடுக்கும் ஜெனரிக் மருந்துகளின் பங்கினை இன்று யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. காரணம், இன்று அவை ஏழை எளிய மக்களின் உயிர்நாடியாக மாறியிருக்கின்றன. இந்தியா மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளில் இரு அம்சங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மருந்துகளுக்கு பின்வாசல் வழியாக ஏகபோக அந்தஸ்து கொடுப்பது ஒன்று. ஒரு மருந்துக் கம்பெனிக்கு இருபது ஆண்டுகளுக்குக் காப்புரிமை என்ற தற்போதைய விதியைத் தளர்த்தி மேலும் நீட்டித்துக் கொடுப்பது மற்றொன்று. இவ்விரண்டுமே சர்வதேச சட்டத்தின் ஆணைகளை மீறி நடப்பவை.
டிரான்ஸ்-பசிபிக் கூட்டமைப்பினை அமெரிக்கா முன்னின்று நடத்தி வருகிறது. மருந்துக் கம்பெனிகளின் ஏகபோகத்தை வலுப்படுத்தி காப்புரிமைக்கான காலத்தை தேவையின்றி நீட்டிக்க இந்தக் கூட்டமைப்பு முயற்சி செய்துவருகிறது. மருந்துகளின் விலை உயர்வதற்கே இது வழிசெய்யும் என்பதால் நாங்கள் அதை எதிர்க்கிறோம். ஏகபோகக் கம்பெனிகளின் மூலமாக மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பரிசுகள் கொடுத்து மருந்து விலையேற உதவும் விதிமுறைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாட்டினைக் குறைத்து அவற்றைக் கட்டுபடியான விலையில் கொடுக்க உதவும் ஆராய்ச்சிகளை பணம் படைத்த மருந்துக் கம்பெனிகள் ஊக்குவிப்பதில்லை.
எம்எஸ்எஃப் மருத்துவர்களாலும் பத்திரிகையாளர்களாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு.  நாங்கள் பணி செய்யும் பகுதிகள் ஊடகங்களின் பார்வை படாத இடங்கள். சண்டை சச்சரவுகளில் நாங்கள் தலையிடாமல் ஒதுங்கியிருக்கவே விரும்புகிறோம். ஆனால் எது நியாயம் என நினைக்கிறோமோ அதை வெளிப்படையாக உரத்துச் சொல்ல நாங்கள் தயங்குவதில்லை. சமூகத்திற்கு ஆதாரமான பிரச்சனைகளில் நாங்கள் ஒரு நிலை எடுப்பதை `அரசியல் என விமர்சிப்பதை நாங்கள் ஏற்க முடியாது.

News

Read Previous

விவசாயம் சுற்றுச்சூழல் உடல்நலன்

Read Next

‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *