கனவு நனவாக

Vinkmag ad

 

  1. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர்

 

கனவு நனவாக

சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது என் நெடு நாள் கனவு. வருகிற வருவாயில் இந்த வாடகை வீட்டையே சமாளிக்க முடியவில்லை.. சம்பள உயர்வையும் ப்ரோமோஷனையும் எதிர்பார்த்தே காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கனவு மட்டும் மனதில் அப்படியே இருக்கிறது…

பல திறமைசாலிகளை நிர்வகிக்க கூடிய சிறந்த பதவியில் இருக்க வேண்டும் என்பது என் சிறு வயது முதல் ஆசை. எல்லா வகையிலும் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. ஆனால் வெற்றி தான் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது…

உலகமெல்லாம் சுற்றி பார்த்து என் அனுபவங்களை நேர்த்தியான தொடராக எழுத வேண்டும் என்பது என் இலட்சியம். அன்றாட அலுவலே நேரத்தையும் சக்தியையும் எடுத்து விட அதற்கெல்லாம் காலம் வருமா என்பதே பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது…

இப்படி தங்கள் இலக்குகளுக்கும் கனவுகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் ஏன் என் விருப்பத்தை அடைய என்னால் முடியவில்லை. ஏன் என் சக்திக்கு அப்பாற்பட்டதாக எதுவும் இருக்கிறது என தவிக்காதவர்களே இல்லை எனலாம்.

உண்மையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை உங்கள் ஆழ்மனதிடம் சொல்லுங்கள். அது உங்களை அதற்கான பாதையில் வழிகாட்டி உங்கள் கனவை நனவாக்கும். உங்கள் மூளையின் ஒரு பகுதியில் இருக்கும் reticular activating system உங்கள் எண்ணங்களை உங்கள் விருப்பங்களை அடையக் கூடிய சாத்தியங்களை தரும் என்கிறது ஆழ்மன இயல்.

ஆனால் பெரும்பாலும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதும், வரலாறு படைப்பதும் வாழ்நாள் சாதனை புரிவதும் ஒரு சிலருக்கு மட்டும் தானே சாத்தியமாக இருக்கிறது.. மற்ற எல்லோரும் கனவு கனவாகவே இருக்க அதற்கு சற்றும் பொருந்தாத நிஜங்களை, தங்கள் சூழல்களை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில் தானே இருக்கிறார்கள்… ‘எதுவும் நம் கையில் இல்லை. ஏதோ இது தான் நமக்கு வாய்த்தது என்று வாழ்ந்து கொண்டு போக வேண்டியது தான்’. இப்படி தான் பலருக்கும் சலிப்பும் இயலாமையுமாக தோன்றும்.

அதுவும் பல நேரங்களில் இதோ கேட்டது கிடைத்து விட்டது.. வெற்றியின் எல்லையை தொட்டு விட்டோம் என நினைக்கும் போது அல்லது அப்போது தான் வெற்றிக் கோட்டை தொட்டு தன்னை ஆசுவாசப் படுத்தும் போது, எங்கிருந்தாவது ஏதாவது ஒரு தடங்கள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டு ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்தி விட்டு சென்று விடும். ஆசைகளும் குறித்த இலக்கும்  நிராசசையாகி விட, தனக்கு லக் இல்லை என மனம் புலம்ப, வாழ்க்கையே ஸ்தம்பித்து போனதாக ஆற்றாமையாக இருக்கும்.

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா… உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் எது உங்கள் விருப்பம் என்று உங்கள் மனதில்(conscious mind) போட்டாலும் உங்கள் மனது வெறும் goal setter ஆக இருக்க உங்கள் ஆழ்மனது (unconscious mind) தான் அதை உங்களுக்கு நிறைவேற்றி தரும் goal getter ஆக இருக்கிறது.

அதனால் நீங்கள் எதை அடைய வேண்டுமென்று விரும்பினாலும் அதை நீங்கள் அடைய செய்வதற்கு உங்கள் ஆழ்மனது தயாராக இல்லையென்றால் உங்கள் கனவு நனவாகுவது என்பது ஒரு காணல் நீராகவே தான் இருக்கும்.

அதாவது 95சதவீதம் ஒருவருடைய செய்கைகள் அவருடைய ஆழ்மனதையே சார்ந்துள்ளது. அந்த ஆழ்மனது மிக ஆற்றல் வாய்ந்தது எதையும் சாதிக்க கூடிய வல்லமை வாய்ந்தது என்றாலும் அதன் ஆற்றல் வெளிப்படுவது என்பது தன்னால் என்ன செய்ய முடியும் தன் ஆற்றல் எந்த அளவு என்னும் ஒருவருடைய நம்பிக்கையையே சார்ந்துள்ளது.

பெரும்பாலும் பலரும் தங்கள் ஆழ்மனதின் ஆற்றலை ஆறியாமல் அதன் சக்தியை புரியாமல் தங்களுக்கு தானே வரையறுத்துக் கொண்ட இல்லூஷனில்(illusion) ஏதோ ஒரு தோல்வி தந்த எதிர்மறை எண்ணத்தில் தன்னால் இவ்வளவு தான் முடியும் என தன்னைத் தானே சுருக்கிக் கொள்வார்கள். உன்னால் இவ்வளவுதான் முடியும் என அதுவரை தன் அனுபவம் சொல்லித் தந்ததையும் தனக்குள் சுற்றம் சூழல் நட்பால் புகுத்தப் பட்டதையும் அது தான் ரியாலிடி என நம்பத் தொடங்கி விடுவார்கள்.

உண்மையில் உங்களுக்கு ஒன்றில் விருப்பம் இருக்கிறது என்றால் உதாரணமாக நீங்கள் பெரும் தொழிலதிபராக ஆக வேண்டுமென விரும்பினால் உங்களிடம் அதற்கான திறமை இருக்கிறது என்றே அர்த்தம். அந்த இலக்கை உங்களால் அடைய முடியவில்லை என்றால் ஏதோ உங்கள் எண்ணத்தில் கலப்படம் இருக்கிறது, உங்களையுமறியாமல ஏதோ ஒரு பயம் அல்லது புகுத்தப்பட்ட எதிர்மறை எண்ணம் உங்கள் இலக்கை நீங்கள் அடைய விடாமல் தடுக்கிறது. என புரிந்து கொண்டு அதை சீர் செய்ய முயற்சி செய்யுங்கள்.

அந்த சிறு பையனுக்கு படிப்பில் சரியான மதிபெண் தன்னால் வாங்க முடியவில்லை என்பது பெரும் கவலையாக இருக்கிறது. மற்ற மாணவர்கள் எல்லோரும் நல்ல மதிப்பெண் வாங்கி தன்னம்பிக்கையோடு தங்கள் ஆசிரியர்களிடம் நெருங்கிப் பழக அவன் மட்டும் எப்போதும் ஏதோ ஒரு தோல்வி மனப்பான்மையில் இயலாமையில் எல்லோரையும் விட்டு இன்னும் ஒதுங்கிக் கொள்கிறான்.

அதே நேரம் அவனுக்கு எப்போதும் ஆசிரியர்களைப் பார்த்தால் திர்ல்லிங்காக, மகிழ்ச்சியாக அது போல் தானும் ஒரு ஆசிரியையாக வர வேண்டுமென ஆவலாக இருக்கிறது. ஆனால் அவர்களுடன் நெருங்கிப் பழகக் கூட தன்னால் முடியவில்லையே தன்னால் எங்கே ஆசிரியையாக வர முடியுமென நினைத்து தனக்குள்ளேயே சுருங்கிப் போகிறான்.

ஒருநாள் அவன் பள்ளி மதிய உணவு இடைவேளையின்போது அருகில் யாருமில்லை என்ற எண்ணத்தில் ஏதோ தனக்கு பிடித்த ஒரு பாடலை சற்று உரக்கப் பாட அவன் ஆசிரியை காதில் அதில் விழுகிறது. அவர் அன்போடு அந்த பையனை அனுகி அவனை மீண்டும் பாட சொல்லிக் கேட்க அவன் சற்றே வெட்கத்துடன் பாடுகிறான்.

திரைப் படங்களில் வருவது போல் அவன் பாடும் குரல் கேட்டு மற்ற மாணவர்கள் அங்கு கூடி விட அவன் பாடல் அந்த பள்ளியில் பிரசித்தமாகிறது. அவனுக்கு அது பல நண்பர்களைத் தேடி தர அவன் தன்னம்பிக்கை வளர்கிறது. எல்லோருடனும் சகஜமாக அவன் பேச ஆரம்பித்தவுடன் தான் அவன் ஒன்றைக் கவனிக்கிறான்.. படிப்பிலும் அவன் அதிகமாக மார்க் வாங்கி இருக்கிறான் என்பதை அவன் உணர்கிறான்.

பின் பாடலை தன்னுடைய பொழுது போக்காக வைத்துக் கொண்டு படிப்பில் முழு கவனம் செலுத்த அதில் சிறந்த மதிப்பெண் எடுக்கத் தொடங்கும் அவனுடைய ஆசிரியர் கனவும் நாளடைவில் நனவாகிறது.

அப்போது தான் அவனுக்கு ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் தோல்வி அடையலாம். ஆனால் தோல்வி மனப்பான்மை அடையக் கூடாது. ஏனென்றால் தோல்வியை அடுத்த முயற்சியில் கடந்து விடலாம். ஆனால் தோல்வி மனப்பான்மை ஆழ்மனதில் இறங்க அது தொடர் தோல்வியை விதைத்து விடும்.

சிறுவயதில் அவனுக்கு படிப்பில் கிடைத்த தோல்வி, தோல்விமனப்பான்மையாக உருவாகியதால் தான், அதை உடனே சீர் செய்ய முயலாததால் தான் தன்னால் தொடர்ந்து எதிலும் முன்னேற முடியாமல் இருந்தது. பின் வேறு துறை என்றாலும் அதில் கிடைத்த வெற்றி, நேர்மறை மனப்பான்மையை தர தன்னால் படிப்பிலும் வெற்றி பெற முடிந்தது என்பதை அவன் உணர்கிறான்.

பின்னாட்களில் அவன் தன் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை திறந்து பாடங்கள் எடுப்பதற்கு முன்னால் தன் கதையையே ஒரு முக்கியமான பாடமாக சொல்லிக் காட்டுகிறான். அவனுடைய வார்த்தைகளும் வாழ்க்கையும் இன்று பல வெற்றியாளர்களை மகிழ்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாளை உங்களது வாழ்க்கையும்!

 

 

 

 

News

Read Previous

விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்

Read Next

நம்பிக்கை நடை போடட்டும் தமிழகம் !

Leave a Reply

Your email address will not be published.