பெண் கல்வியின் அவசியம்

Vinkmag ad

 

( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )

முன்னுரை

கல்வி அவசியம் தான். அதிலும் பெண் கல்வி என்பது மிக மிக அவசியமே ! இதைச் சொல்வதற்கு அழகாய்ச் சொல்வதற்கு அழுத்தமாய்ச் சொல்வதற்கு இதோ … என் எழுத்துக்கள் கட்டுரையாய்… கை கோர்த்துள்ளன.

கல்வி ஏன் அவசியம்

ஒருவரிடம் செல்வம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கல்லாமை இருக்கவே கூடாது. முகத்திற்கு கண்கள் முகவரியாகும் இதுபோலத்தான் மனிதர்களுக்கு முகவரி கல்வியாகும். இந்தக் கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் வள்ளுவப் பெருந்தகை தனது குரலில்,

”கண்ணுடைய ரென்பவர்  கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். ”

என அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்.

அவருக்குப் பின் வந்த நம் தமிழ் ஒளவை மூதாட்டியும்

கற்கை நன்றே கற்கை நன்றே.. என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வியின் அவசியத்தை சொல்லிப் போயிருக்கிறார்.

கல்வி என்பது ஒரு செல்வம் பிறர் களவாட முடியாத செல்வம் இதை எவ்வளவு எடுத்தாலும் எவ்வளவு அள்ளிப் பிறர்க்குக் கொடுத்தாலும் குறையாத செல்வமாகும். ஒருவரிடம் பணம் இருக்கலாம் பங்களா இருக்கலாம் ஏவலுக்கும் காவலுக்கும் எத்தனையோ பேர்கள் அவரிடம் இருக்கலாம். இவையெல்லாம் இருந்தும் அவரிடம் கல்வி இல்லாதிருந்தால் அவன் அனாதையே !

கல்வி நபிமார்களின் பொருள் என்று இஸ்லாம் உயர்த்திச் சொல்லும். கல்வியை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக்கி அதனையே கட்டாயமாக்கி விட்டது இஸ்லாமே என்று சொல்வேன் !

குறிப்பாக கல்வியைப்பற்றி இஸ்லாம் ஒரு சிகரப் பொன்மொழியைத் தந்துள்ளது. அது உலகம் ஒப்புக்கொள்ளும் உன்னத வாசகமாகும். அந்த வாசகம் என்னவென்று அறிகிறபோது அடடா என்று வியந்து போகிறோம். அப்படி வியக்க வைக்கும் நாட்டைக் கவரும் வாசகம் நம்மைக் கவரும் வாசகம்,

தாயின் மடியே பிள்ளைக்கு

முதற்பள்ளி !              என்பதாகும்.

கல்வி தான் ஒருவனை சம்பூர்ணப்படுத்துகிறதென்கிறார் ஈஸா நபி (அலை) அவர்கள்.

கற்றலே இனிமை

காதல் இனியதென்பார் ஆனால் அதை விட கல்வி கற்றலே இனிமை எனலாம் ! இறைவனின் படைப்பினங்களிலே மனிதனே உச்சம் எனும் போது, அந்த மனிதர் சமுதாயத்தில் உச்சநிலை பெறுவதற்கு கல்வியே தோழமையாகும்.

பெண் கல்வி சிந்தனை

 

 

 

இது மட்டுமா… ? பெண் கல்வியைப்பற்றி பெண் கல்வியின் அவசியம் பற்றி நம்மவர்கள் மிக நயமாகவே எடுத்துக் சொல்லி இருக்கிறார்கள். நம் பாரதி பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என பெண் கல்வி அவசியத்தை முதலில் பாடியவன் அடுத்து,

நம் புதுவைக்குயில் பாவேந்தர் பாரதி தாசன் கல்வியில்லா பெண்கள் ஒரு களர்நிலம் என்று சாடியிருக்கிறார்.

நாநயம் மனிதனுக்கு அவசியம் – இதுவே

நல்லோர்கள் சொல்லி வைத்த

நன்மையான ரகசியம் !

என்று ஒரு திரைப்படப்பாடல் சொல்லும் அதுபோல …

கல்வியே மனிதனுக்கு அவசியம் – இதுவே

கற்றோர்கள் சொல்லி வைத்த

கற்கண்டான ரகசியம்  என்று மாற்றிப்பாடலாம்.

நம் தித்திக்கும் திருமறையாம் திருக்குர்ஆன் கல்வியின் மேன்மையைப் பற்றி

கற்பவராக இருங்கள் !

கற்பிப்பவராக இருங்கள்  என்று அழகாக எடுத்துரைக்கிறது.

ஒரு பெண் படிக்கிறபோது பேதுமை மறைகிறது ! பெருமை சேர்கிறது !

இன்றைக்கு சிறைக்கைதிகள் கூட சிறையில் இருந்த படியே படித்து தேர்வு எழுதி பட்டதாரியாகிற வாய்ப்பு கனிந்திருக்கிறது என்னும் போது கல்விக்கான மறுமலர்ச்சி காலம் இது எனலாம் !

கல்வியின் வகைகள்

இன்று கல்வி பறந்து விரிந்திருக்கிறது. மார்க்கக்கல்வி, தொழிற்கல்வி, கணிப்பொறிக்கல்வி, வலைதளக்கல்வி, பொறியியல் கல்வி, மருத்துவக்கல்வி என்று இருக்கிறது. அவரவர் ஆர்வத்தின்படி தமக்கு விருப்பமான கல்வியைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

இன்றைக்கு அனைத்து வகைக் கல்வித்துறையிலும் பெண்கள் நிறம்படங்கெடுத்து வருகின்றார்கள் பெண்களுக்கான கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியர் பயிற்சி நிலையம், உடற்பயிற்சி கல்வி நிலையம் என அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் கல்வி நிறுவனங்கள் பெருகி உள்ளன.

தொழிற்கல்வியின் அவசியத்தை,

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் !

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் !

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருப்பதும் உனக்கே … சரியாகுமோ … என்று

தமிழக அரசின் முன்னாள் ஆஸ்தான கவிஞர் நாமக்கல் கவிஞர்    வே. இராமலிங்கம் பிள்ளை தம் கவிதை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கணிப்பொறி கல்வியில் இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக படித்த பெண்களும் ஈடுகொடுத்து கற்று வேலைவாய்ப்பையும் பெற்று வருகின்றனர். இது தவிர பொறியியல், மருத்துவத்துறை இன்னும் பல்வேறு துறைகளிலும் கல்வி கற்கும் விழிப்புணர்வு பெண்களிடம் வந்துள்ளது.

மகத்தான மார்க்கக்கல்வி

எவர் எந்தக்கல்வி படித்தாலும் மனிதன் மனிதனாக வாழ பயிற்சி அளிப்பது ஒரு கல்வி. அந்தக்கல்வி எந்தக்கல்வி ? என்ன கல்வி என்று சிந்திக்கிறபோது அந்தக்கல்வி எந்தக்கல்வி என்று நமக்கு புலப்படுகிறது அது தான் மார்க்கக்கல்வி. ஒவ்வொருவரும் தம் மதம் சார்ந்த அடிப்படை கல்வியை கற்க வேண்டும். இந்துவானவன் தன் மதச்சடங்கின் தத்துவத்தை அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன் தன் வேதங்கள் வெளிப்படுத்தும் உண்மைகளை அறிந்திருக்க வேண்டும். சீக்கியர் இனத்தை சார்ந்தவரும் அப்படியே இதுபோல முஸ்லீம் ஆண், பெண் இருபாலரும் தமது மார்க்கக் கல்வியை கட்டாயம் கற்க வேண்டும் ! அந்த மார்க்கக்கல்வி தான் மனிதன் மனிதனாக பயிற்சி அளிக்கிறது. அவனை நேர்வழியில் செல்ல எடுத்துரைக்கிறது. இறை அச்சத்தை உணர்த்தி தவறு செய்யாமல் மீட்கிறது. உண்பதில் ஒழுங்கு, உறக்கத்தில் ஒழுங்கு இப்படி சாலிஹான மூமினாய் மார்க்கக்கல்வி நம்மை செதுக்குகிறது.

அண்ணலாரின் பொன்மொழிகளை தொகுக்கும்போது அதில் அதிகமான ஹதீஸ்களை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மூலமே கிடைத்தது என என்னும்போது வியந்து போகிறோம் !

உலக கல்வியால் அதிக அளவு பொருள் ஈட்டலாம், வசதியாக வாழலாம் ஆனால் அதே சமயத்தில் வல்ல அல்லாஹ்விற்கு உவப்பானவராய் அவனுடைய ரசூலுக்கு உவப்பானவராய் நாம் வாழ்ந்து மறுமையிலும் பெருமை பெற வேண்டுமானால் மார்க்கக் கல்வியே அவசியம் என்பேன் !

இந்த மார்க்கக்கல்வி பயிலும் பயிற்சியை இளமையிலேயே தொடங்கி விட வேண்டும். நம் வீட்டிற்கு அருகில் உள்ள நிஸ்வான் மதராஸாக்களுக்கு தினமும் அனுப்பி வைத்து தன் பிள்ளை அரும்புகள் ஆண் பிள்ளை என்றால் ஏழு வயதிலேயே தொழுவதற்கு பயிற்சி அளிக்கு வேண்டும் !

அழுதால் நன்மை இல்லை, பள்ளியிலே தினம்

தொழுதாலே… நன்மை என்பதை உணரவேண்டும் !

உனக்கு தொழ வைக்கும்முன்

நீ தொழுது கொள் என்பார்கள் !

தொழுகையே இறைவனோடு பேசும் மொழி என்று தொழுகையை

உயர்த்திப் பேசுவார்கள் !

பெண்களின் கடமை

பெண்கள் படித்திருந்தால் குடும்ப நிர்வாகம் சீராகும் செம்மையாகும் எதிலும் ஏமாறாத விழிப்புணர்வு வரும். இன்றைக்கு ஏலச்சீட்டு என்று ஒன்றை நடத்தி மோசம் செய்வோரை ஊடகம் பத்திரிகைகள் வழியாக அறிகிறோம். இந்த விபரீதத்திலிந்து தப்பிக்க பெண் கல்வி மிகமிக அவசியம். குழந்தை வளர்ப்புக்கலைக்கும் பெண் கல்வி அவசியம். குடும்பத்தில் உள்ள வயதானவர்களை பராமரிப்பதற்கு பெண் கல்வி அவசியம். பெண் கல்வி என்பது ஒரு பக்குவமாகும். உலையில் போட்ட அரிசியை பக்குவமாக பதம் பார்த்து வடித்தால் தான் சோறாகும் இல்லையென்றால் அரிசியாகவே இருக்கும். உண்பதற்கு தகுதியில்லாமல் போய்விடும்.

பெண்கல்வியில் விழிப்புணர்வு

இந்தியாவில் அனைவரும் படிக்க வேண்டும். ஓரளவு கையெழுத்தாவது போடத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கொள்கைக் கோட்பாட்டோடு அறிவொளி இயக்கம் என்ற கல்வித்திட்டத்தை அரசு அறிவித்தது.

இந்தத் திட்டம் இந்தியாவில் எல்லாம் கிராமங்களையும் சென்றடைந்து பயன் தந்தது எனலாம்.

குறிப்பாகக் கிராமப்புறங்களில் இந்த அறிவொளித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிற அலுவலர்களும் சேர்ந்து மரத்தடியில் கூட சிறுவர் சிறுமியர்களைக் கூட வைத்து கல்வி போதித்தனர். முதியோர்களுக்காகவும் தனியாக கல்வி போதிக்கப்பட்டது.

இது தவிர மாலை நேரங்களில் சிறு நாடகம் இசை வடிவங்களில் கல்வியின் மேன்மை உணர்த்தப்பட்டது.

”இது சந்திரன் மேலே காலை வைக்கிற காலம்” – இன்னும்

கை நாட்டா … என்ன அலங்கோலம் !

என்று அறிவொளி இயக்கப்பாடல் எல்லோரையும் கவர்ந்தது எனச் சொல்லலாம்.

முடிவுரை

பெண் கல்வி அவசியம் தான் இதில் மறுப்பு ஏதும் இல்லை இன்னும் இந்தக் கல்வியை நவீனப்படுத்தி எல்லா கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் அதற்கான கட்டிட வசதி பிற வசதிகளை அரசு தாராளமாக செய்து கொடுக்க வேண்டும்

தனியார் கல்லூரி நிறுவனங்கள், கணிப்பொறி கற்க விரும்புவோர் எவராயினும் அவர்களுக்கு இலவசமாக கற்பிக்கும் வசதியை செய்து தர வேண்டும். படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டென்று எல்லோரும் அறிய வேண்டும்.

 

15.04.2011

News

Read Previous

வாழ்வளித்த வள்ளல்

Read Next

சரித்திரம் பேசுகிறது : கலீல் கிப்ரான்

Leave a Reply

Your email address will not be published.