நம்பிக்கை நடை போடட்டும் தமிழகம் !

Vinkmag ad
நம்பிக்கை நடை போடட்டும் தமிழகம் !
எஸ் வி வேணுகோபாலன் 
 
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் (1968) நகைச்சுவை படத்தில் முக்கியமான காட்சி ஒன்று வரும். ஒரு பெரிய ஒண்டுக் குடித்தன வீட்டில் கூலி இல்லாத வேலைக்காரனாக ஏவி விடும் வேலைகளையெல்லாம் தலைமேல் போட்டு ஓடோடி செய்துகொண்டிருக்கும் மாது (நாகேஷ்) பாத்திரம் தான் கதாநாயகன். ஒருவரும் மதிக்க மாட்டார்கள், வேலை மட்டும் செமத்தியாக வாங்கிக் கொள்வார்கள். திடீர் என்று ஒரு நாள் அவரைத் தேடி வரும் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர், தமது மகன் தான் அந்த மாது என்று அவர் இல்லாத போது தேடிப் பார்த்துவிட்டுப் போவார். அவ்வளவு தான், மாது வந்ததும், குடித்தனக்காரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு காஃபி என்ன, ஹார்லிக்ஸ் என்ன, படுத்துக் கொள்ள மெத்தை விரிப்பென்ன, டேபிள் ஃபேன் என்ன, கடிகாரம் என்ன, இனிப்பென்ன….கொடுத்துக் கொண்டே இருந்து திணறடிப்பார்கள். இந்தக் கோமாளித்தனங்கள் எல்லாம் உச்சத்திற்குப் போகும்போது, நாயர் (முத்துராமன்) சிரித்துக் கொண்டே  உண்மையைப் போட்டு உடைப்பார். வந்தவர் பணக்காரரும் அல்ல, உன் அப்பாவும் அல்ல, அவர் ‘எண்ட ஓட்டல் சரக்கு மாஸ்டர்’ என்று பாடியதும், மாதுவுக்கு அவரவர் கொண்டு வந்து கொடுத்தது மட்டுமல்ல, அவனது பொருள்களையும் சேர்த்துப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.
தமிழக வாக்காளரை, ஏப்ரல் 6 அன்றைக்கு மட்டும் பணக்கார வீட்டு வாரிசாக நினைத்துக் கொள்ளவும், வாக்குப் பதிவு முடிந்த மறுநிமிடமே, அவர்களது உடமையையும் சேர்த்துப் பறித்துக் கொண்டு போகவுமே துடிக்கும் தன்மைதான் பளிச்சிடுகிறது இந்தத் தேர்தல் காட்சிகளில்!
வெற்றி நடையா, வெட்கக் கேடா ?
 ‘வெற்றி நடை போடும் தமிழகமே’ என்று காது வலிக்கக் கூப்பாடு போடுகிறது ஆளும் கட்சியான அஇஅதிமுக.  தாங்கள், மத்தியில் மிக மோசமான ஆட்சி நடத்தும் பாஜகவின் தொண்டர் அடிப்பொடியாக, எதிர்த்துக் குரல் கொடுக்கும் திராணியற்றவர்களாக, ‘உங்கள் சொல் எனக்கு உத்தரவு’ என்று தாள் பணிந்து நடந்து கொள்ளும் அடிமைகளாகத் தங்களை நடத்திக் கொண்டிருக்கையில், ‘வெட்கித் தலை குனிந்திருக்கும் தமிழகமே’ என்று தான் இவர்கள் பாடல் எழுதி இருக்க வேண்டும்.
இவர்கள் ஆட்சியில் யாரெல்லாம் வெற்றி நடை போட்டனர் எனில், மணல் கொள்ளை செய்தவர்கள், அத்தியாவசிய பொருள்களைக் கள்ளத்தனமாகப் பதுக்கி வைத்தவர்கள், ஊழல் பெருச்சாளிகள், சாதீய ஆணவக் குற்றங்கள் இழைத்தவர்கள், பாலியல் வன்கொடுமை புரிந்தவர்கள், அதிகார அத்து மீறல்கள் செய்துவருவோர்… என்ற பெரும் அராஜக பட்டியல் ஒன்று உண்டு.  தங்களையே தமிழகமாக நினைத்துக் கொள்கிறவர்கள், தாங்கள் போடும் கொக்கரிப்பு நடையை வெற்றி நடை போடும் தமிழகமே என்று பாடிக்கொள்கிறார்கள் போலும்….
தன்னையே தேசமாக நினைத்துக் கொள்ளும் மாண்புமிகு பிரதமர் மோடி – அதைவிட  மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவர்களோடு கூட்டு சேர்ந்து நிற்பவர்களுக்கு, தாங்களே தமிழகம் என்று நினைப்பு வருவதில் வியப்பு இல்லை.
ஆனால், திடீர் என்று மக்கள் நலன் என்று தமிழக ஆட்சியாளர்கள் பேசுவதும், வாக்குறுதிகள் அள்ளியள்ளி வீசுவதும் எத்தனை பசப்பு மிக்க மொழி என்பதை, மிக எளிய மக்களே பளிச்சென்று புரிந்து வைத்திருப்பதை சாலையில் எதிர்ப்படுவோரிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிகிறது. வாழ்க்கையில் அனுபவங்களே  மிகப் பெரிய ஆசான் என்று சொல்வார்கள் அல்லவா, ஒன்றா இரண்டா, பத்தாண்டு ஆட்சியில் மக்கள் பட்டதெல்லாம் மறந்தா போவார்கள்?
 
காவலுக்கே காவல் இல்லை 
பெண் உயர் காவல் அதிகாரியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஒரு டி எஸ் பி மீது நடவடிக்கை எடுக்கக் கூட, உயர் நீதி மன்றத்தின் கடிந்துரை தேவைப்படுகிற ஆட்சியில், சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்ன என்பதை பொள்ளாச்சி கொடூர நிகழ்வு காலகாலத்திற்கும் நெஞ்சத்திர சொல்லிக்கொண்டிருக்கும். கல்லூரி மாணவியரைத் தங்களது சொந்த முன்னேற்றத்திற்கான குறுக்குவழி தேட்டைக்குப் பணயம் வைக்கத் துணிந்தவர்கள் பாதுகாக்கப்படும் கொடுமை நிகழ்ந்த காலமிது. மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடு என்று கேட்டால், கோரிக்கை வைத்துப் போராடும் மாணவர்களை இடைநீக்கம் செய்யும் சென்னை பல்கலை துணை வேந்தர் – பதிவாளர், அந்த அத்துமீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் போராளிகளை அடித்து நொறுக்கிச் சிறையில் அடைக்கும் காவல் துறை…
வெற்றி நடை போடுகிறதா அல்லது வெட்கித் தலை குனிந்து  நடக்கிறதா,தமிழகம்?
அண்டை மாநிலமான கேரளத்தில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில், தனியார் பள்ளிகளை விட்டு வெளியேறி, பல்லாயிரக்கணக்கில் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் நிறைகின்றனர். ஆனால், இங்கே? ஆசிரியர் நியமனங்கள் இல்லாமல், நசிந்து நலிந்து வீழ்ந்து கொண்டிருக்கும் கட்டிடங்களைப் பழுது பார்க்காமல் அரசுப் பள்ளிகளையும், மாநகராட்சி பள்ளிகளையும் மூடிக் கொண்டிருக்கும் ஆட்சி.
கல்வி, மருத்துவம் எனும் வாழ்க்கையின் இரண்டு முக்கிய விஷயங்களுக்காக மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி நடை போடுகிறதா தமிழகம், வெட்கித் தலை குனிந்து நடக்கிறதா?
 
போஸ்டர் ஆட்சி
கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரத்தில் நிவாரணப் பொருள்கள் கூட ஒழுங்காக விநியோகம் செய்யாத ஆட்சி இங்கே. 2015 பெருமழையில் தங்கள் ஆட்சியில் சென்னையும், தமிழகத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தில் பரிதவித்த கொடுமையை, அது ஏதோ வேறு ஒரு கட்சியின் ஆட்சியில் நடந்தது போலவும் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது போலவும் கூச்சமின்றி சொல்லிக் கொண்ட ஆட்சி தான் இங்கே. மக்கள் கஷ்டப்படும் போது அங்கே ஓடிச் சென்று தலையைக் காட்டாதவர்கள், தங்கள் முகத்தை மட்டும் அரசு நிவாரண மூட்டைகளில் பெரிதாக அச்சடித்து ஒட்டிக் கொள்ளும் அபத்தம் வேறெங்கு நிகழும்?
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பொறுப்புகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற விடாமல் தடுக்கப்பட்டு இழிவு படுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கையில் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் இவர்கள். மாற்றுத் திறனாளிகள் அடிப்படை சலுகை, உரிமைகளுக்காகப் போராட வீதிக்கு வருகையில் ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்கிய வள்ளல்கள் இவர்கள். வீதி நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலை சார்ந்த உழைப்பாளி மக்கள் கோரிக்கைகள் வைத்துத் தங்களது பண்பாட்டுத் தளத்தில் நின்று அமைதியான போராட்டம் நடத்துகையில் அராஜகமான முறையில் அதிகார வர்க்கத்தை ஏவி, சிறைப்பிடித்த பெருமையை நிலை நாட்டிய ஜனநாயக சிற்பிகள் இவர்கள்.
வெற்றி நடை போடுகிறதா தமிழகம், அல்லது, வெட்கித் தலைகுனிகிறதா?
 
அடகு வைத்தவர்களா ஆளத் துடிப்பவர்கள்?
ஆனால், இதெல்லாம் வேறு யாரோ ஆட்சியில் இருக்கும்போது நடந்தவை போல், அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு, மீண்டும் ‘எங்களையே தேர்ந்தெடுங்கள்’ என்று வாக்கு கேட்டு வரும் துணிச்சல் இருக்கிறது அவர்களுக்கு. 2016 செப்டம்பர் மாத இறுதியிலிருந்து டிசம்பர் 6 வரை நடந்தது என்ன, அதன் பிறகு ஜனவரி வரை நடந்தது என்ன, அதற்கும் பிறகு நடந்து கொண்டிருப்பது என்னென்ன….. தங்களுக்குள் பரஸ்பரம் ஒரே ஆட்சியில் உண்மையாக நடந்து கொள்ளாதவர்கள், வெளிப்படைத் தன்மை அற்றவர்கள், மக்களுக்கு எப்படி நாணயமான ஆட்சியை வழங்க முடியும்?
ஊரடங்கு காலத்தில் ஒட்டு மொத்த தேசத்திலும், பல கோடி பேர் வேலை இழந்தனர். வருவாய் இழந்தன பல லட்சம் குடும்பங்கள். 2016 பணமதிப்பு நீக்க நடவடிக்கையிலும், சீரற்ற முறையில் நடைமுறைக்கு எடுத்துவரப்பட்ட ஜி எஸ் டி வரி விதிப்பினாலும் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுத்துறைகளைக் கூவி விற்கிறது மத்தியிலுள்ள அரசு. இவற்றின் நேரடி பாதிப்பில் தமிழக மக்களும் படாத பாடு படுகின்றனர். சமூக நீதி கேள்விக்குறியாகி நிற்கிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜகவிற்கே விசுவாசம் காட்டி வரும் தமிழக ஆட்சியாளர்கள், தங்கள் கட்சியின் நலனைக் கூட அடகு வைத்துவிட்ட நிலையில் தமிழக நலனை இவர்களால் எப்படி காப்பாற்ற முடியும்?
செய்ய வேண்டியது என்ன ?
 
ஆனாலும் வெற்றி நடை போடும் தமிழகமே என்று எல்லாத் திசைகளிலும் முழக்கம் எழுப்பப்படுகிறது.
இந்தப் பெருங்கூச்சல், ஆர்ப்பாட்ட அமர்க்களத்தின் ஊடே, உண்மையான மக்கள் நலன் முன்னெடுத்துக் குரல் எழுப்பும் கடமையை இடது சாரி, ஜனநாயக சக்திகள் ஆற்றிக்கொண்டிருக்கின்றன.தமிழகம் மாற்றத்தைக் கோருகிறது என்று அதன் உள்ளார்ந்த விருப்பத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர். மக்களுக்கான அடிப்படை வசதிகள், ஒழுங்கான சாலைகள், பராமரிக்கப்படும் நீர்நிலைகள், நீர் தேக்கங்கள், புதிய தொழில்கள், பன்மடங்கு பெருக வேண்டிய வேலை வாய்ப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னுரிமை, சமூக பாதுகாப்பு, மக்களது அடிப்படை ஜனநாயக உரிமைகள் தக்கவைத்தல் இவற்றோடு கல்வி, சுகாதாரம் மேம்படுத்தப்படும் திசையில் ஏராளமான விஷயங்கள் செய்து முடிக்கப்பட வேண்டி இருக்கின்றன.
அதை உறுதி செய்யவேண்டுமானால், மக்கள் விரோத பாஜகவோடு அணி சேர்ந்திருக்கும் அஇஅதிமுக கூட்டணியைத் தமிழக வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டியது இன்றியமையாததாகிறது.
அதை நோக்கிய திசையில், மாற்றத்திற்கான வழியில், இடது சாரி, ஜனநாயக சக்திகள் ஆதரவோடு தேர்தல் களம் காணும் திமுக கூட்டணி வெற்றி என்பது முக்கியமானதாகிறது. நம்பிக்கை நடை போடட்டும் தமிழகம்!

News

Read Previous

கனவு நனவாக

Read Next

அடையார் குராஸானி பீர் பள்ளிவாசல் – அழைப்பிதழ்

Leave a Reply

Your email address will not be published.