பூமியைக் குளிர்விக்க புதியதொரு தொழில்நுட்பம்

Vinkmag ad

அறிவியல் கதிர்

பூமியைக் குளிர்விக்க புதியதொரு தொழில்நுட்பம்
பேராசிரியர் கே. ராஜு

கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த மாநாடு கார்பன் வெளியீடுகளைக் குறைப்பது பற்றி விவாதித்தது. பாரிஸில் ஏற்றுக் கொண்டபடி எல்லா நாடுகளும் கார்பன் வெளியீடுகளைக் குறைத்துவிடுவதாகவே வைத்துக்கொண்டாலும், பூமி சூடேறும் பிரச்சனை அவ்வளவு எளிதாகத் தீர்ந்துவிட வாய்ப்பு இல்லை. பூமி சூடேறுவதைத் தடுக்க தட்பவெப்பநிலை தொடர்பான பொறியியல் (climate engineering) துறையில் வேறு சில நடவடிக்கைகள் விரைவிலேயே முக்கியத்துவம் பெற இருக்கின்றன.  தட்பவெப்பநிலை பொறியியல் முயற்சிகளை கார்பன் மேலாண்மை, சூரியசக்தி மேலாண்மை என இருவகையாகப் பிரிக்கலாம். காற்று மண்டலத்திலிருந்து பசுங்குடில் வாயுக்களை அகற்றுவதுதான் கார்பன் மேலாண்மை. இதில் பிரதானமாக இருப்பது, கார்பனை ஈர்த்து சேமிப்பது (carbon capture and storage- சிசிஎஸ்). முதன்முதலாக இந்த முறையில் அமைக்கப்பட்ட 115 மெகாவாட் சிசிஎஸ் நிலக்கரி ஆலை கனடாவில் பவுண்டரி டாம் என்ற  இடத்தில் 2014ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. இங்கு கரியமிலவாயு வெளியீடு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் டன் அளவு குறைக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆலைகளை இங்கிலாந்திலும் பிற நாடுகளிலும் உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை அகற்ற மற்றுமொரு வழி காடுகளின் பரப்பை அதிகரித்து தேவையற்ற கரியமிலவாயுவின் ஒரு பகுதியை தாவரங்களும் மரங்களும் உள்வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்வது.  இதுதான் சூரியசக்தி மேலாண்மை. இந்தியாவின் முயற்சிகள் இந்தத் திசையில் எடுக்கப்படுகின்றன.
இவ்விரண்டு முறைகளைத் தாண்டி சூரியசக்தி மேலாண்மையில் மற்றொரு முறை பரிசோதனைக்கு வந்திருக்கிறது. சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பத்தின் ஒரு பகுதியை பூமிக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தி அதன் மூலம் பூமி சூடேறுவதைக் குறைப்பதுதான் அந்த வழி. இதற்கு சிலவழிமுறைகள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானது எஸ்ஏஐ என அழைக்கப்படும் stratospheric aerosol injection முறை. காற்று மண்டலத்தின் ஸ்ட்ராட்டோஸ்பியர் என்ற அடுக்கில் நுண்ணிய வெளிர்நிறத் துகள்களை தெளிப்பதே எஸ்ஏஐ. சூரியனிலிருந்து கிளம்பும் வெப்பக்கதிர்களில் ஒரு பகுதியை அத்துகள்கள் பிரதிபலித்துவிடுவதால்  பூமிக்கு வருவதற்கு முன்னரே அவை தடுத்து நிறுத்தப்படுகின்றன. எஸ்ஏஐ முறையை பரிந்துரைப்பவர்கள் இந்த முறையில் பூமியின் வெப்பநிலையை 1 டிகிரி சென்ட்டிகிரேட்  குறைத்துவிட முடியும் என்கின்றனர்.  இது சாத்தியம்தான் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். இயற்கை நிகழ்வுகளிலேயே  கூட இதற்கு சான்று இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பினடுபோவில் 1991ஆம் ஆண்டு வெடித்த எரிமலையின்போது 20 மெகாடன்கள் சல்பர்டையாக்சைட் துகள்கள் ஸ்ட்ராட்டோஸ்பியரில் தெளிக்கப்பட்டதில் அடுத்த சில ஆண்டுகளுக்கு பூமியின் வெப்பநிலை கணிசமாகக் குறைக்கப்பட்டது. எஸ்ஏஐ முறையில் சில விமானங்களில் சென்று ஸ்ட்ராட்டோஸ்பியரில் நுண்துகள்களைத் தெளிக்க சில பில்லியன் டாலர்கள் மட்டுமே செலவாகும். வளரும் நாடுகளே கூட இந்த செலவைச் சமாளித்துவிட முடியும். இவ்வளவு எளிதாக பூமியின் வெப்பநிலையைக் குறைக்க முடியும் எனில் சூழலியாளர்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமல்லவா? அதுதான் இல்லை. அவர்கள் வேறு ஒரு விபரீதத்திற்காகக் கவலைப்படுகிறார்கள். பினடுபோ எரிமலை பிலிப்பைன்ஸின் வெப்பநிலையை மட்டும் குறைக்கவில்லை. பிலிப்பைன்ஸைச் சுற்றியுள்ள பல நாடுகளில் மழை, மண்ணின் ஈரப்பதம், ஆற்றுநீரோட்டம் போன்ற இயற்கை நிகழ்வுகளையும் பாதித்துவிட்டது.  ஏதோ ஒரு நாடு தனது நாட்டின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் எஸ்ஏஐ முறையைக் கடைப்பிடித்தால், அது பக்கத்தில் உள்ள நாடுகளை எதிர்மறையாகப் பாதிப்பதில் போய் முடிய வாய்ப்பு இருக்கிறது. இது நாடுகளுக்கிடையே எவ்வளவு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே, எஸ்ஏஐ முறைக்கு சர்வதேச விதிமுறைகளை உருவாக்கி கறாரான கண்காணிக்கும் ஏற்பாட்டினையும் செய்தால் மட்டுமே புதிய தொழில்நுட்பத்தினால் அண்டை நாடுகளுக்கு பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.
(நன்றி : 2016 மார்ச் 9 தி ஹிண்டு நாளிதழில் ஜேஎன்யு பேராசிரியர் ஆர். ராஜாராமன் எழுதிய கட்டுரை).

News

Read Previous

ஜனாப் யூசுப் அம்பலம் இல்ல மணவிழா

Read Next

பிரதிலிபியின் மகளிர் நாள் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *