புழுதி புயலை கிளப்பியவாறு வந்து நின்றது மஸ்தான் வீட்டு ஆடம்பரக்கார்!

Vinkmag ad
புழுதி புயலை கிளப்பியவாறு வந்து நின்றது மஸ்தான் வீட்டு ஆடம்பர கார்!
கூலான் தெருவை சேர்ந்த மஸ்தான் சாஹிபு தான் அந்த ஊரின் மிகப்பெரிய பணக்காரர்.வெளிநாட்டில் சொந்தமாக கம்பெனி வைத்துள்ளார்.
வருடத்திற்கு ஒரு முறை ரமலான் பிறை 24 க்கு சொந்த ஊருக்கு வரும் மஸ்தான் சாஹிபும் அவரது குடும்பமும் நோன்பு பெருநாள் முடிந்து மூன்றாவது நாள் மீண்டும் வெளிநாடு கிளம்பி விடுவர்.
இடையில் எப்போதாவது மஸ்தான் வீட்டு ரத்த உறவுகளின் திருமணம் அல்லது மஸ்தான் வீட்டு திருமணங்களின் போதும் வந்து செல்வார்கள்.
வழக்கம் போல் இவ்வருட ரமலான் பிறை 24 லிலும் மஸ்தான் குடும்பம் சொந்த ஊர் வந்து விட்டது.
கூலான் தெருவே விழாக்கோலம் பூண்டது போல் தெருவெங்கும் மக்கள் தலைகள்.அசலூர் மக்களை விட அயலூர் மக்களின் தலைகளே அதிகம்.
என்னவென்று பள்ளியின் மோதினார் ராவுத்தரிடம் கேட்டபோது? செல்வந்தர் மஸ்தான் சாகிபு வந்திருக்காக.வருஷம் வருஷம் ஏழைகளுக்கு ஃபித் ரா என்னும் தர்மம் செய்வார்.
தர்மம் வாங்குவதற்கான மனித கூட்டம் தான் இப்போ மஸ்தான் சாஹிபு வீட்டை சூழ்ந்துள்ளது என்ற தகவலை தந்தார்.
வருடத்திற்கு ஒரு முறை ஃபித் ரா மட்டும் தான் மஸ்தான் சாஹிபுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடமையா? ஜக்காத்,சதக்காவெல்லாம் கடமை இல்லையானு?அப்பாவியாக பள்ளி மோதினாரிடம் கேட்டோம்?
அதுவும் கடமை தானுங்க,அதையும் கொடுக்கத்தான் செய்வாங்கனு சற்று குரல் தாழ்த்தி பதில் கொடுத்தார் மோதினார்.
நமது கேள்வியின் உள்கருத்து மோதினாருக்கு புரிந்திருக்கும் போல,மற்றது எப்படியோ?தெரியாது ஆனால்…வருசம் வருசம் ஃபித் ரா மட்டும் கொடுத்துட்டு இருக்காரு என்பதற்கு அவரது வீட்டை சூழ்ந்துள்ள மக்கள் கூட்டமே சான்று என மோதினார் தன் கருத்தை என்னிடம் திணித்தார்.
ஒவ்வொரு வருடமும் முகம் தெரிந்த அல்லது தெரியாதவர்களுக்கு 100 அல்லது 200 என புத்தம் புது நோட்டுக்களை கொடுத்து பேரானந்தம் கொள்ளும் மஸ்தான் சாஹிபு குடும்பம் தனது வீட்டுக்கு அருகில் உள்ள குடிசை வீட்டை மட்டும் மாற்றாமல் வைத்திருப்பது தான் வேதனை.
அந்த குடிசை வீட்டில் தான் மஸ்தான் சாஹிபின் சிறிய தந்தையின் மகள் பேகமும் அவரது குடும்பமும் வாழ்கிறார்கள்.
மஸ்தான் சாஹிபின் ஒரு வருட ஜக்காத் பணத்தில் ஒரு பகுதி போதும் குடிசையை கட்டிடமாக்கிட.ஏன் மஸ்தான் சாஹிபு அதை கண்டு கொள்ளவில்லை என்பது தான் நமக்கான கேள்விக்குறி?
மஸ்தான் சாஹிபின் வீடு மாளிகை என்பதை அருகில் உள்ள பேகத்தின் குடிசை தான் அடையாளம் கொடுக்கிறது போலும்?
தனது செல்வத்தின் அடையாளத்தை தனது ஒன்னு விட்ட தங்கை பேகத்தின் குடிசை எதிரொலிப்பதை மஸ்தான் விரும்புகிறார் போலும்?
செல்வந்தர் மஸ்தான் கொடுப்பதோ 100 அல்லது 200 தான்.ஆனால் தர்மம் கேட்டு வந்த அம்மக்களுக்கு வெயிலில் இருந்து நிழல் தரும் சோலைவனமாக இருப்பது பேகத்தின் குடிசை.
ஆம் வெயிலின் கொடுமை தாங்காத அயலூர் மக்கள் பேகத்தின் குடிசைக்குள் தான் நிழலுக்காக ஒதுங்கி செல்வர்.
நாளைய மறுமையில் நிழல் கொடுத்த ஏழை சகோதரி பேகத்தின் நன்மை கூடுதலா?அல்லது தனது செல்வாக்கின் அடையாளமாய் ஃபித் ரா கொடுத்த மஸ்தான் சாஹிபின் நன்மை கூடுதலா?என்பதை வாய்ப்பு கிடைத்தால்?இன்ஷா அல்லாஹ்…நாமும் காண்போம்.
ஓ….என்னருமை செல்வந்தர்களே….உங்கள் வீட்டருகில் இருக்கும் உறவுகளின் ஏழ்மை போக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.அதற்கான வழி முறை தான் ஜக்காத் என்னும் ஏழை வரி.
குறிப்பு:இது ஒரு விழிப்புணர்வு கட்டுரை மட்டுமே.
சம்பவத்தில் வரும் பெயர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
-கீழை ஜஹாங்கீர் அருஸி.

News

Read Previous

செய்தியாளர்கள் தேவை

Read Next

தந்தையர் தின வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *