நான் எப்படி வாசிக்கிறேன்?

Vinkmag ad

நான் எப்படி வாசிக்கிறேன்?

– ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர்

ச.சீ.இராஜகோபாலன்

ச.சீ.இராஜகோபாலன்

ப்போது 86 வயதாகிறது. இந்த வயதில் வாசிப்புதான் உயிர்மூச்சாக இருக்கிறது. முதுமையில் மறதி பெரிய நோய். அதற்குப் பலியாகாமல் இருக்க வாசிப்பை ஒரு ஆயுதமாகவே கையாள்கிறேன் என்று சொல்லலாம்.

காலையில் 4.30 மணிக்கு எழுந்தவுடன் கணினியில் தமிழ், ஆங்கிலச் செய்தித்தாள் களை வாசிப்பேன். கவனம் ஈர்க்கும் விஷயங்களில் எனது கருத்துகளையும் பதிவிடுவேன். வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் வருகின்றன. இவற்றில் கல்வி, அறிவியல் சார்ந்த இதழ்கள், எனக்கு மிக விருப்பமானவை. வாசிப்பைப் பொறுத்த அளவில், ‘கண்டதும் கற்கும் பண்டிதன்’ நான். அதனால், எந்தத் துறை நூல் கிடைத்தாலும் சரி, படிப்பேன். பயணங்கள் படிக்க நிறைய நேரம் தரும். அதனால், பயண மூட்டையில் கட்டாயம் புத்தகங்கள் இருக்கும்.

என்னளவில் வாசிப்பில்லா நாள் வீண் நாள். சின்ன வயது தொடங்கி அப்படித்தான். எங்கள் வீட்டில் பெரிய நூலகம் இருந்தது. இராமாயணமும் இருக்கும்; இங்கர்சாலும் இருக்கும். வாழ்க்கை வரலாறு நூல்கள் நிறையவே இருக்கும். வீட்டில் பிள்ளைகள் படிக்கிறார்களோ, இல்லையோ நூலகம் ஒன்று இருக்க வேண்டும்; பத்திரிகைகள் வர வேண்டும். நிச்சயம் அவை ஒரு நாள் அவர்களை உள்வாங்கிக்கொள்ளும். என்னை வாசிப்பை நோக்கி இழுத்தது அதுதான். வீட்டில் ‘தினமணி’, ‘சுதேசமித் திரன்’, ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’ ஆகியவை இருக்கும். அந்த நாட்களில் நீண்ட தொடர்கள் என்னைக் கவர்ந்ததில்லை. ‘துப்பறியும் சாம்பு’, ‘நாடோடி’ இப்படியான கதைகளைத் தான் வாசித்தேன். சின்ன பிள்ளைதானே! அப்புறம், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படித்தேன். கூடிய சீக்கிரம் பாரதி பாடல்களை வீராவேசத்துடன் உரக்கப் படிப்பது ஒரு பொழுதுபோக்கானது. கொஞ்சம் வளர்ந்த பின் தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.

திரு.வி.க.வின் தமிழ்நடை ரொம்பவும் வசீகரித்தது. நானும்கூட அவரைப் போலவே எழுத முயன்றேன். மு.வ. எழுத்துகள் பிரபலமானபோது அவரது நாவல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஆசிரியரானதும் வாசிப்பு மேலும் அதிகரித்தது. பல்கலைக்கழக முதுகலை வகுப்புகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தத்துவம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த நூல்களை வரவழைத்துப் படிக்க ஆரம்பித்தேன். புரிந்தாலும் புரியாவிட்டாலும் படிப்பதை வழக்கமாகக் கொண்டேன்.

பணியில் இருக்கும்போது நான் ஒரு நூலைப் படித்தவுடன் சக ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் நண்பர்களுக்கு நூலை அறிமுகப்படுத்துவேன். ஆசிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். தலைமை ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், ஆசிரியர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்திட மாதக் கூட்டங்களில் அவர்கள் வாசித்த நூல் பற்றிய விமர்சனத்தைக் கூற வேண்டும் என்று ஒரு நியதியைகூடச் சில காலம் நடைமுறைப்படுத்தியது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு புத்தகத்தைப் பல முறை படிப்பேன் என்றாலும், படித்த சுவடே தெரியாத வண்ணம் புத்தகங்களைப் பேணுவது என் இயல்பு. இன்று வாங்கியவைபோல் வைத்திருப்பேன்.

News

Read Previous

ஈமானில் ஒளிரும் மகிமை

Read Next

மனதில் நின்ற மாமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *