நகரங்கள் மூச்சுவிட வேண்டுமானால்..

Vinkmag ad

அறிவியல் கதிர்
                                                                   நகரங்கள் மூச்சுவிட வேண்டுமானால்..
                                                                             டீசல் கார்கள் வேண்டாம்
                                                                                பேராசிரியர் கே. ராஜு
     உலகலேயே தில்லிதான் மிகவும் மாசடைந்த நகரம் என்ற செய்தி வெளிவந்தபிறகு, உச்சநீதிமன்றமும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தில்லி அரசும் அந்த அவப்பெயரிலிருந்து விடுபடுவது எப்படி என யோசித்து செயலில் இறங்கின. கடந்த சில ஆண்டுகளில் தில்லி மாநகர மாசுகளின் அளவு அபாயகரமான எல்லையைத் தொட்டதற்குக் காரணம் டீசல் வாகனங்கள்தாம் என்ற முடிவிற்கு அவர்கள் வந்தனர். பல்வேறு அமைப்புகள் தொடுத்த வழக்குகளைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம் எஞ்சின் அளவு 2000 சிசிக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களின் பதிவை நிறுத்த வேண்டும் என்றும் தில்லி வழியாகச் சென்று கொண்டிருந்த டீசல் சரக்கு லாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE), தில்லி அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் டீசல் வாகனங்களின் காரணமாக காற்று மண்டலம் மாசுபடுபவதற்கு எதிராகப் பல ஆண்டுகளாகத் தம் குரலை எழுப்பி வருகின்றன. 2.5 மைக்ரான்கள் (ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி) அளவுக்குக் கீழ் உள்ள மிகச் சிறிய துகள்கள் மற்றும் நைட்ரஸ் ஆக்சைட் வெளியீடுகள் டீசல் வாகனங்களுக்கு மிக அதிகம் என்பதை அவை சுட்டிக்காட்டி வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டில் இந்த வெளியீடுகளை மிக முக்கியமான புற்றுநோய்க் காரணி என வரையறுத்துள்ளது. உலகம் முழுவதும் மரணங்களும் மூச்சுக்குழல் சம்பந்தமான நோய்களும் அதிகரித்துள்ளதற்கு டீசல் கார்களே பிரதான காரணம் என்பது தெரியவந்துள்ளது. டீசல் வாகனங்கள் பற்றி உலகம் முழுதும் எழுந்துள்ள கவலையின் ஒரு பகுதியாகவே தில்லியின் காற்று மண்டல மாசுபாட்டினை நாம் பார்க்க வேண்டும். டீசல் தொழில்நுட்பத்திலேயே சில பிரச்சனைகள் இருப்பதை உலக அனுபவம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுகளில் தனியார் வாகனங்களுக்கு டீசலை அனுமதிப்பது குறித்து உலகின் பல்வேறு பகுதிகளில்  மறுபரிசீலனை செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து நாமும் அந்த சோதனையில் இறங்க வேண்டியுள்ளது. இந்தியாவில்  மக்களின் போக்குவரத்திற்கும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படும் டீசலின் விலையைக் குறைவாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதெனில், தனியார் டீசல் கார்களை ஏன் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. முன்பெல்லாம்  கார்களைத் தயாரித்த தனியார் கம்பெனிகள் பெட்ரோல் கார்களைத்தான் தயாரித்து வந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன் தில்லியிலும் பிற நகரங்களிலும் சில தனியார் டீசல் கார்களே ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் தனியார் டீசல் கார்கள் பரவலாக பெட்ரோல் வண்டிகளின் இடத்தைப் பிடித்தது மட்டுமல்ல, பெரிய எஸ்யுவி வாகனங்களும் தனியார் கார்களும் டீசலையே பயன்படுத்தும் நிலை தோன்றிவிட்டது. டீசல் வாகனங்களைப் பொதுப் பயன்பாட்டிற்கு மட்டும் என்று கட்டுப்படுத்தாமல் டீசலின் குறைந்த விலையைப் பயன்படுத்திக் கொண்டு வசதி படைத்தவர்கள் டீசல் வாகனங்களை வாங்குமாறு ஊக்குவிக்கப்பட்டனர். முன்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு பொதுப் போக்குவரத்துக்கு சிஎன்ஜியை (compressed natural gas) எரிபொருளாகப் பயன்படுத்துமாறு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து காற்று மண்டலத்தின் தரம் உயர்ந்தது. ஆனால் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாததால், நிலைமை சில ஆண்டுகளில் மிகவும் மோசமானது. தில்லி அரசு தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தாண்டி வாகனங்களிலிருந்து வெளியிடப்படும் மாசுகள் தொடர்பாக சரியான அளவீடுகளை உருவாக்க வேண்டியுள்ளது. தனியார் டீசல் கார்களின் பயன்பாட்டைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த வேண்டும். குறைவான கட்டணத்தில் சிறப்பான பொதுப்போக்குவரத்து வசதிகளை மையமாகக் கொண்ட கொள்கைகளே இன்று தேவை.  மக்களின் உடல்நலனில் அக்கறையே மத்திய மாநில அரசுகளின் பிரதானக் குறிக்கோளாக அமைந்தால்தான் இதெல்லாம் சாத்தியமாகும்.
(உதவிய கட்டுரை : 2015  டிசம்பர் 21-27 தேதியிட்ட பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பிரபிர் புர்காயஸ்தா எழுதியது).

News

Read Previous

சித்த மருத்துவ குறிப்புகள் !!!

Read Next

உலகாள்வோம் உயிர்த் தமிழால்

Leave a Reply

Your email address will not be published.