பாவேந்தர் பயணித்த பக்கிங்காம் கால்வாய்

Vinkmag ad

சென்னை-புதுவைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தவர்கள் பார்த்திருக்கலாம், ஒருபக்கம் நீலக்கடலும் இன்னொருப் பக்கம் நீளக் கால்வாயும் நம்முடன் சேர்ந்தே பயணிக்கும்!

இந்த பக்கிங்காம் கால்வாய் ஒரு காலத்தில் விறகுகளையும் உப்பு மூட்டைகளையும் காய்கறிகளையும் சுமந்துச் சென்றது பலருக்கும் நினைவிருக்கும்.

இதில் பாவேந்தர் பாரதிதாசன் தன் தோழர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவருக்குக் கவிதைப் பிறந்திருக்கிறது.

31.03.1934 மாலை 4மணி. சென்னையில் இருந்து அந்த ஓடம் தன்னுடைய பயணத்தைப் புதுவை நோக்கித் தொடங்குகிறது.

அதில் பாரதிதாசன், ஆய்வாளர் மயிலை சீனி.வேங்கடசாமி, பொதுவுடமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, மாயூரம் நடராசன், சாமி.சிதம்பரனார், நாரண துரைக்கண்ணன் ஆகியோர் பயணிக்கின்றனர்.

நிலவொளியில் இரவு முழுக்கப் படகுப் பயணம் தொடர்கிறது. காலை 9 மணிக்கு மாவலிபுரம் (மாமல்லபுரம்) போய்ச் சேருகின்றனர்.

இப்படகுப் பயணத்தில் தம்மைக் கவர்ந்தக் காட்சிகளைக் கவிதையாக்குகிறார் புரட்சிக் கவிஞர்.

மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பிலான அந்தக் கவிதையில் இருந்து சில வரிகள்:

 

சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்

சேரிவரை நீளும்

அன்னதில் தோணிகள் ஓடம்எழில்

அன்னம் மிதப்பது போல

என்னருந் தோழரும் நானும் ஒன்றில்

ஏறி யமர்ந்திட்ட பின்பு

சென்னையை விட்டது தோணிபின்பு

தீவிரப்பட்டது வேகம்.

 

தெற்குத் திசையினை நோக்கி-நாங்கள்

சென்றிடும் போது விசாலச்

சுற்றுப் புறத்தினில் எங்கும் –வெய்யில்

தூவிடும் பொன்னொளி கண்டோம்.

நெற்றி வளைத்து முகத்தை-நட்டு

நீரினை நோக்கியே நாங்கள்

அற்புதங் கண்டு மகிழ்ந்தோம்-புனல்

அத்தனையும் ஒளி வானம்.

 

சஞ்சீவி பர்வதச் சாரல்-என்று

சாற்றும் சுவடி திறந்து

சஞ்சார வானிலும் எங்கள் –செவி

தன்னிலும் நற்றமிழ் ஏற்றி

அஞ்சாறு பக்கம் முடித்தார்-மிக்க

ஆசையினால் ஒரு தோழர்.

செஞ்சுடர் அச்சம யத்தில்-எம்மைச்

செய்தது தான்மிக்க மோகம்.

 

மிக்க முரண்கொண்ட மாடு-தன்

மூக்குக் கயிற்றையும் மீறிப்

பக்க மிருந்திடும் சேற்றில்-ஓடிப்

பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்

சக்கரம் போலிருள் வானில்-முற்றும்

சாய்ந்தது சூரிய வட்டம்

புக்க பெருவெளி யெல்லாம்-இருள்

போர்த்தது போனது தோணி.

 

வெட்ட வெளியினில் நாங்கள்-எதிர்

வேறொரு காட்சியும் கண்டோம்.

குட்டைப் பனைமரம் ஒன்றும்-எழில்

கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்

மட்டைக் கரங்கள் பிணைத்தே –இன்ப

வார்த்தைகள் பேசிடும் போது

கட்டுக்கடங்கா நகைப்பைப் – பனை

கலகல வென்று கொட் டிற்றே.

 

எட்டிய மட்டும் கிழக்குத் – திசை

ஏற்றிய எங்கள் விழிக்குப்

பட்டது கொஞ்சம் வெளிச்சம்-அன்று

பௌர்ணமி என்பதும் கண்டோம்.

வட்டக் குளிர்மதி எங்கே – என்று

வரவு நோக்கி யிருந்தோம்.

ஒட்டக மேல்அர சன்போல் – மதி

ஓர்மரத் தண்டையில் தோன்றும்.

-இப்படியாகத் தொடர்கிறது பாவேந்தரின் இந்த மாவலிபுரச் செலவு எனும் அந்த நீண்ட கவிதை.

 

நன்றி:

கூவம் அடையாறு பக்கிங்காம்

சென்னையின் நீர்வழித்தடங்கள்

வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்.  DSC01119

News

Read Previous

துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழா

Read Next

கணக்கர் இ.பிச்சைக்கனி இல்ல மண விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *