நேரம் தவறாமை

Vinkmag ad
by Ashraf

நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு. “அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும். நேர தவறுதல் ஏன் ஏற்படுகிறது? அக்கறையின்மையால். எதன் மீது? எந்தக் காரியத்திற்காகப் போகிறோமோ அதன் மீது நமக்கு முழு ஈடுபாடு இல்லை. எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழே முக்காலுக்கு நுழைபவர்தான் சரியான மனிதர்.

ஸ்கூட்டரை அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு  காலை வணக்கம் சொல்லி,  இன்றைய பொழுது இந்த அலுவலகத்தில் நல்லபடி நகர வேண்டுமே என்ற அக்கறையோடு சில விநாடிகள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருப்பின், நிச்சயம் அந்த நாள் பலம் பொருந்தியதாக இருக்கும். இந்த ஐந்து நிமிட நேரத்தில் மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியாகி விடும்.  மாறாக, எட்டு பதினேழுக்கு அரக்கப் பறக்க நுழைந்து,   கையெழுத்துப் போட்டு விட்டு வியர்த்து வழிய, நெஞ்சு படபடக்க சுற்றியிருப்பவர்களுக்கு முகமன் சொல்ல மறந்து போய், மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கும் போது, நீங்கள் கேலிப் பொருளாக மாறி விடுவீர்கள். சீக்கிரம் வந்தவர்கள் உங்களை அதிசயமான பிராணியாகத்தான் பார்ப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழிக்கின்ற அலுவலகத்தில் நீங்கள் எந்த மரியாதையும் இல்லாமல் தாமதமாக வருவது, உங்கள் வேலை மீது உங்களுக்கு மதிப்பும் மரியாதையும்  இல்லை என்பதை நிச்சயமாக்குகிறது. உங்கள் வேலையை நீங்கள் நேசிக்கவில்லை என்பதும் உண்மை. ஆறு மணிக்குத் திறக்க வேண்டிய மளிகைக் கடையை ஏழு மணிக்குத் திறந்தால், இடையே உள்ள ஒரு மணி நேரத்தில் இருபது வாடிக்கையாளர்கள் வந்து போயிருப்பார்கள். ஒரு நாள் தாமதித்து, மறு நாள் நீங்கள் ஆறு மணிக்குத் திறந்தாலும், “அட… அவன் எங்க கடையைத் திறந்திருக்கப் போறான்; ஆடி அசைஞ்சு எட்டு மணிக்குத்தான் கடையையே திறக்கறான்” என்று உங்கள் கடையைப் பற்றி, உங்களைப் பற்றி ஒரு தவறான செய்தி பரவும். இதை விட வியாபரத்திற்கு இடைஞ்சலான விஷயம் எதுவுமில்லை.

குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்குப் போக முயாதபடி இடைஞ்சலாக இருப்பது எது என்று யோசித்துப் பார்த்தால், உடனடியாக எல்லோராலும் சொல்லப் படும் விஷயம் டிராபிக்ஜெம். அந்தக் காரணம் எல்லோராலும் நிஜமாகவோ, பொய்யாகவோ சொல்லப்படுகிறது. சில சமயம் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மையாயினும் தினந்தோறும் அப்படித்தான் என்று சொல்வதற்கில்லை. இப்படி தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் இருக்குமானால், அந்த நெரிசல் நேரத்தையும் கணக்கிட்டு, முன்கூட்டியே கிளம்பலாமே!

நேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை? நம்முடைய மன்னிக்கின்ற குணம்தான் காரணம் என்று தோன்றுகிறது. வெகு எளிதில் நாம் தவறுகளை மன்னித்து விடுகிறோம். “பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சுன்னா தலையா போயிடும்?” என்று பேசுகின்றோம். பெரிய பாவமில்லை என்று எண்ணுகின்றோம்.

தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சந்திப்பிற்கு ஒருவர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாலும் அவரை புறக்கணிக்க வேண்டும். அம்மாதிரி  உறுதியோடு நீங்கள் இருப்பின், நீங்கள் தாமதமாக எந்தச் செயலையும் செய்ய மாட்டீர்கள். நேரம் தவறாமையில் அக்கறை கொள்வீர்கள். இது இரட்டை லாபம். மற்றவர் தாமதத்தை நேர் செய்வது; உங்களையும் நேரம் தவறாமையில் பழக்கிக் கொள்கிறீர்கள்.

தாமதம் தவிர்த்தல் ஒரு தவம். மிக நல்ல பழக்கம். இது உங்களுக்குள் படிந்து வந்து விட்டதென்றால் திட்டமிடல் என்ற விஷயம் உங்களுக்குள் மிக வேகமாக நுழைந்து விடும். திட்டமிடுவதற்குண்டான தெளிவும் மனதிற்குள் படிந்து விடும். நேரம் தவறியதற்கு, மற்றவர்களுடைய நேரம் தவறிய செயல்களும் ஒரு காரணம் என்று அடிக்கடி சொல்லப்படும். “நான் கரெக்ட்டா பத்து மணிக்குப் போய் நின்னேன் ஸார். அந்தாள் பதிணொன்ரை மணிக்கு வரான். வந்துட்டு பேப்பர் படிக்கிறான். பேப்பர் படிச்சிட்டு டீ குடிக்கப் போயிடறான். பன்னிரெண்டேமுகாலுக்குத்தான் ஸார், வாங்க உட்காருங்கன்னு சொன்னான். ரெண்டு தடவை வேணும்னே பண்ணிரண்டு மணிக்குப் போனேன். இப்போதும் அதே மாதிரிதான் சாப்பிட்டு அப்புறம் தான் ஸார் கூப்பிடறான்.’

அவருடைய நேர தவறிய புத்தி இவருக்கும் ஒட்டிக் கொள்கிறது. “என்னங்க பண்றது. இப்படியே பழகிட்டோம். பத்து மணிக்கு வாங்க அப்படின்னாலே, புத்தி பதினோரு மணிக்குன்னு கணக்கு போட்டுக்குது’ என்று உளறுபவர்கள் உண்டு. இதற்கு செவி சாய்த்து விடக் கூடாது.

நீ திருடினால் நான் திருட வேண்டுமா? நீ லஞ்சம் வாங்கினால் நான் லஞ்சம் வாங்க வேண்டுமா? நீ பொய் சொன்னால் நான் பொய் சொல்ல வேண்டுமா? என்பது போல அவர் தாமதம் உங்களைத் தொற்றிக்கொள்ளக் கூடாது. நீங்கள் அதை மறுத்து, முன்னிலும் உறுதியாக நேர தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். காலத்தின் மதிப்பு தெரிந்தால் நேர தவறாமை குணமும் தானாக வந்து விடும்.

நேர தவறாமை என்பது உங்களை நீங்களே மதிக்கும் சுயமரியாதை. உங்களை எப்பொழுதும் உற்சாகமாகவும் தொடர்ந்து வேலை செய்பவராகவும் வைக்கும். உங்களைச் சோம்பலிலிருந்து அப்புறப்படுத்தி சுறுசுறுப்பானவராக வைக்கும். அந்தச் சுறு சுறுப்புதான் கம்பீரம். அந்தக் கம்பீரம் தனிக் கவர்ச்சி. கவர்ச்சிதான் உங்களைப் பெரிய மனிதராக, முக்கிய மனிதராகக் காட்டும். நேரம் தவறுதலை இயல்பாகக் கொண்டவர்களின் முத்தில் எப்போதும் தூக்கம் இருக்கும். எதையும் ஊன்றிப் பார்க்காத குழப்பம் இருக்கும். அவருக்குப் புகழ் பற்றியோ, பணம் பற்றியோ எந்த வேட்கையும் இருக்காது.

“தோன்றின் புகழொடு தோன்றுக” என்பதற்குப் பக்கத்தில் நேரம் தவறாமை நிச்சயம் இருக்கிறது. நேரம் தவறாமையை நிச்சயம் கடைப்பிடிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

News

Read Previous

கட்டுரைப் போட்டி

Read Next

RGO, GMT, UT, UTC என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *