பிரிவினை செயலை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!(வெள்ளிச்சிந்தனை)

Vinkmag ad
பிரிவினை செயலை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!(வெள்ளிச்சிந்தனை)
இன்றைய காலத்தில் நமக்குள் நடந்து வரும் போட்டி பொறாமை என்னும் அதிகார போட்டி குறித்த இறைவனின் கூற்று!
குடும்ப ரீதியாகவும்,இயக்க ரீதியாகவும் ஒருங்கிணைந்து இஸ்லாம் சொல்லி தந்த சகோதரத்துவ நேர் கோட்டில் பயணிக்க வேண்டிய நம்மவர்கள் பல்வேறு குழப்பங்களுக்கும் பிரிவினைகளுக்கும் இடமளித்து வாழும் மனிதனை இறைவன் வெறுப்பதை பின் வரும் மறைக்கூற்று இயம்புகிறது.
“இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்”(அல் குர்ஆன் 2:84)
“(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒரு சாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள் மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை”(அல்குர்ஆன் 2:85)
நேற்று வரை ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் வாழ்ந்த நாம் இன்று பல்வேறு காரணத்தை சொல்லி நம்மோடு இருந்த பெற்றோர்களை நம் வீட்டை விட்டு வெளியேற்றும் கொடுமைகள் பெருகி விட்டன.
கூட்டு குடும்பம் என்னும் ஒற்றுமை சித்தாந்தம் இன்று கேலிக்குரியதாய் மாறிவிட்டது.
அதே போல் நேற்று வரை ஒரே இயக்கத்தில் பயணித்தவர்களில் சிலரின் மீது பல்வேறு போலியான அவதூறுகளை சுமத்தி தமது இயக்கத்தை விட்டு வெளியேற்றி வரும் கோர காட்சிகள் அன்றாட நிகழ்வாகி விட்டன.
இதுபோன்ற நிகழ்வுகளால் ஒருவர் மீது ஒருவர் பழிச்சொல் சுமத்துவதும் அதன் மூலம் சண்டையிட்டு கொள்வதும் ஒரு கட்டத்தில் இதுவே எல்லை மீறி ரத்தம் சிந்தும் அளவுக்கு பகை முற்றுவதெல்லாம் இறைவனின் கோபத்திற்குரியது என்பதை உள்வாங்கிய நாம் ஏன் அதை வழக்கமாக்கி வாழ்கிறோம்?
இறைக்கூற்றை உள்வாங்கி அதன் பொருள் அறிந்து வாழும் அறிஞர்கள் கூட இறைவனின் அருள்மறைக்கு மாற்றமாக செயல்பட முடிகிறதென்றால்…எல்லாம் இந்த பாழா போன பணமும் பதவியும் தானே?
இவ்வுலகம் ஒரு அற்பத்தனமானது.இதை மட்டும் நேசிப்போரின் நிலைப்பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்:-
“மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்”(அல்குர் ஆன் 2:86)
மேற்கண்ட பிரிவினை செயலை விட்டும் நம்மை பாதுகாத்து ஒற்றுமை நிலையோடும் நாளை மறுமையின் லாபத்தோடும் வாழும் வாழ்வியலை எனக்கும் உங்களுக்கும் நம்மை சார்ந்த அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி

News

Read Previous

உலக வனநாளில் ஒரு எச்சரிக்கைப்பதிவு!

Read Next

வா வந்து வானம் நனை மழையே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *