தூக்கத்தை விட தொழுகை மேலானது

Vinkmag ad

தூக்கத்தை விட தொழுகை மேலானது
—————————————-

அதிகாலை நேரத்தில் எங்கள் ஊர் பள்ளிவாசல் ஒலிபெருக்கி எழுப்பும்

“தூக்கத்தைவிட தொழுகை மேலானது எனவே தொழுகைக்கு விரைந்து வாருங்கள்” என அறிவிப்பு மதங்களை கடந்து அனைத்து ஊர் மக்களும் கேட்கும் முதல் குரல்.

பள்ளிவாசல் ஊரின் பிரதான அடையாளம். ஊருக்கு ஒங்ரு கிலோ மீட்டர் தள்ளி ரஸ்தா செல்வதால் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் நாங்கள் ஊரை வாஞ்சையோடு பார்க்கும் போது தெரிவது பள்ளிவாசல் கோபுரமும் அதில் இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு ரேடியோ குழாய்களும்.

பள்ளிவாசல் ஊரின் தென்பகுதியில் கிழக்கு நோக்கி இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருக்கும்.
நுழைந்தவுடன் வலது புறம் பாடசாலை , நடுவே தொழுகை கூடம் , வடமேற்கில் அகழி என்ற தெப்பம் இருக்கும். வறட்சியான காலங்களில் கூட தெப்பம் நிறைந்த நிலையில் இருக்கும்.

தொழுகைக்கு முன் தெப்பம் சென்று கை கால் சுத்தம் செய்து தொழுகை கூடம் செல்வர்.

உள்ளே வட கிழக்கில் உள்ள வீட்டில் அசரத் இருப்பார். என் சிறு வயதில் குலாம் மாமு , புகாரி அண்ணன் இருப்பார்கள்.

காலையில் யாராவது எழுந்தால் இன்னும் வாங்கு சொல்லவில்லை படு என்பார்கள். அந்த அளவுக்கு ஊரின் எழுப்புதல் அடையாளம் பள்ளிவாசல்.

சுப்ஹுத் தொழுகை மற்றும் ரம்ஜான் ஸகர் உணவுக்கு பள்ளிவாசல் சார்பில் ஒருவர் வீடாக சென்று அனைவரையும் எழுப்புவார்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளான

1. கலிமா ( இறை விசுவாசம்)

2. ஐந்து நேர தொழுகை

3. ரமலான் நோன்பு

4. ஸகாத் ( ஏழைகளுக்கு உதவி)

5. ஹஜ் பயணம்

ஆகியவற்றை நிறைவேற்ற பாலமாக எங்கள் ஊர் இஸ்லாமிய அன்பர்களுக்கு பள்ளிவாசல் இருந்து வருகிறது என்றால் மிகையாகாது.

வருடத்தில் ரம்ஜான் மாதம் 30 நாளும் எங்களுக்கு வரப்பிரசாதம். காரணம் பள்ளிவாசல் வட மேற்கில் இரண்டு பெரிய அண்டாவில் நோன்பு கஞ்சி வைத்து மாலை நான்கு மணிக்கு நகரம் அடித்தவுடன் ஊருக்கே வழங்குவர். நன்னா சீனிமுகமது அவர்கள் தான் பிரதான நாயகர்..

சுற்று வட்டார பகுதிகளில் எங்கள் கீழச்சிறுபோது நோன்பு கஞ்சி தான் சிறப்பாக இருக்கும். மற்ற ஊர்களில் உப்பு சுவை எங்கள் ஊரில் இனிப்பு சுவை.

திரு ஷேக் முகமது அவர்கள் பாட்டு கச்சேரி 1980 களில் பிரபலம். அப்போது எங்கள் ஊரிலும் ரம்ஜான் அன்று பள்ளிவாசல் முன்பு நடந்தது.

திரைகடலோடி திரவியம் தேடு என்ற வகையில் எங்கள் கிராம இஸ்லாமிய சகோதர மற்றும் பெரியோர் அரபு நாடுகளில் பணிபுந்தாலும் ரம்ஜான் அன்று ஊரில் சங்கமமாகி விடுவார்கள்.

நாளை மற்றும் நாளை மறுநாள் ஊரின் பள்ளிவாசல் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும்.

அன்பு

கருணை

ஈகை

ஆகியவற்றை மக்களுக்கு போதிக்கும் இரண்டாம் பள்ளிக்கூடமான எங்கள் ஊர் பள்ளிவாசலை தொழுவதோடு

ஈகை இசைபட வாழ்தல் என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத பெருநாள் ரம்ஜான் தினத்தை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள், பெரியோர் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.திருநாகலிங்க பாண்டியன்

கீழச்சிறுபோது.

News

Read Previous

வெந்தயத்தில் டீ

Read Next

நோன்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *