பாவேந்தர் பாரதிதாசன்

Vinkmag ad

bharathidasan01

உலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தமிழ்நாட்டில்கூட  அவரின் தகைமை பெரும்பான்மையரால் அறியப்படவில்லை. பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அவரை அறிந்தவர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல், இசைத்தமிழ்,  இயற்கை போற்றல், சிறுவர் இலக்கியம்,  தொழிலாளர் நலம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை, மண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு , எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாரதிதாசன். இவரைப்பற்றித் தமிழ்ப்பாட நூல்களிலேயே போதிய கட்டுரைகள் இடம் பெறவில்லை. இவரைப்பற்றி  இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாடநூல்களிலும் படைப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும். பிற  மொழியினரும் இவரது பாடல்களை அறியச் செய்திருக்க வேண்டும்.அப்பொழுதுதான் இந்தியத்துணைக் கண்டத்தில் உள்ளவர்களாவது அவரது சிறப்பைப் புரிந்திருப்பார்கள். தமிழர் வாழும் நிலப்பகுதி எங்கும் பாவேந்தர் போற்றப்பட்டால், உலகப் படைப்பாளிகள் அவரைப்பற்றி அறிந்திருப்பர்.  பாரதிதாசன் பரம்பரை என நூற்றுக்கணக்கில் பாவலர் கூட்டம் பெருகியுள்ளமைபோல், உலகில் எந்தக் கவிஞனுக்கும் கவிதைப் பரம்பரை உருவாகவில்லை என்பதை உலகம் உணர்ந்திருக்கும்.

 

உலகக் கவிஞரான பாவநே்தர் பாரதிதாசன் புகழ் போற்றல் என்பது பரப்புப்பணி மட்டுமல்ல. அவரது பாடல்களைப்  படித்து நாம் அவ்வழியில் இயங்குவதுமாகும். தமிழ் மக்கள் தன்னுரிமை பெற்ற தன்மான மக்களாகச் சிறந்து விளங்க நாம் அவரது பாடல்கள்  வழி நிற்றல் வேண்டும். அங்கும் இங்குமாக அவரின் பாடல் வரிகளை எடுத்தாண்டு பேசுவதோ, பாடுவதோ மட்டும் போதாது.

 

எப்பக்கம் வந்து புகுந்துவிடும் — இந்தி

   எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?

அற்பமென்போம் அந்த இந்திதனை — அதன்

   ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்.”

 

என்றார்  பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், இன்றைக்கு மெல்ல மெல்ல இந்திமொழியானது தன்னுடைய அரக்கக் கைகளால் நம்மைக் கட்டிப்போட்டுக் கொண்டுதான் உள்ளது. முன்பை விட இந்திமொழியானது, திட்டங்களின் பெயர்கள், துறைகளின் முத்திரை முழக்கங்கள், விழா அழைப்பிதழ்கள், பதாகைகள், அரசு விளம்பரங்கள், தனியார் விளம்பரங்கள், பணித்தேர்வு, கல்வியக நுழைவுத்தேர்வு, பாட மொழி, ஊடகங்களில் இந்திச் சொற்களைத் திணிப்பது, பதவிப் பெயர்கள்,  செய்மதிகள், புயல்கள் முதலானவற்றின் பெயர் சூட்டல் முதலான முறைகளில் எல்லா மொழிகளையும் விட மிகவும் ஒதுக்கீடு பெற்று, நாட்டின் பிற மொழிகளை அழித்து வரும் வகைகளில், இன்னும் அடுக்கிக் கொண்டே போகும் வகைகளில் ஒவ்வொரு செயலிலும் இந்தி மேலோங்கி நிற்கும்  நிலைகளில் திணிப்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே

மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே

இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே

இனத்தைக் கொல்வ தெதற்கெனில்தமிழர்

நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை

உயர்த்தவடவரின் உள்ளம் இதுதான்

 

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தந்தை பெரியாரைப் பிற வகைகளில் எதிர்த்துக்கொண்டு அவர்வழியில் இயங்குவதாகக்  கூறியும்  சமயப் பரப்புரை என்ற போர்வையிலும்,   அறிவியலுக்கு ஏற்றது என்ற ஏமாற்று முக்காட்டை அணிந்துகொண்டும் வரி வடிவச் சிதைவுகள் மேற்கொள்ளப்பட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. உரோமன் எழுத்துகளைப் பயன்படுத்துவது, கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது,  புதிய  சிதைவு வடிவங்களைப்பயன்படுத்துவது என்று தனித்தனிக் கூட்டங்கள், தமிழ் வரிவடிவச் சிதைப்புகளில்  ஈடுபட்டு வருகின்றன. அரசு நிறுவனமான தமிழ்இணையக் கல்விக்கழக இணையத் தளத்திலேயே தமிழ்வரிவச் சிதைவு இடம் பெறும் அளவில் தமிழ்ப்பகைவர்கள் செல்வாக்காக உள்ளனர். நாம் கடுமையாக முயன்று நெடுங்கணக்குக் கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

 

செந்தமிழைச்செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க

நந்தமிழர் உள்ளத்தில்வையம் நடுநடுங்கும்

வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.

 

எனக் கனவு கண்டார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் உணர்வாளர்கள் உள்ளங்களில் வளரும் தணலை அழிப்பதே ஆட்சியாளர்களின்  பணியாக அமைந்து விடுகின்றது.

 

சிங்களவர்க்கு உள்ள இலங்கையின் உரிமை

செந் தமிழர்க்கும் உண்டுதிருமிகு

சட்ட மன்றிலும் பைந் தமிழர்க்கு

நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு நோக்கிப்

படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்

செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்

சிங்களவர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்

தமிழர் உரிமையைத் தலை கவிழ்க்க

எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்

எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்

மானங் காப்பதில் தமிழ் மக்கள்

சாதல் நேரினும் தாழக் கூடாது

இவைகள் இலங்கை தமிழர் கொள்கைகள்!

யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!

வெல்க இலங்கைத் தமிழர்!

வெல்க தமிழே! மேவுக புகழே!”

என்றார் 1959 இல்  பாரதிதாசன்.

இலங்கையில் தமிழர்கள் கொடுமைகளுக்கு ஆளாகி, சம உரிமை கிடைக்காமல் தனிஉரிமை பெற்றிட

ஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று (திருக்குறள் 967)

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாக்கினை உணர்ந்து தமிழ் ஈழம் அமைத்தனர்; தனி அரசு நடத்தினர். ஆனால், உலக நாடுகளும் இந்தியாவும் இணைந்து சிங்களத்திற்கு உதவியதால் அங்கே இனப்படுகொலை நடந்தது.

ஆழிநிகர் படைசேர்ப்பாய்!

என்ற பாவேந்தரின் கட்டளையை ஏற்று விடுதலைப்புலிகள் படைஅமைத்துத் தம் மக்களைக் காப்பாற்றி வந்ததற்கு முற்றுப்புள்ளி இடச் செய்து விட்டோம்!  இறையாண்மை மிக்கத் தமிழ் ஈழ அரசு சிதைக்கப்பட்டது.  இன்றைக்குத் தமிழ்நிலம் பறிபோய்க் கொண்டு உள்ளது. ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிக் கொண்டுள்ளனர். இருப்பினும் நாம், அமைதிகாத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றுக்குக் காரணமானவர்களுடன் கொஞ்சிக் குலவிக் கொண்டிருக்கின்றோம்!

நமக்கு ஏற்பட்டுள்ள இழிநிலைகளைப் போக்கிடப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்கு அளித்த கைவிளக்குதான்தமிழியக்கம் நூல். இதனையாவது நம் வழிகாட்டியாகக் கொண்டு நாம் செயல்படலாம் அல்லவா?

நம் பெயர்களும் வணிக நிறுவனங்களின் பெயர்களும்  தமிழில் அமைய,

தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழே திகழ

செத்த சமசுகிருதத்தின் ஆதிக்கத்தை விரட்ட,

தமிழாய்ந்த தமிழர்களே  ஆட்சித்துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்க,

வேற்றுவரின் ஆரியத்தைக் கோயிலிலே வேரறுக்க,

மணமக்கள் இல்லறத்தை மாத்தமிழால் தொடங்கிட,

தமிழ்பாடித் தன்மானம் காத்திட,

கல்விநிலையங்களில் தமிழ் வாழ்ந்திட

துறைதோறும் தமிழுக்குத் தொண்டு செய்து தமிழன்னையைக் காத்திட

நாம் கடமைஆற்றலாம் அல்லவா?

 

மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய்

முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு

 

என்பதை உணர்ந்து தமிழ்நாட்டைத் தமிழர் நாடாக்கி உலகெங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழப்  பணிஆற்றிடலாம் அல்லவா?

இனியேனும் நாம் தமிழ் காக்கும் தமிழராய் வாழ்வோம்!பாவேந்தர் பிறந்த நாளிலும் நினைவுநாளிலும் மட்டும் அவரை  நினைக்காமல்,  “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்னும் அவர் முழக்கத்தை உணர்ந்து எந்நாளும் தொண்டாற்றிடுவோம்!

 

“கொலைவாளினை எடடா! – மிகு

கொடியோர் செயல் அறவே”

என்னும் அவர் கட்டளையை ஏற்று உலகத் தமிழர்களைக் காத்திடுவோம்!

 

இறந்தொழிந்த பண்டை நலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நாம் படைப்போம்!

 

 தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந்

 தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே

 தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்

 தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்

 தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்

தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு

 தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல

 தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!  

(-பாவேந்தர் பாரதிதாசன்) 

 என்பதை உணர்ந்து நாளும் தமிழ்த் தொண்டாற்றிடுவோம்!

பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடி, பைந்தமிழ் காப்போம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

 

News

Read Previous

தமிழ் இணைய மாநாடு 2014

Read Next

ஆசிரியர் மன்சூர் அலி தகப்பனார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *