பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி

Vinkmag ad

 11-12-14  பாட்டு ஒரு புலவன் பாரதியாரின் பிறந்த நாள். தமிழுக்காக முரசு கொட்டினான் . தன்னை ஈந்த தமிழ் புலவன். அதனை நினைவுக் கூறும் வகையில் சில நினைவலைகள்


பாரதி தொகுப்பு

மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர். அடிமை இருளை அகற்றத் தோன்றிய ‘இளம் ஞாயிறு’ ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய‘  இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட,அறியாமை இருள் நீங்கிட,சமுதாயம் சீர்பெற்றிட,வறுமையை வெளியேற்ற ‘எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர் நிறை’ ஆகவேண்டும் என்று கனவு கண்டவர்.

எட்டையபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாளில் தோன்றிய பாரதியார், ஏழாம் அகவையிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். படிபடிப்படியாகப் பாட்டெழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். தம் 11-ஆம் அகவையில் எட்டைபுரத்துச் சிற்றரசைச் சேர்ந்த புலவர்களால் ”பாரதி” என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பெற்றார்.அன்று முதல் பாரதி கவிதை எழுவதை தொழிலாகக் கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் பெயரால் ”ஷெல்லி மன்றம்” அமைத்தார்.ஷெக்ஸ்பியர், ஷெல்லி, பைரன், விக்டர் யூகோ முதலிய உலகப் கவிஞர்களின் கவிதைகளைச் சுவைத்து, பாரதியார் தம் கவிதை ஆற்றலை மேலும் வளர்த்துக் கொண்டு தலைசிறந்த படைப்புக்களையும் உருவாக்கத் தொடங்கினார்.
”திறமை கொண்ட, தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்,
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே”   என்று முழக்கமிட்டவர்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், கவிதை மறுமலர்ச்சிக்கும் தடையாக இருந்தவற்றை எல்லாம் தகர்த்திடும் வகையில் எழுச்சி கவிதைகள் புனைந்து,இலக்கியத் தொண்டாற்றி தமிழுக்கு புது நெறி காட்டிய பெரும் புலவர்.’கன்னனொடு கொடை போயிற்று – உயர் கம்ப நாடனுடன் கவிதை போயிற்று’ என்று இருந்த காலத்தில், ‘ஓராயிர வருடம் ஓய்ந்து வாராது வந்து சிறப்பாக தமிழுக்கும் தமிழ்மக்கட்கும் பாரதியார் ஆற்றிய பணி அளப்பரியது. ஒவ்வொரு துறையிலும் அவர் முன்னோடியாகவும்,முன் மாதிரியாகவும் திகழ்ந்தார். அவர் ஒரு மகாகவி, தீவிர தேசபக்தர், அரசியல்வாதி, சீரிய சிந்தைனையாளர், தத்துவஞானி தீர்க்கதரிசி, பத்திரிகையாசியர், புரட்சியாளர், இலக்கியப் படைப்புகளைப் படித்து அவற்றின் நயங்களை அனுபவித்து,

ஆன்ற கவிஞர் அனைவோர்க்கும் முன் முதலாய்
தோன்றும் கவிதைச் சுடரொளியே நீ வாழ்க!
பேசுந் தமிழில் பெரும் பொருளைக் கூறிவிட்ட
வாசத் தமிழ் மலரே வாரிதியே, நீ வாழ்க!
தொட்ட தெல்லாம் பொன்னாகத் துலங்கும் கவிக்கடலே
பட்ட மரம் தழைக்கப் பாட்டெடுத்தோய், நீ வாழ்க !
எங்கே தமிழென்று என் தமிழர் தேடுகையில்
இங்கே தமிழென்று எடுத்து வந்தோய் நீ வாழ்க!
                   — என்று கவிஞர் கண்ணதாசன் வாழ்த்தியதில் வியப்பொன்றுமில்லை.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். மரபு வழி வந்தவர் என்றாலும் அவர் மரபைக் கண்மூடிப் போற்றவில்லை. பாமர மக்கள் அணுகும் வண்ணம் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு ஆகியவற்றைக் கொண்டு இலக்கியம் படைத்தார்.அது உலக இலக்கியமாக  திகழ்கிறது.பாரதியாரே தம்முடைய கவிதைகளில் பாங்கை உணர்த்த முற்படும்போது,

”சுவை புதிது; பொருள்புதிது; வளம்புதிது;
சொற்புதிது;சோதி மிக்க நவகவிதை;
எந்நாளும் அழியாத மாக்கவிதை.
என்று பூரிப்போடும் பெருமித்ததோடும் கூறியுள்ளார்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் பின்பற்றிய நாயகன் நாயகி தத்துவத்தையும் உணர்வையும் பாரதி பின்பற்றினார். அதில் அவர் தம்முடைய தனித்தன்மையை வெளிப்படுத்தியுள்ள திறம் வியக்கதற்குரியது. பாரதி முன்பு இருந்த பாவாணர்கள் தம்மைக் காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் கற்பனை  செய்து பக்தி இலக்கியத்தைப் படைத்தனர்.பாரதி தம்மைக் காதலனாகவும் இறைவனைக் காதலியாகவும் மாற்றிப் பாடினார்.  அது மட்டுல்லாமல்  இறைவனை தோழனாகவும், தாயாகவும்,தந்தையாகவும்,  சேவனாகவும், விளையாட்டு பிள்ளையாகவும்,
ஆண்டானாகவும்,குலதெய்வமாகவும் பாடினார். இறைக் கோட்பாட்டில் பாரதி பின்பற்றிய முறை,புரட்சி நிரம்பியதாகும்.பக்தி இலக்கியத்தில் பாரதி செய்த புரட்சியின் விளைவாகப் பிறந்ததே கண்ணன் பாட்டு என்னும் கவிதைத் தொகுதியாகும்.மக்கள் உணர்வுகளையே கவிதையாகப்
பாரதி படைத்தார்;மக்கள் மொழியிலேயே கவிதைகளை உருவாக்கினார்.பாரதியின் கவிதைகள் நிலைபேறு பெற்றவை. நிலவுலகம் முழுவதையும் நல்வழியில் செலுத்துபவை.காரணம் சொல் புதிதாகவும் பொருள் புதிதாகவும் கொண்டு பாடி, ஒப்பில்லாத ஓர் சமுதாயத்தை அமைக்க முயன்றிட்டார்.

அவர் தமிழ் உணர்வும், தேசிய உணர்வும் இரண்டறக் கலக்க, புதியதோர் உலகு செய்ய அவர் நம்மை அழைத்தார். அவர் கண்ட புதிய உலகத்தில் சாதிகள் இல்லை. அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை என்ற உணர்வோடு வாழ்கின்றனர். .. பூனை கதை ஒன்றை முரசு பாட்டிலே மிக அழகாக கூறுகின்றார். பெரியவர்களுக்கு மட்டும் பாரதியார் அறிவுரை சொல்லவில்லை.சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட பாப்பா  பாட்டிலே அவர் கூறுகிறார். “சீறுவோர் சீறு”, “பகைவனுக்கருள்வாய்” என்று ஒரு இடத்தில் கூறுகிறார். “நையப்புடை” “போர்த் தொழில் பழகு” என்றும் பாப்பா பாட்டிலே கூறுகிறார். சமுதாய மூடப்பழக்க வழக்கத்தில்,முதல் முட்டுக்கட்டையாகப் பாரதிக்குப்பட்டது, சமயத்துறை.சமயத்துறை ஒரு சங்கட துறையாக பாரதிக்கு பட்டது.சமயத்தின் வேராக விளங்கும் அடிப்படையையே ஆட்டிவிடவேண்டும் என்று முரசு கொட்டினான்.கையால்தான், சாதிகளில்லையிடி பாப்பா- குலம் தாழ்ச்சி உயர்ச்சி  சொல்லல் பாவம்”.என்றான். பாரதி நாட்டு விடுதலைக்காகவும்,மொழி வளர்ச்சிக்காவும் மட்டுமின்றிச் சமுதாய
விடுதலைக்காவும் பாடுபட்ட தமிழ் மறவர். அவரது பாடல்களில் காணப்படும் பொதுவுடைமைக் கருத்துக்களின் எதிரொலியாகப் புதிய  ஆத்திசூடி எழுத முற்பட்டான்.சமுதாய மூடப்பழக்க வழக்கத்தில்,முதல் முட்டுக் கட்டையாகப் பாரதிக்குப் பட்டது.சமயத்துறைதான். சமயத்துறை ஒரு சங்கடத் துறையாகக் கவிஞனுக்குப்பட்டது. சமயத்தின் வேராக விளங்கும் அடிப்படையையே ஆட்டிவிட வேண்டும் என்று முரசு கொட்டினான் பாரதி. 

பாரதி பயணத்தின்……ஒரு சிறு குறிப்பு.

எட்டயபுரத்து  கவிதைக்கரசன் பாரதி நடத்தி முடித்த பயணத்தின்……. ஒரு சிறு குறிப்பு.

 

1882 : டிசம்பர் 11, கார்த்திகை 27 ம் தேதி பாரதி பிறந்தார். எட்டயபுரத்தில் தந்தை சின்னச்சாமி அய்யருக்கும் தாய் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர் சுப்பையா.

 

1887 : பாரதியாரின் தாய் லட்சுமி அம்மாளுக்கு மரணம் சம்பவித்தபோது, அவருக்கு வயது 5.

 

1889 : தந்தை மறுமணம். சுப்பையாவுக்கு பூணூல் போடும் சடங்கு; கவி இயற்றும் ஆற்றல் வெளிப்படுகிறது.

 

1893 :11 வயதான சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் சோதித்து, கவித் திறனை வியந்து கலைமகள் சுப்பையாவின் நாவில் குடி கொண்டிருக்கிறாள் என்று சொல்லி ” பாரதி ” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கின்றனர்.

 

1894 – 1897 : திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் ஐந்தாம் படிவம் வரை பயிலுதல்; தமிழ் பண்டிதர்களுடன் விவாதங்களில் கலந்து வெற்றி கொள்ளுதல்.

 

1897 : ஜூன் மாதம் 15ம் தேதி பதினான்கரை வயது பாரதிக்கும் ஏழு வயதுச் செல்லம்மாளுக்கும்    திருமணம் நடந்தேறுகிறது.

 

1898 : ஜூன் மாதம் தந்தை திடீர் என மாரடைப்பால் மரணம். மிகுந்த துயரடைகிறார் பாரதி.

 

1898 :மறு மாதமே, பாரதியின் அத்தை ருக்மணி அம்மாள் என்ற குப்பம்மாள் பாரதியை காசிக்கு அழைத்துச் செல்லுகிறார்.

 

1898 – 1901 : அலகாபாத்தில், எட்டாவது வகுப்பில செயநாராயண் உயர்நிலைப் பள்ளியில் சேந்தார். இரண்டு வருடத்தில் பத்தாவது முடித்து அலகாபாத் யூனிவர்சிட்டி மேற்பார்வையில நடந்த தேர்வில் முதல் வகுப்பில் பாஸ் செய்கிறார். இந்து சர்வகலா சாலையில் சமச்கிருதம், இந்தி பயின்றார். அப்போதுதான் கச்சம், வால்விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம் எல்லாம் பாரதியின் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டது.

 

1902 – 1904 : எட்டயபுரம் வருகை. விருப்பமில்லா வேலையான மன்னருக்குத் தோழர் வேலை. மதுரை விவேக பாநுவில் ” தனிமை இரக்கம் ” என்ற முதல் பாடல் அச்சேறுகிறது. மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் 1904ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை தமிழ் ஆசிரியர் பணி. பின்னர் சென்னை வந்து சுதேச மித்திரனில் உதவி ஆசிரியர் பொறுப்பேற்பு. சக்கரவர்த்தினி மாதப் பத்திரிக்கையில் ஆசிரியராகவும் ஆகிறார்.

 

1905 – 1906 : பாரதி அரசியலில் தீவிரமாகிறார். காசி காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று விவேகானந்தரின் சிசியை நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரை ஞான குருவாக ஏற்றல். 1906 ஏப்ரலில் “இந்தியா ” வாரப் பத்திரிக்கை உதயம். பாரதி பொறுப்பாசிரியராகிறார். மண்டபம் ந. திருமலாச்சாரி,எஸ்.சிறீ.நிவாஸாச்சாரியார், சா.துரைசாமி அய்யர், வி.சக்கரைச் செட்டி, வ.உ.சி. ஆகியோருடன் நட்பு ஏற்படுதல். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிக்கை ஆரம்பம்.

 

1907 :டிசம்பர் மாதம் சென்னையில் இளைஞர் படையைத் திரட்டி சூரத் அழைத்துச் செல்கிறார். காங்கிரசில் பிளவு ஏற்பட திலகர், அரவிந்தர், லாலாலஜபதி ராய் ஆகியோருடன் பாரதி சந்திப்பு நிகழுகிறது. வி.கிருஷ்ண சாமி அய்யர் பாரதியின் சுதேச கீதங்கள் பாடல் தொகுப்பை அச்சிட்டு லவசமாக விநியோகிக்கிறார்.

 

1908 : சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி. யாலும் மற்றும் சுப்பிரமணிய சிவா,சுதேசி பத்மநாப அய்யங்கார் முதலியோரால் கொண்டாடப்படுகிறது. சிறைத் தண்டனை. வழக்கில் பாரதி சாட்சியமளிக்கிறார். புதுவைக்குப் புறப்பட்டுப் போகிறார்.

 

1908 – 1910 : சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதியை பாரதி முதல் நூலாக வெளியிடுகிறார். இந்தியா பத்திரிக்கை ஆசிரியர் கைது. பாரதிக்கு கைது வாரண்ட். பாரதி தப்பிப் போய் புதுவையில் இந்தியாவை வெளியிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். குவளைக் கண்ணன் சந்திப்பு. புதுவையிலிருந்து இந்தியா அச்சிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்ய இந்தியா பத்திரிக்கை நின்று போகிறது.

 

பாரதி ஏற்பாட்டின் பேரில் அரவிந்தர் புதுவை வந்து சேருகிறார். பாரதியின் ” சன்ம பூமி ” வெளியீடு. நவம்பரில் கனவு வெளியீடு. வ.வே.சு. அய்யர் வருகை.

1911 : மணியாச்சியில் கலெக்டர் ஆசு துரை கொலை. புதுவை தேச பக்தர்கள் மீது சந்தேகம். போலீஸ் கெடுபிடிகள் அதிகரிப்பு. பாரதியின் சிஷ்யகோடிகள் பெருகுகின்றனர்.

1912: உழைப்பு மிக்க வருடம். கீதையை மொழி பெயர்க்கிறார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல் பாகம் பிரசுரமாகிறது.

1913 – 1914 சுப்பிரமணிய சிவாவின் ஞானபாநு பத்திரிக்கைக்கு எழுதுகிறார். முதல் உலகப் போர் துவக்கம். தென் ஆப்பிரிக்காவில் மாதா மணி வாசகம் நூல் பிரசுரம். சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி நின்று போதல். ( இந்த ஆவணமெல்லாம் திரட்ட முடிந்தால் எப்படி இருக்கும்?)

1915 : பாப்பாப் பாட்டு உதயம்.

1917 :கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.

1918 : புதுவை வாசம் சலித்துப் போய் சென்னை வரும் பாரதியை கடலூர் அருகே நவம்பர் 20ம் தேதி கைதுசெய்து 34 நாட்கள் சிறை வாசம். வழக்கில் பாரதி விடுதலையாகிட நேரே மனைவி செல்லம்மாளைத் தேடி கடயம் வருகிறார். திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக் கவிகள் பயனில்லை என்ற முடிவு. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட விருப்பம். ஆனால் ஆசை நிறைவேறவில்லை.

1919 :மார்ச் மாதம் சென்னைக்கு விஜயம் செய்கிறார். ராஜாஜி வீட்டில் காந்திஜியைச் சந்திக்கிறார்.

1920 :டிசம்பர் மாதம் மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக வேலை. பாரதி நிறைய கட்டுரைகள்எழுதுகிறார்.

1921 : ஜூலை – ஆகஸ்ட் திருவல்லிக்கேணி கோயில் யானை தும்பிக்கையால் தள்ளிவிட குவளை கண்ணன் காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார். பின்னர் குணமாகி அலுவலகமும் செல்கிறார். ஆனால் செப்டம்பர் மாதம் வயிற்றுக் கடுப்பு கண்டு படுத்த படுக்கையாகிவிடுகிறார். செப்டம்பர் 11ம் தேதி நோய் கடுமையாகி விட,பாரதி மருந்துண்ண மறுக்கிறார். செப்டம்பர் 12ம் தேதி இரவு அவர் எழுதி அவரால் மிக விரும்பப் பட்ட “நல்லதோர் வீணை செய்து

பாட்டை பாடச் சொல்லி கேட்டிருக்கார். அங்கிருந்த பாரதி தம்பி விசுவநாதன் பாடியிருக்கார்.கடைசியாக அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே

தன் உயிரை விட்டிருக்கார். அப்போது நள்ளிரவு தாண்டி மணி 1.30. 39 வயது நிரம்பாத நிலையில் தன் நிறைவேறாத பாரத தேச விடுதலைக் கனவுகளுடன் இந்த மண்ணுலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று விண்ணுலகம் ஏகினார்.

நன்றி, வணக்கம்

அன்பொடு

கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

………………..
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

News

Read Previous

பாடி மகிழ்வோம் பைந்தமிழில்

Read Next

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *