நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

Vinkmag ad

அறிவியல் கதிர்


நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க
மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

பேராசிரியர் கே. ராஜு
நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற 200 அடி வரையும் அதற்குக் கீழேயும் ஆழத்தில் குழாய்க் கிணறுகள் (bore wells) தோண்டப்படுகின்றன. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிக்காமல் இந்த குழாய்க் கிணறுகளிலிருந்து எத்தனை நாட்களுக்குத் தண்ணீரைப் பெற முடியும்? மழைநீரைச் சேகரிக்கவில்லையெனில் அது சாக்கடை நீருடன் கலந்து நகரை மேலும் மாசுபடுத்தும் வேலையையே செய்யும். தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

 

மழைநீரை வீணாக்காது அதன் ஒவ்வொரு துளியையும் சேமித்துப் பயன்படுத்திட மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்கி நிலத்தடி நீரை வலுப்படுத்துவது  ஒன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும். சென்னை போன்ற மாநகரங்களில் பெருவாரியான மக்களிடையே இது குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை.  நிபுணர்களிடமிருந்து இது பற்றித் தெரிந்துகொள்ள உதவும் அறிவியல் சுற்றுச்சூழல் மையங்களை (Centre of Science and Environment – CSE)  நாடு முழுதும் உருவாக்க அவற்றின் நிறுவன இயக்குநர் அனில் அகர்வால் திட்டமிட்டார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மழைநீர் மையம் (Rain Centre Chennai). ஆகாஷ் கங்கா என்ற அமைப்பு இந்த மையத்தை நிறுவி பராமரித்து வருகிறது. பொதுமக்கள் இந்த மையத்தை அணுகி தங்கள் வீடுகளுக்கேற்ற மழைநீர் சேகரிப்பு மாடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தக்க ஆலோசனைகளைப் பெற முடியும்.   மொட்டை மாடியில்  விழும் மொத்த மழைநீரும் சென்று அடையும் வகையில் சேகரிப்பு மையத்தை உருவாக்க வேண்டும். இதைத் திறம்படச் செய்தால் கிணறுகளிலும் குழாய்க் கிணறுகளிலும் உள்ள நீரின் தரமும் அளவும் மேம்படும்.

கைபேசிகளை அவ்வப்போது ரீசார்ஜ் செய்துகொள்வதுபோல், நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இதற்கு 4லிருந்து 8 மீட்டர் ஆழம் உள்ள குழியை பொருத்தமான விட்டத்தில் தோண்டி அதில் பிவிசி குழாயை முழு ஆழத்திற்கும் வருமாறு பதிக்க வேண்டும்.  ஜல்லிகள், கூழாங்கற்களை இட்டு நிரப்பி அவற்றின் வழியே மழைநீர்  சென்று குழியின் அடிப்பாகத்தை அடையுமாறு செய்ய வேண்டும். இது ஒரு சேகரிப்பு மாடல். வீட்டின் அளவைப் பொறுத்து மாடலின் தன்மையும் மாறும். முன்பு சென்னையைச் சுற்றி 3000 ஏரிகள் இருந்திருக்கின்றன. இன்று ஏரிகள் எல்லாம் கட்டடங்களாக மாறி எஞ்சியிருப்பவை மூன்றில் ஒரு பகுதி ஏரிகளே. இவற்றைப் பாதுகாப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, மழைநீரைச் சேகரிப்பது போன்ற பன்முக நடவடிக்கைகளின் மூலமே எதிர்காலத்திற்கான தேவைகளைச் சமாளிக்க முடியும்.

மேற்கொண்டு தகவல் வேண்டுவோர் சென்னை மழைநீர் மையத்தின்  இயக்குநர் திரு. சேகர் ராகவனை 96770 43869 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News

Read Previous

தாய்மை

Read Next

என்னதான் செய்தது இந்திய அறிவியல்…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *