பசுமைத் தங்கம் மூங்கில்

Vinkmag ad
508-bamboo-plantsஅறிவியல் கதிர்

பசுமைத் தங்கம் மூங்கில்
பேராசிரியர் கே. ராஜு

இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கங்கள், உத்தர்காண்டில் கேதார்நாத் பேரிடர், ஆறுகளில் அவ்வப்போது வெள்ளம் பெருக்கெடுத்து விளைவிக்கும் சேதாரங்கள் போன்ற இயற்கையின் தாக்குதல்கள் எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டே இருக்கின்றன. நாம்தான் அவ்வளவு எளிதில் விழித்துக் கொள்வதாக இல்லை.
அண்மைக்காலப் பேரிடர்கள் காரணமாக 5 லட்சம் வீடுகளுக்கு மேல் முழுவதுமாக இடிந்து விழுந்துவிட்டன. 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் பகுதி சேதாரம் அடைந்துள்ளன. நஷ்டம் எனக் கணக்கிட்டால் அது பல பில்லியன் டாலர்களில் இருக்கும். இயற்கைப் பேரிடர்களைத் தவிர்ப்பது சாத்தியமல்ல. ஆனால் கட்டடங்கள் கட்டுவதில் சுற்றுச்சூழலுக்கு இசைவான நடைமுறைகளைக் கடைப்பிடித்தால் சேதாரங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
குறைந்த ஆற்றலே தேவைப்படும் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கியைந்த முறையில் கட்டடங்கள் எழுப்பப்பட வேண்டும் என்ற நெருக்கடியில் அத்தொழில் இன்று இருக்கிறது. இந்திய பசுமை வீடுகளுக்கான கவுன்சில் கட்டடக் கலையில் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது. அந்த நோக்கில் பார்க்கும்போது சிமெண்ட், எஃகு ஆகியவற்றுக்கு  மாற்றாக மூங்கில் பயன்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எளிதில் நட்டு அறுவடை செய்ய முடியும் என்பதால் இந்தியா போன்ற வெப்பப் பிரதேசத்தில் ஆதிகாலத்திலேயே கட்டடங்கள் கட்டுவதற்கு மூங்கிலைப் பயன்படுத்தும் வழக்கம் தோன்றிவிட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மூங்கிலை வைத்துக் கட்டப்பட்ட ஆதிகாலத்துக் கட்டடங்கள் இன்னமும் இருக்கின்றன. மூங்கில் விளைச்சலில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. அது மட்டுமல்ல, ஏறத்தாழ 130 வகையான மூங்கில்கள் இந்தியக் காடுகளில் காணக் கிடைக்கின்றன. நீண்ட காலம் வாழக்கூடிய பசுமையான மூங்கில் பசுமைத் தங்கம் என அழைக்கப்படுகிறது.
உலகிலேயே வேகமாக வளரக்கூடிய தாவரவகை மூங்கில்தான். சில வகை மூங்கில்கள் 24 மணி நேரத்தில் மூன்று அடி வரை கூட வளர்ந்துவிடும். சில மூங்கில் மரங்கள் 30 மீட்டர் உயரமும் 35 சென்டிமீட்டர் விட்டமும் கொண்டவை.
பெரும்பாலும் மூங்கிலை சாரம் கட்டுவதற்கே கொத்தனார்கள் பயன்படுத்தி வருகின்றனர். பண்டைக்கால இந்தியா, சீனா, இந்தியக் கடற்கரையை ஒட்டிய பல தீவுகள் ஆகியவற்றில் வேலி, நீரூற்றுகள், கம்பங்கள், வாயில்கள் போன்ற இடங்களை அழகுபடுத்த மூங்கிலைப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்திருக்கிறது. குடிசைகளிலும் சிறு வீடுகளிலும்  தூண்கள், அடித்தளம், தரை, உட்கூரை ஆகிய இடங்களில் பதிக்க மூங்கில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  எளிதில் தாராளமாகக் கிடைக்கும் பொருள் என்பதாலும் அதிக செலவின்றி உபயோகப்படுத்த முடியும் என்பதாலுமே மூங்கிலுக்கு இந்த அந்தஸ்து கிடைத்து வருகிறது.
கார்பனைப் பிடித்து வைத்துக் கொள்ளும் திறன் அதிகம் உள்ளதன் காரணமாக மரவகைகளில் அதிகப் பயன்பாட்டிற்கு வந்துகொண்டிருப்பது மூங்கில்தான். பூமி சூடேறுவதால் ஏற்படும் தீய விளைவுகளைக் குறைப்பதற்கு மூங்கில் கட்டடங்கள் நிச்சயம் பயன்படும். அதிக அளவில் மூங்கில் பயிரிட வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை. அதற்கு வேதியியல் உரங்கள் அதிகமாகத் தேவைப்படுவதில்லை. மூங்கிலின் வேர்ப்பகுதி நன்கு பரந்து விரிந்து அருகமைப் பகுதிகளில் நீரைப் பிடித்து வைத்துக் கொள்ளும் என்பதால் சுற்றுப்புறத்தில் நீர்சேமிப்பு இயல்பாகவே நடந்துவிடும்.
மூங்கிலின் உயர்இழுவிசைத்திறன், எடை குறைவாக இருப்பது, அதே சமயம் உறுதியாக இருப்பது போன்ற தன்மைகளின் காரணமாக கட்டடங்கள் கட்ட மிகச் சிறந்த பொருளாக மூங்கில் தற்போது பார்க்கப்படுகிறது. இயந்திரங்கள், கருவிகள் அதில் எளிதாகச் செயல்பட முடியும். வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வீடுகள், குடிசைகளுக்கு அடித்தளம் அமைக்க மூங்கிலைப் போன்ற சிறந்த பொருள் வேறு கிடையாது. அதிக வேகத்துடன் வீசும் காற்று, நிலநடுக்கங்கள் ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் சக்தி மூங்கில் கட்டடங்களுக்கு உண்டு. எடை குறைவாக இருப்பதால் நில அதிர்ச்சிகளை அவற்றால் தாங்கிக் கொள்ள முடியும். வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை மூங்கில் எளிதில் கடத்தாத பொருள் என்பதால் பேரிடர் காலங்களில் ஏற்படும் சேதாரம் குறைவாகவே இருக்கும்.
எனவே, வருங்காலத்தில் கட்டடம் கட்டும் தொழிலில் மூங்கிலின் பயன்பாடு அதிகரிப்பது நம்மையும் பூமியையும் பாதுகாத்துக் கொள்வதற்குத் துணை நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
(நன்றி : 2016 அக்டோபர் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் அமித் மோசா, மோனிகா கவுல் எழுதியுள்ள கட்டுரை

News

Read Previous

கவிதை

Read Next

மியான்மர் (பர்மா) முஸ்லிம்கள் இனப்படுகொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *