நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்!

Vinkmag ad
591B-Water crisisநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! 
பேராசிரியர் கே. ராஜு
மழைப் பொழிவு போதாமை, மக்கள் தொகை அதிகரித்து வருவதால் தண்ணீர் தேவைக்கும் கிடைக்கும் நீருக்கும் அதிகரித்து வரும் இடைவெளி, நகரமயமாதல், தொழில்கள் வளர்ச்சி போன்ற காரணங்களால் 2007-க்கும் 2017-க்கும் இடையில் நிலத்தடி நீர் 61 சதம் குறைந்திருக்கிறது என்ற செய்தி அபாயச் சங்கை ஊதி நம்மை உறக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பிவிடும் எச்சரிக்கை. இது வழக்கமாக நாம் கடந்து செல்லும் ஒரு சாதாரண புள்ளிவிவரம் அல்ல. நம்மை மிரட்டும் தகவல். மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியம் (சிஜிடபிள்யுபி)  இந்தியாவின் நகரப்பகுதிகள், குறிப்பாக சண்டிகர், புதுச்சேரி, மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய நகரங்கள், மிகக் கடுமையான நீர்ப்பற்றாக்குறையைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்தியா தன் வரலாற்றிலேயே சந்தித்திராத மிக மோசமானதொரு நீர் நெருக்கடியை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிறது நிதி ஆயோக். நெருக்கடியை சமாளிக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிடில், 2030-ம் ஆண்டில் கிடைக்கும் குடிநீரின் அளவைவிட தேவை மிக அதிகமாகிவிடும் என நிதி ஆயோகின் ஆய்வு தெரிவிக்கிறது. தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களின் நிலத்தடி நீர் 2020-ம் ஆண்டில் மிகவும் குறைந்து சுமார் 10 கோடி மக்களைப் பாதிக்க இருக்கிறது என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது. நிலைமை இப்படியே நீடிக்குமானால், 2050-ம் ஆண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதம் இழப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கிறது அந்த ஆய்வு.
மத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் உள்ள மாநிலங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்கிறது  சிஜிடபிள்யுபி அறிக்கை. கடினப்பாறை நிலப்பரப்பின் காரணமாக இந்த மாநிலங்களில் நீரைச் சேமிக்கும் வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன. போதாக்குறைக்கு இம்மாநிலங்களில் மழைப் பொழிவும் குறையும்போது நிலைமை படு மோசமாகி விடுகிறது. விவசாயத்திற்கு, குறிப்பாக நெல் சாகுபடிக்கு, நீர்த்தேவை அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. விளைவாக, நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்து அபாய கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படி நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்துவருவது மக்கள் தொகை அதிகரித்துவரும் அடுத்த தலைமுறைக்கு குடிநீர் கிடைப்பதில் மிகக் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
கிடைக்கும் நிலத்தடி நீராவது சுத்தமாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்தியாவின் 16 மாநிலங்களில் நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைக்கும் நீரில் யுரேனியம் கலந்திருக்கிறது எனத் தங்களது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஒரு லிட்டர் நீருக்கு அதிகபட்சம் 30 மைக்ரோகிராம் யுரேனியம் வரைதான் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள யுரேனியக் கலப்படம் இதைவிட மிக அதிகமாகவே உள்ளது. இந்தக் கலப்படத்திற்கும் மிக மோசமான சிறுநீரக பாதிப்புக்கும் உள்ள தொடர்பினை பல ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பதற்குக் காரணம் என்ன? இமாலய மலையிலிருந்து வரும் ஆற்று நீரிலிருந்தும் யுரேனியம் அடங்கிய கிரானைட் பாறைகளிலிருந்தும் களிமண், வண்டல், சரளைக்கல் ஆகியவை உருவாகின்றன. இவற்றை இந்தியாவின் பெரும்பாலான நீர்த்தேக்கங்களிலிருந்து பிரிக்க முடியாது. நீர்த்தேக்கங்களிலிருந்து மிக அதிகமான நீரை உறிஞ்சி எடுப்பதால் நீர்மட்டம் குறைகிறது. இதைத் தொடர்ந்து ஏற்படும் ஆக்சிஜன்மயமாதல் நிலைமைகளின் காரணமாக, மிச்சமிருக்கும் ஆழம் குறைந்த நீரில் யுரேனியம் கரைவது அதிகரித்து அதன் அளவும் அதிகரிக்கிறது. நைட்ரேட் மாசுபடுதல் யுரேனியத்திரட்டலை மேலும் அதிகரிக்கிறது.
ஆக, இந்தியாவின் பல மாநிலங்களில் நிலத்தடி நீர் குறைவது குடிநீர் பிரச்சனையை தீவிரமாக்கும் நிலைமையில் நிலத்தடி நீரில் யுரேனியம் அதிகரிப்பது மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பல உடல்நல சீர்கேடுகளையும் கொணர்வது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதில் முரண் என்னவெனில், மனிதர்களுடைய நடவடிக்கைகள் நிலைமையை சீர்படுத்துவதற்கு மாறாக மேலும் மோசமாக்கவே செய்வதுதான். எனவே, நிலத்தடி நீர் அளவுகளை கண்காணித்து, கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டிய உடனடித் தேவை எழுந்திருக்கிறது. அதே சமயம், யுரேனியக் கலப்பின் காரணமாக மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலப் பாதிப்புகளைப் பற்றி முழுமையான ஆய்வுகள் நடத்தி நிவாரண நடவடிக்கைகளில் இறங்குவதும் உடனடித் தேவையே.
                                    (உதவிய கட்டுரை ; 2018 ஜூலை சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் ஹசன் ஜவைத் கான் எழுதியுள்ள தலையங்கம்.)

News

Read Previous

நிலவு தெரியும் கடல்..

Read Next

தமிழை இரவலாக தந்திடு தமிழே….

Leave a Reply

Your email address will not be published.