பேரா. s. முஹம்மது ஹுசைன் நயினார்

Vinkmag ad

நினைவு கொள்ளப்பட வேண்டிய அறிஞர் பேரா. s. முஹம்மது ஹுசைன் நயினார்.
சீதக்காதி நொண்டி நாடகம்.
கலிமாச் சொன்ன கள்வன்.

அறிமுகம்
அரண்மனைகளில் கோயில் மண்டபங்களில் புழங்கி வந்த காப்பிய இதிகாசப் புராணங்கள் அமானுஷ்யமான, அதீத ஆற்றல்கொண்ட கதாநாயகர்களைக் கொண்டிருக்கும். அப்படியல்லாமல், 17,18ம் ஆண்டுகளில்தான் வெகுஜனங்களின் வாழ்வைத் தழுவி அவர்கள் ரசிக்கும்படியாக பள்ளு குறவஞ்சி, நொண்டி நாடகம், கீர்த்தனை நாடகங்கள் போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றியதாக ஆய்வாளர்கள் சொல்வார்கள். நொண்டி நாடகங்கள் சிற்றிலக்கியங்களில் ஒரு வகை.
சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற சமயங்கள் தொடர்பான நொண்டி நாடகங்கள் இருந்திருக்கின்றன.
சைவச் சமயத்திற்கு திருச்செந்தூர் நொண்டி நாடகம்,பழனி நொண்டி நாடகம்,திருக்கச்சூர் நொண்டி நாடகம் குன்றக்குடி குமரன் பேரில் நொண்டி நாடகம், தில்லைவிடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், திருமலை நொண்டிநாடகம், சாத்தூரப்பன் நொண்டி நாடகம், ஆதி மூலேசர் நாடகம் கிடைத்துள்ளன. வைணவச் சமயத்திற்கு திருப்புல்லாணி நொண்டிநாடகம், திருக்குடந்தை சாரங்கபாணி நாடகம் முதலியன கிடைத்துள்ளன. கிறிஸ்துவ மதத்திற்கு ஞான நொண்டி நாடகம் கிடைத்திருக்கிறது
நொண்டி நாடகங்கள் குறித்து ஆராய்ந்த டாக்டர் முத்து சண்முகனார் அச்சிலும், ஓலைச்சுவடியிலும் இருக்கும் 26 நொண்டி நாடகங்களை தொகுத்து பட்டியிலிட்டுள்ளார். இராமநாதபுரம்,மதுரை,திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தனவாக பத்து நொண்டிநாடகங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
நொண்டி ஒருவன் தனது கடந்தகால வாழ்வினை இசைப்பாடலுடன் பாடி நடித்துக்காட்டியதால் இது நொண்டிநாடகம் எனப்பட்டது. நாடகத்தை ஆடுகிறவன் ஒற்றைக்காலைக் கட்டிக் கொண்டு ஆடுவதால் அது ஒற்றைக்கால் நாடகம் எனவும் அழைக்கப்ட்டிருக்கிறது. இறைவனைப் பற்றி பாடுவதாகவும், தன்னை ஆதரித்த வள்ளலைப் பற்றி பாடுவதாகவும் நொண்டி நாடகங்கள் இருக்கின்றன.

நொண்டி நாடக வகைகளில் இஸ்லாமிய சமயம் சார்ந்து கிடைக்கக்கூடிய சீதக்காதி நொண்டி நாடகம் அரிதானது. வகுதை என்னும் கீழக்கரையில் பதினேழாம் நூற்றாண்டில் வள்ளலாக விளங்கி வந்த சீதக்காதியைப் பாடுபொருளாகக் கொண்டது. சீதக்காதி நாடகம் பல வரலாற்றுச் செய்திகளைச் சொல்லுகிற நாடகமாக இருக்கிறது. சீதக்காதியுடன் தொடர்புடைய மகான சதக்கத்துல்லா அப்பா, மறவர்சீமையை ஆண்ட கிழவன் சேதுபதி, தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள், ஔரங்கசீப்பின் சேனைகள் எட்டுவருடங்கள் (1689-1697) செஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது போன்ற வரலாற்றுச் சம்பவங்களோடு சீதக்காதி நாடகம் தொடர்புடையதாக இருக்கிறது.

சீதக்காதி நொண்டி நாடகத்தைப் பதிப்பித்தவர், முப்பதுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறபி, பார்ஸி, உறுதுத் துறை தலைவராகப் பணியாற்றிய S.முஹம்மது ஹுசைன் நயினார் அவர்கள்.
2000க்கும் மேற்பட்ட தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூற்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்தாதி, கலம்பகம் கோவை, தாலாட்டு ஏசல் பள்ளு சதகம் பிள்ளைத்தமிழ் என்று தமிழ் சிற்றிலக்கியத்தின் அனைத்து வகைகளிலும் தமிழ்ச் செய்யுள் மரபுக்குட்பட்டு பல படைப்புகள் முஸ்லிம் புலவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
அவ்விலக்கியங்கள் இஸ்லாத்தின் மார்க்க நம்பிக்கை மற்றும் நடைமுறைகள் சம்பந்தப்பட்டு தனது வித்தியாசத்தைப் பேணிய நிலையிலும், தான் பரவிய தமிழ் நிலப்பரப்பின் பண்பாட்டு அம்சங்களையும் உள்ளீர்த்து வளர்ந்து வந்துள்ளது.
தமிழகத்தைப் பற்றி ஏராளமான செய்திகளைத் தெரிவிக்கும், உ.வே.சாமிநாதைய்யர் அவர்களின், எழுநூற்று ஐம்பது பக்கங்களுக்கு மேலான அவரது என் சரித்திரம் நூலில் தஞ்சைக் களத்தூர் பகுதியிலுள்ள வெற்றிலை கொடிக்கால் வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழ் இலக்கியப் பயிற்சி மிக்கவர்களாயும் கம்பராமாயணம், திருவிளையாடல், பிரபுலிங்கலீலை போன்ற நூற்களை மதிப்புடன் கற்று வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். தானும் அந்நூற்களை அந்த முஸ்லிம்களிடம் கேட்டுச் சுவைத்ததையும் கூறியிருக்கிறார்.

வரலாற்று ரீதியாகவும் தமிழ் நாட்டில் இஸ்லாம் பரவிய விதம் வடநாட்டைவிட வேறுபட்டது என்ற விஷயம் இருபதுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக விளங்கிய கிருஷ்ணசாமி ஐயங்காரினாலும் கூறப்பட்டுள்ளது.
1310ல் மாலிக்காபூர் தென்னகம் நோக்கி படையெடுத்து வந்தபோது ஹொய்சாளர்களின் தலைநகராக விளங்கி வந்த கண்ணனூர் பகுதியில் கலிமா மற்றும் தெரிந்து மற்ற அனுஷ்டானங்கள் தெரியாதிருந்த அரைகுறை முஸ்லிம்களுக்கு எந்தப் பாதகமும் செய்யாமல் விலகிவிட்டதை குஸ்ரு என்ற இஸ்லாமிய வரலாற்றாசிரிர் குறிப்பிட்டுள்ளதை அவர் தனது நூலான South India and Her Muhammadan Invaders ல் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

புறச்சமயங்கள் தத்தம் கடவுளர்களின் மீது கடவுள் வாழ்த்துப்பாடி நொண்டி நாடகத்தை ஆரம்பிக்கும் போது சீதக்காதி நொண்டி நாடகம் நபிகள் நாயகம் வணக்கம், நான்கு கலிபாக்களான அபூபக்கர், உமறு கத்தாப், உதுமான், அலி மற்றும் ஹசன் ஹீசைன் வணக்கம், ஞானவழியான காதிரியா தரிக்காவை ஸ்தாபித்த முகையத்தீன் ஜீலானி மேல் பாடப்பட்ட காப்புப் பாடல்களை கொண்டுள்ளது
.
நொண்டி நாடகங்களின் பொதுத் தன்மைகள்.

நொண்டி நாடகங்களில் சூது பொய் களவு புரட்டு நயவஞ்சகம், பில்லி சூன்யம்,சொக்குப் பொடி வித்தை, ஆருடம் என்று ஏகப்பட்ட வித்தைகளில் கைதேர்ந்த கள்வர்கள், கடைசியில் தாசியின் மீது கொண்ட மையலால் திருடச் செல்கிறார்கள். தாசி திருடனிடம் தான் பறித்த பணம் போதாதென்று தனக்கு குதிரை வேண்டுமென்பாள். அவள் ஆசையை நிறைவேற்ற கள்வர்கள் குதிரையையோ, யானையையோ திருடச்செல்வார்கள். திருடுமிடத்தில் அகப்பட்டுக்கொண்டு கைகால் வெட்டப்பட்டு தண்டிக்கப் படுவார்கள் போன்ற அம்சங்கள் நொண்டி நாடகங்களின் பொதுத்தன்மையாய் இருக்கிறது.

சீதக்காதி நொண்டிநாடகத்தில் கலிமாச்சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மதுரை அழகர் மலையைச் சார்ந்த ஒடுங்காப்புலி என்பவன், கீழக்கரையிலிருந்து சரக்குக்கப்பல் வழியாக கோழிக்கோடு சென்று அங்கிருந்து மக்கா மதினா சென்று பிரார்தித்து வெட்டுப்பட்ட கைகால்கள் வளரப்பட்டு கதிமோட்சம் பெறுகிறான்.

சீதக்காதி நொண்டி நாடகத்தின் முதல் பதிப்பை 1939ல் மெட்ராஸ் யுனிவர்சிட்டி வெளியிட்டிருக்கிறது. போன தலைமுறையைச் சார்ந்த எம். ராகவையங்கார், ஆர்.பி.சேதுப்பிள்ளை, சோமசுந்தர தேசிகர், வையாபுரிப் பிள்ளை போன்றோருடன் நல்லுறவு பேணியிருந்திருப்பது தெரியவருகிறது. சீதக்காதி இறந்ததினால் உருவான கையறம் பற்றி, படிக்காசுப்புலவரும், நமச்சிவாயப்புலவரும் இயற்றிய தனிப்பாடல்களையும் சேர்த்து, சீதக்காதி நாடகம் செம்பதிப்பாக வர அவர்கள், ஒத்தாசையாக இருந்திருக்கின்றனர்.

முஹம்மது ஹுசைன் நயினார்
அவர்கள் பழனி ஆய்க்குடியை பூர்விகமாகக் கொண்டவர். உ.பி அலிகார் பல்கலைக்கழகத்தில் அரபியும் சட்டமும் பயின்றுள்ளார். இஸ்லாமியத் துறையில் பணியாற்றினாலும், நயினார் அவர்களின் தமிழார்வத்தைக் கண்டு சென்னை யுனிவர்சிட்டி நிர்வாகம் சீறாப்புராணத்தையும், தமிழ் முஸ்லிம் புலவர்களைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டு அவரது மேற்பார்வையில் கொண்டுவரவும், பணித்திருக்கிறது.
1953ல் இரண்டாம் பதிப்பாக செய்தக்காதி நொண்டி நாடகத்துடன் சேர்த்து, செய்தக்காதிறு மரக்காயர் திருமண வாழ்த்து என்ற நூலையும் சரளாமான நடையுடன், ஆழமான நூலாராய்ச்சியுடன் பதிப்பித்துள்ளார். ராமநாதபுரம் கீழக்கரையில் திருமண வாழ்த்துக்கான ஏடுகள் முழுமையில்லாமல் சில பக்கங்கள் இல்லாமல் கிடைத்ததாயும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் போக, கேரள பொன்னானியைச் சேர்ந்த ஷெய்கு ஜைனுத்தீன் மஹ்தும் எழுதிய, போர்ச்சுகீசியர்களின் காலனியப் பரவலுக்கு, ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மலபார் முஸ்லிம்களைப் பற்றிய நூலான துஹ்பத்துல் முஜாஹித்தீ ன் (Tuhfat-Al-Mujahidin) என்ற அரபியில் எழுதப்பட்ட நூலை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார் ஹுசைன் நயினார்.
தென்னிந்தியாவைப் பற்றிய அரபு பூகோளவாதிகளின் அறிவு (Arab Geographer’s knowledge of Southern India) என்பது லண்டனில் அவரது முனைவர் பட்ட ஆய்வாக இருந்திருக்கிறது. இரண்டு நூல்களையுமே சென்னைப் பல்கலைக்கழகம் 1942ல் வெளியிட்டிருக்கிறது. ஆற்காடு நவாபுகளைப் பற்றியும் இருதொகுதிகள் (1934,1939) ஆண்டுகளில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. சுதந்திரநாடு என்ற தமிழ்ப் பத்திரிகையையும், 1951-52 காலகட்டங்களில் அவர் நடத்தி இருக்கிறார்.1963ல் மறைந்திருக்கிறார் ஹுசைன் நயினார்.

தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களும் தனது வரலாறு என்ற கற்பிதம் என்ற நூலில் நயினார் அவர்களைப் பற்றி அருமையான குறிப்புகளை எழுதியுள்ளார்.
சீதக்காதி நொண்டிநாடகம், சிரமமில்லாமல் எளிதில் வாசிக்கும்படியாக இருக்கிறது. வெளியாகி அறுபதுக்கும் மேலாக ஆண்டுகளாகவிட்டது. புதுத் தலைமுறை வாசகர்களுக்காக மறுபதிப்பு காணவேண்டிய அவசியமான நூல் சீதக்காதி நொண்டி நாடகமாகும்..
தமிழ் அச்சு வரலாற்றில், அரிதான இந்நூலை பதிப்பித்த அறிஞர் ஹுசைன் நயினார் அவர்கள் நினைவு கொள்ளப்பட வேண்டிய அறிஞர் ஆவார்.

நன்றி கோம்பை அன்வர்.

Image may contain: 1 person, text that says 'பேரா. எஸ். முகம்மது உசேன் நயினார்'
——-

News

Read Previous

துணிந்து நில் தமிழா!

Read Next

புதிய கல்விக் கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்…ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *