பூமியின் ஏழு சகோதரிகள்

Vinkmag ad

அறிவியல் கதிர்

பூமியின் ஏழு சகோதரிகள்
பேராசிரியர் கே. ராஜு

     2016 ஆகஸ்ட் 22 அன்று வெளியான அறிவியல் கதிர் கட்டுரையில் பூமியைப் போலவே உள்ள மூன்று கிரகங்களைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு பல்வேறு தொலைநோக்கிகளைக் கொண்டு பல குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து  டிரப்பிஸ்ட்-1  குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருபவை மூன்று அல்ல, ஏழு கிரகங்கள் என இன்று தெரியவந்திருக்கிறது. அளவில் பூமியைப் போன்றே உள்ள இந்த ஏழு வெளிகிரகங்களும் பூமியிலிருந்து சுமார் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள டிரப்பிஸ்ட்-1 நட்சத்திரத்தைச் சுற்றி வருவதைப் பற்றி விஞ்ஞானிகளின் சர்வதேசக் குழு அண்மையில் வெளிவந்த `நேச்சர் இதழில் அறிவித்திருக்கிறது. வெளிகிரகங்கள் (exoplanets) என்றால் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள கிரகங்கள் என்று பொருள். ஹப்பிள் தொலைநோக்கி போன்ற மிகப் பெரிய தொலைநோக்கிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுடன் ஒப்பிடும்பொழுது பெல்ஜியத்தில் உள்ள லீஜ் பல்கலைக்கழக  ஆய்வாளர்கள் பயன்படுத்திய டிரப்பிஸ்ட்  60 செ.மீ. தொலைநோக்கி அளவில் மிகச் சிறியது. சிலியில் உள்ள லா சில்லா வான் ஆய்வகத்தில் நிறுவப்பட்ட இந்த சிறிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வுச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடிந்தது. இரவு வானில் நட்சத்திரங்களைக் கூர்நோக்குவதற்கான மிகச் சிறந்த இடங்களில் ஒன்று என்பதால் ஆய்வகம் அமைக்க அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
நம்மைப் பரவசப்படுத்தக்கூடிய செய்தி என்னவெனில், இந்த ஏழு கிரகங்களிலுமே தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதுதான். அதிலும் மூன்று கிரகங்கள் உயிரினம் வசிக்கத்தகுந்த பகுதி (habitable zone) என்ற இலக்கணத்தின் கீழ் வருபவை. இந்த மூன்று கிரகங்களின் தரைப்பகுதியில் தண்ணீர் திரவவடிவில் இருப்பதால் உயிரினம் இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமாகவே இருக்கிறது.
ஒளி ஓர் ஆண்டில் பயணம் செய்யும் தூரம் ஒரு ஒளி ஆண்டு எனப்படுகிறது. (ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 300, 000 கி.மீ. அதாவது ஓராண்டில் ஒரு டிரில்லியன் கி.மீ.) டிரப்பிஸ்ட்-1 நட்சத்திரமும்  அதன் ஏழு கிரகங்களும் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன என்றால் பூமியிலிருந்து புறப்படும் ஒளி அங்கு போய்ச் சேர 40 ஆண்டுகள் ஆகும் என்று பொருள். சாதாரணமாக நாம் பயணிக்கும் தூரங்களோடு ஒப்பிடுகையில் இது அதிக தூரம் என்றாலும் வானியல் தூரங்களோடு ஒப்பிடுகையில் இது சிறிய தூரம்தான். இவ்வளவு அருகிலா என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பூமியைப் போல உள்ள மற்ற கிரகங்கள் இருப்பது மிகமிகத் தொலைவில் என்பதாலேயே இந்த மகிழ்ச்சி.
சூரியனை ஒத்த நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வெளிகிரகங்களில் மட்டுமே உயிரினத்தைத் தேடுவதற்குப் பதிலாக  மிகவும் குளிர்ச்சியான சிவப்பு நிற குள்ள நட்சத்திரங்களைச் சுற்றிவரும் வெளிகிரகங்களிலும் அந்தத் தேடலை மேற்கொள்ளலாம் என்ற கருத்தை லீஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் குழுத் தலைவர் மைக்கேல் கிலான் முன்மொழிந்தார். இந்தக் கிரகங்கள் எண்ணிக்கையில் அதிகம். பூமியைப் போன்ற கிரகங்கள் அவற்றைச் சுற்றிவருமானால் அவை ஒப்பீட்டு அளவில் நமக்கு அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அவற்றைப் பற்றி ஆய்வு மேற்கொள்வது எளிது. நம்மிடமிருந்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்திற்குள் இப்படி 500 சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் இருக்கின்றன! 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் டிரப்பிஸ்ட்-1 குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி ஏழு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது கிலானின் உள்ளுணர்வு சரியே என்பதை நிரூபித்துள்ளது.
விஞ்ஞானிகளின் தற்போதைய மகிழ்ச்சிக்குக் காரணம் உயிரினத்திற்கான வாய்ப்பு இருக்கக்கூடிய கிரகங்களைக் கண்டுபிடித்தது மட்டுமல்ல, பூமியைப் போன்ற கிரகங்களைக் கொண்ட நட்சத்திரங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை அறிந்துகொண்டதும்தான். சூரியனைப் போன்ற மஞ்சள் நட்சத்திரங்களைப் போல் மூன்று மடங்கு எண்ணிக்கையில் சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் இருக்கின்றன. டிரப்பிஸ்ட்-1 ஐச் சுற்றியுள்ள கிரகங்களை மேலும் நுண்ணிய தொலைநோக்கிகளைக் கொண்டு பார்க்கும்போது திரவ வடிவிலோ நீராவி வடிவத்திலோ தண்ணீரின் இருப்பை மட்டுமல்லாது, ஆக்சிஜன், மீத்தேன், ஓஸோன் போன்ற வாயுக்களின் இருப்பையும் கண்டுபிடிக்க முடியும். டிரப்பிஸ்ட்-1 சூரியனின் அளவில் 8 சதம் மட்டுமே. ஜுப்பிடர் கிரகத்தைவிட சற்று பெரியது. சூரியனோடு ஒப்பிடுகையில் அது வயதில் மிக இளையது. சூரியன் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என நமக்குத் தெரியும். டிரப்பிஸ்ட்-1 தோன்றி 500 மில்லியன் ஆண்டுகளே ஆகின்றன. அதாவது அதன் வயது சூரியனின் வயதில் ஒன்பதில் ஒரு மடங்குதான்.
டிரப்பிஸ்ட்-1 நட்சத்திரத்தை அடைய ஒளிக்கே 40 ஆண்டுகள் ஆகும் எனில், தற்போதுள்ள தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி நாம் அங்கு செல்ல வேண்டுமானால் அதற்கு 1,60,000 ஆண்டுகளிலிருந்து700,000 ஆண்டுகள் வரை ஆகும்!
(உதவிய கட்டுரை : பிப் 27-மார்ச் 05 பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பிரபிர் புர்காயஸ்தா எழுதியது)

News

Read Previous

குட்டி அணில்குட்டி!

Read Next

மதுரை கோரிப்பாளையம் தர்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *