உலக வனநாளில் ஒரு எச்சரிக்கைப்பதிவு!

Vinkmag ad
உலக வனநாளில் ஒரு எச்சரிக்கைப்பதிவு!
உலகத்தின் தலைசிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி மாசானபு புகோகா சொன்னதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.
“காடு இல்லை என்றால் நாடு இல்லை. வனம் அழிந்தால் தனம் அழியும். அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை”.
உலக வனநாள் (மார்ச்.21) கொண்டாடப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகள் இந்த உலக வனநாளை எந்த கோணத்தில் அணுகிறது என்பதைப்பற்றியல்ல இந்த கட்டுரைப்பதிவு. நமது இந்திய தேசத்தில் எப்படிப்பட்ட வனப்பாதுகாப்பை மேற்கொள்கிறார்கள் என்பதையை சுட்டிக் காட்ட வேண்டிய தருணம் இது. வெறும் ஏட்டளவுக்கு உலக நாடுகள் சபை அறிவித்தது என்பதற்காக கொண்டாடப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் விழா நடத்தப்படுகிறது. அரிய பயனுள்ள சம்பவங்களாக சில நிகழ்வுகளில் மரங்களும் நடப்படுகின்றன. வரவேற்கத்தகுந்த விஷயம்தான்.
இருந்த போதிலும் வனம் என்ற அரிய பொக்கிஷத்தை நாடாளுபவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதே இன்றைய வாதம். காப்புக்காடுகள், புலிகள் சரணாலயம், மான்கள் சரணாலயம் என வரையறுத்து, வகை செய்து வனத்தைப்பற்றிய அறிதல் புரிதல் இருக்கிறதோ இல்லையோ கோடிக்கணக்கில் நிதிகளை ஒதுக்கி வனச்சாலை, அகழிகள் வெட்டுதல், வனத்திற்குள் விலங்குகளுக்காக தொட்டிகள் கட்டுதல் என வெற்று கண்துடைப்புக்காக பல நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன.
உண்மையை சொல்லப்போனால் இவர்கள் வனத்தை பாதுகாக்க தேவையில்லை. வனம் தன்னை பாதுகாத்துக் கொள்ளும். அதனை சீண்டாமல், அழிக்காமல் இருந்தால் போதுமானது. ஆழ்கடல் அற்புதம் போல ஒரு புதிரான விஷயம்தான் வனம் என்ற வரம். கோடையில் தேவையில்லாத மரம், செடி, கொடிகளை மாய்த்துக் கொள்ளும். தேவையானவற்றை மழை நேரங்களில் தேவையானவற்றை உயிர்ப்பித்துக் கொள்ளும். வனம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் பேராற்றல் கொண்டது. வனத்தை நம் வளத்திற்காக வதை செய்வதுதான் நாம் இயற்கைக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.
உதாரணத்திற்கு தென்மாவட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை எடுத்துக் கொள்வோம். களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதி இது. மத்திய அரசின் காப்புக்காடு பகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்தின் மாட்சியாக விளங்கும் இந்த அடர்வனத்தில் மனிதர்கள் நுழைய தடை உண்டு. அடிவாரங்களின் அடிவயிற்றில்தான் களக்காடு, மணிமுத்தாறு, பாபநாசம் காரையாறு, சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி என எத்தனை அணைக்கட்டுகள். மனிதனுக்கு  இயற்கை கொடுத்துள்ள வரப்பிரசாதங்கள்.
ஆனால் இவை எப்படி பராமரிக்கப்படுகின்றன? தடையற்ற மனிதப்பிரவேசம். தங்குதடையற்ற இட ஆக்கிரமிப்புகள், சமூக விரோத செயல்களுக்காக வனத்திற்கு தீ வைப்பது, வன விலங்குகளை வேட்டையாடுவது, இயற்கையை நிரந்தர ஊனமாக்கும் கல், மண் குவாரிகள், மரங்கள் அழிப்பு, மூலிகைகள் அழிப்பு, வன விலங்குகளை துன்புறுத்தும் வெடிச்சத்தம் உள்ளிட்ட இடையூறுகள், மதுபானப் பிரியர்கள் கண்ணாடிக்குப்பிகளை உடைத்து நொறுக்கி வனத்தை துவம்சம் செய்யும் அவலங்கள் என எதற்குமே நிரந்தர தீர்வு காணப்படாமல் உலக வனநாளை வெறும் கடமைக்காக வனத்துறை கொண்டாடி வருகிறது.
இந்த உலக வனநாள் விழாக்களை விருப்பப்பட்ட இடங்களில் நடத்த அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு, அதில் ஆட்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே பங்கீடு. மொத்தத்தில் வனம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து இவர்கள் வளம் பெற்றுக் கொள்கிறார்கள். வனத்தைப் பேணுவதில் கோட்டைவிட்டு விட்டு வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன, அதனை பொறி வைத்துப்பிடிக்க குழுக்கள் அமைக்கின்றோம், வேலி அமைக்கின்றோம், அகழி வெட்டுகின்றோம் என கோப்புகளில் செலவின கணக்குகள்தான் கருவூல முத்திரையோடு பதிவாகின்றன. ஏப்ப சத்தம் விலங்குகளின் வாயில் இருந்து வருவதில்லை என்பதுதான் உண்மை.
பல்லுயிர்ப்பெருக்கம் என்பதன் பொருள் தெரியாமலேயே உலக வனநாளை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. அடர்வனத்தில் வாழ நிர்பந்தம் உள்ள விலங்குகள் தரையிரங்குகின்றன என்றால் அந்த வனம் அதற்கு வாழத்தகுதியில்லாததாக மாறி வருகிறது என்பதின் எச்சரிக்கை சமிக்ஞையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக புலிகள், சிறுத்தைகள் ஊருக்குள் புகுகின்றன. காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இறங்குகின்றன. ராஜநாகங்கள் வீடுகளிலும் பிடிபடுகின்றன என்றால் காடுகள் ஏதோ எச்சரிக்கை மணியை மனித இனத்திற்கு ஒலிக்கத் தொடங்கி விட்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகாலையில் இரைதேட ஊருக்குள் செல்லும் பறவைகள் மாலையில் வனம்நோக்கி பறக்க வேண்டும். பகல் பொழுதில் வனம் தங்கும் வவ்வால் இனங்கள் இரவில் இரைதேட திரிந்து மீண்டும் வனம்புக வேண்டும். இவற்றின் எச்சங்களில் வீரியம் கொண்ட விதைகள் காடுகள் முழுக்க விதைக்கப்பட்டு வனம் எப்போதும் செழிப்பாக தன்னைத்தானே தக்க வைத்துக் கொண்டு மேகத்தை தன்பால் ஈர்த்து மாதம் மும்மாரியை தருவது உறுதி. அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டாம். உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதுமானது.
வனம் இல்லையேல் மழை இல்லை. மழை இல்லையேல் எந்த உயிர்களும் இல்லை. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண் என்றுதானே வள்ளுவர் உரைத்திட்டார். உலகப் பொதுமறையையும் தாண்டி யாரேனும் உரைத்திடலாகுமோ?  இதனை நாம் உணருங்கால் எப்போது?
பா.ஜான்பீட்டர்
எழுத்தாளர், சமூக ஆர்வலர்
With regards,

B.John Peter
9791544880

News

Read Previous

பிறழ்வு

Read Next

பிரிவினை செயலை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!(வெள்ளிச்சிந்தனை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *