பார்வை

Vinkmag ad

Dr.Fajila Azad

(International Life Coach – Mentor – Facilitator)

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

 

  1. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

 

 

பார்வை

கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது என்று முன்னோர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். சிலர் அதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கினாலும், பெரும்பாலோனோர், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்தினால்  மற்றவர்களுடைய கண் பட்டு விடுமோ என்ற அச்சத்தினாலேயே சிடுசிடு என்ற ஒரு குணத்தை தங்களுக்கு ஒரு கவசமாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், காலப்போக்கில் அந்த சிடுசிடுப்பே அவர்களுக்குள் ஒரு நிம்மதி இல்லாத மகிழ்ச்சியற்ற மன நிலையை விதைத்து விடுகிறது.

ஒரு சம்பவத்தை பாருங்கள். பல நேரங்களில் சிலர், தங்கள் நிலையில் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட, உறவினர்கள், தெரிந்தவர்கள் யாராவது சந்திக்க வந்து விட்டால் அவர்கள் பார்வைக்கு ஆட்பட்டு விடக் கூடாது என்பதற்காக தங்கள் சிறு சிறு குறைகளையும் பெரிது படுத்தி வந்தவர்களிடம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்படிச் சொல்லும் போது, அவர்கள் சொல்வதை அவர்கள் ஆழ்மனது உண்மையிலேயே ஒரு பெரும் பிரச்னையாகத் தனக்குள் உருவகப் படுத்த ஆரம்பித்து விடும். வந்தவர் சென்ற பின்பு, அதுவரை ஒரு பெரிய விசயமாகத் தெரியாமல் இருந்த அந்த சிறு குறையே இப்போது, ஒரு தீர்க்க முடியாத விசயமாக அவர்கள் கண் முன் தோன்றத் தொடங்கி விடும். அதனால் ஏற்படும் பயமே மனதிற்குள் ஒரு உளைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைத் தொலைத்து விடும். உடனே, வந்தவர்களால்தான் தங்கள் மகிழ்ச்சியின்மீது கண் பட்டு விட்டது என்று மற்றவர்கள் மீது இனம் புரியாத எரிச்சல் ஏற்பட தன் மீது, தான் இன்னும் கொஞ்சம் கவனமாக மகிழ்ச்சியற்ற தோற்றத்தில் இருந்திருக்க வேண்டுமோ என வலிந்து கவலை கொள்ளத் தொடங்கி விடும் மனம்.

இரண்டாவது ஒரு சம்பவத்தைப் பாருங்கள். சில நேரங்களில் நீங்கள் செய்த ஏதேனும் ஒரு செயல் நல்லபடி நடந்து பலராலும் பாராட்டப் பட்டிருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாக அந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் உங்களைப் பாராட்டுபவர்களில் ஒருவர், நல்ல விசயங்களைச் சொல்லி விட்டு இறுதியாக ஏதேனும் ஒரு குறையைச் சொல்லி முடிப்பார்கள். அதுவரை மகிழ்ச்சியில் இறகுபோல் மிதந்த மனது சட்டெனக் கருகி உதிர்ந்து விடும். அத்தனை பாராட்டுக்களும் மறந்துபோக அந்த ஒற்றைக் குறை வார்த்தை எண்ணம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்ளும்.

இந்த இரு சம்பவங்களிலும் பொதுவானது என்ன என்று யோசித்துப் பாருங்கள். முதல் சம்பவத்தில் திருஷ்டி பட்டு விடுமோ என பயந்து தாங்களே நெகடிவ் எண்ணங்களை தங்கள் ஆழ்மனதிற்குள் தங்களையும் அறியாமல் செலுத்துகிறார்கள். இரண்டாவது சம்பவத்தில் உங்களை பாராட்டுவதுபோல வந்து ஒருவர் எதிர்மறை எண்ணங்களை உங்கள் ஆழ் மனதிற்குள் செலுத்த அனுமதிக்கிறீர்கள்.

இதில் எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாதிக்க விடுவது வந்தவர்கள் கையில் இல்லை, உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்பது தான் நீங்கள் கவனிக்க வேண்டியது.

அதேபோல், புகழ்வதுபோல் ஆரம்பித்து குறை கூறி முடிப்பவர்கள் புறந்தள்ள வேண்டியவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தாழ்வு மனப் பான்மையே அவர்களை அவ்வாறு பேசச் செய்கிறது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் எந்த ஒரு விசயத்தைப் பற்றிப் பேசும்போதும், பாராட்டுக்களை முன்வைத்து பின் அதே தொனியில் ‘அதோடு’ என்று தொடர் வைத்து திருத்தங்களை சொல்வார்கள். பாராட்டு போல் ஆரம்பித்து ‘ஆனால்’ என்று வால்போல் நீட்டி குறைகளை சுட்டிக் காட்ட மாட்டார்கள்.

சில நேரம் பார்த்திருப்பீர்கள் ஒரு பாத்திரத்தில் சில பொருட்களை போட்டவுடன் அது நிறைந்தாற்போல் இருக்கும் உடன் அந்த பாத்திரத்தை கொஞ்சம் குலுக்கியவுடன் அந்த பொருட்கள் அடியில் நகர அதன் மேல்பகுதி வெற்றிடமாகி விடும். அது போல் சிலர் ஏதாவது பாராட்டி விட்டு, அதனால் பாராட்டப் பட்டவர்கள் ரொம்ப மகிழ்ந்து விடுவார்களோ, தன்னைப் பற்றி கர்வமாக நினைத்து அவர்களுக்கு தலைக் கணம் வந்து விடுமோ என ஒரு தாழ்வு மனப்பான்மை மனதில் ஓட உடனே ஏதாவது தலையை தட்டி விடுவது போல் நெகடிவாக அவர்களைப் பற்றி சொல்வார்கள். அப்போது தான் அவர்கள் பாஸிடிவாக சில வார்த்தைகள் பேசி கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் வைத்திருப்பதால் இந்த நெகடிவான வார்த்தைகள் அதிகம் அவர்கள் மனதை பாதிக்கும்.

அதனால் ஒருவர் பாராட்டியவுடன் அதை மனதின் ஆழத்தில் உடனே எடுக்காமல் அந்த சம்பாஷனை முடியும் வரை ஒரு temporary folder or draft இல் போட்டு வைப்பது போல் மனதின் surface level இல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின் அமைதியாக அதில் ஆக்க பூர்வமான வகையில் எதை எடுக்க வேண்டும் எதை விட வேண்டும் என உணர்ச்சி வசப்படாமல் லாஜிக்கலாக யோசித்து அதை ஆழ்மனதில் எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக, நம்முடைய மகிழ்ச்சியும் வருத்தமும் பிறரையே சார்ந்திருக்கிறது என்றே நம்புகிறோம் அல்லது அது போல் ஒரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறோம். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்தினாலும் அது எல்லாமே உங்களை விட்டும் வெளியே நடக்கக் கூடிய ஒன்று. அதே நேரம் உங்களை உண்மையில் பாதிக்க கூடியது உங்கள் உள்ளுக்குள் நிகழும் மாற்றமே. உங்கள் எண்ணங்கள் உங்கள் சிந்தனைகள் நீங்கள் அதை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதே.

கதவு இடித்து விட்டது, அவன் என்னை அவமானப் படுத்தி விட்டான், கோபம் எனக்கு வருகிறது என்று அஃறினையாகிய கதவாகட்டும், உணர்வு பூர்வமான கோபம் ஆகட்டும், சக மனிதராகட்டும், அவர்கள் அல்லது அது உங்களுக்கு தீங்கு இழைத்து விட்டதாகச் சொல்லவே உங்கள் மனதைப் பழக்கி இருக்கிறீர்கள். அதனாலேயே பிரச்னைகளைத் தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு தேவையான முயற்சி செய்யாமலும் அதிலிருந்து வெளிவர முடியாமலும் திணறிப் போய் விடுகிறீர்கள்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். சூழல் எந்த மாதிரி சுழன்றாலும் சரி! நான் என் கால்களை திடமாக ஊன்றிக் கொள்கிறேன்’ என சூழல் எப்படி இருந்தாலும், அது போகிற போக்கில் தன்னை தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும், என்று எண்ணக் கூடியவர்களால்தான் எந்தப் பிரச்னையிலிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். அதுபோல் நீங்கள் உணரத் தொடங்கும் போது பிறருடைய செயல்கள் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

மனப் பயிற்சி :-

ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் யார் எப்படி இருந்தாலும் இன்று எப்படி உணரப் போகிறேன், இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். அடிக்கிற காற்றில் இலக்கு இல்லாமல் பறக்கும் சிறு இறகாக பிறருடைய செய்கைகளுக்கேற்ப சுழன்று இயலாமையில் தவிக்கப் போகிறீர்களா? அல்லது திடமாக இருந்து மகிழ்வாக உங்கள் தினத்தைக் கொண்டு செலுத்தப் போகிறீர்களா?

உங்களுடைய செய்கைகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அதை எந்த மாதிரி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் உங்கள் செய்கைகளைப் பற்றி, உங்களுக்குள் வரும் சிந்தனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீகள்… உங்களுக்கு அது திருப்தியாக இருக்கிறதா, உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறதா, என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராத எந்த செயலும், சிந்தனையும் உங்களுக்கானது அல்ல. உங்களுடன் இயைந்து போகாதவற்றை உங்களை விட்டும் விலக்கி விடுங்கள், மனதில் அமைதி நிரம்பும்.

News

Read Previous

நகைச்சுவை நடிகர் விவேக்

Read Next

தமிழ்த் தாயின் அரிய மைந்த!

Leave a Reply

Your email address will not be published.